Published:Updated:

இந்த 5 பெண் சி.இ.ஓக்களை தெரியுமா உங்களுக்கு?

விகடன் விமர்சனக்குழு
இந்த 5 பெண் சி.இ.ஓக்களை தெரியுமா உங்களுக்கு?
இந்த 5 பெண் சி.இ.ஓக்களை தெரியுமா உங்களுக்கு?
இந்த 5 பெண் சி.இ.ஓக்களை தெரியுமா உங்களுக்கு?
 
ஏக்தா கபூர் - ஜாய்ன்ட் டைரக்டர் (பாலாஜி டெலிஃபிலிம்ஸ்
இன்று வெவ்வேறு தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் முக்கால்வாசி டப்பிங் சீரியல்கள், ஏக்தாகபூர் தயாரித்தவைதான். அவருடைய பாலாஜி டெலிஃபிலிம்ஸ்தான், இந்தியாவின் நம்பர் ஒன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனம். கூடவே, எண்ணற்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். 'இந்தியத் தொலைக்காட்சியின் ராணி' என்று தாராளமாக ஏக்தாகபூருக்கு மகுடம் சூட்டலாம்.
 கடந்து இருபது ஆண்டுகளாக அந்த அளவுக்கு இந்தியத் தொலைக்காட்சிகளை தன் பிடிக்குள் வைத்திருக்கிறார். ஏக்தா கபூர்,  பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திராவின் மகள். தற்போது நாற்பது வயதாகும் இவர், தனது 18 வது வயதில் தொலைக்காட்சித் தொடர் தயாரிக்கும் வேலையில் இறங்கிவிட்டார். அவருடைய வரவுக்குப் பிறகுதான் இந்தியத் தொலைக்காட்சிகளின் முகமே மாறியது. கண்ணீர் விட்டுக் கதறுகிற குடும்ப மெகா சீரியல்களை இந்தியாவுக்குப் பரிசளித்தவர் இவரே! 'க்யூன்கி சாஸ் பி கபி பாகூ தீ' என்கிற இவருடைய சீரியல் 2000-ம் ஆண்டு தொடங்கி 2008 வரை டிஆர்பியில் நம்பர் ஒண்ணாகவே இருந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு மிகச்சிறிய சீரியல் பண்ணுகிற நிறுவனமாக விளையாட்டாக ஏக்தாகபூரால் தொடங்கப்பட்ட பாலாஜி டெலிபிலிம்ஸ், இன்று 25-க்கும் அதிகமான வெற்றிகரமான சீரியல்கள், பத்துக்கும் அதிகமான ரியாலிட்டி ஷோக்கள், நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் என பல ஆயிரம் கோடி நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. காரணம், எதற்கும் அஞ்சாத ஏக்தாகபூரின் உழைப்புதான்.  
ஆகன்ஷா பார்கவா - சிஇஓ (பிஎம் ரிலொகேஷன்ஸ்)
அப்பாவின் நிறுவனமான பிம்ஆரில் ஆகன்ஷா சேர்ந்தபோது, அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் இரண்டு கோடிதான். பிஎம்ஆர் நிறுவனம் முப்பதாண்டு கால பாரம்பர்யமிக்கது. ஆகன்ஷா தந்தையின் 30 ஆண்டு கால உழைப்பையும் கொண்டது. வீடு மாற்றுகிற அல்லது அலுவலகம் மாற்றுகிறவர்களுக்கு உதவுகிற நிறுவனம் அது. இதில் 2007-ல் ஆகன்ஷா இணைந்தார். எடுத்ததும் உச்சாணிக் கொம்பில் அமர்ந்து விடவில்லை. முதலில் சர்வதேச விற்பனையை பார்க்கிற மார்க்கெட்டிங் வேலை. உள்ளே நுழைந்ததும் ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் மாற்றிவிடவில்லை.
இந்த 5 பெண் சி.இ.ஓக்களை தெரியுமா உங்களுக்கு?
படிப்படியாக அலுவலகத்தில் எல்லா வேலைகளையும் பொறுப்போடு செய்ய ஆரம்பித்தார். அதுவரை இருந்த 'பிஎம் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்' என்கிற பெயரை 'பிஎம் ரிலொகேஷன்ஸ்' என காலத்திற்கேற்ப மாற்றியமைத்தார். தங்களுடைய அப்ரோச்களில் புது பாணி, வாடிக்கையாளர்களை ரீச் பண்ணுவதற்கான வித்தியாச விளம்பரங்கள் என அதுவரை நிறுவனம் இயங்கிய பாதையை தலைகீழாகத் திருப்பிவிட்டார். டெல்லியில் மட்டுமே இயங்கி வந்த இந்த நிறுவனத்துக்கு,  இந்தியாவில் 14 நகரங்களில் அலுவலகங்கள்  இருக்கின்றன. 40பேர் மட்டுமே வேலை பார்த்துக்கொண்டிருந்த நிறுவனத்தில் இன்று 450 பேர் வேலை பார்க்கிறார்கள். 31 வயதாகும் ஆகன்ஷாவை,  பிஸினஸ் டுடே 'சிறந்த பெண் தலைவர்' என்று 2015-ல் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது. இரண்டு கோடி ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்த நிறுவனத்தின் இன்றைய வருவாய் 46 கோடி. இதை சாத்தியமாக்கியவர் ஆகன்ஷா. 
ஜியா மோடி - மேனேஜிங் பார்ட்னர் ( ஏஇசட்பி அண்ட் பார்ட்னர்ஸ்)
இந்தியாவின் டாப்மோஸ்ட் பெண் வழக்கறிஞர் இவர்தான். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சட்ட ஆலோசனை வழங்குகிற நிறுவனம் ஏஇசட்பி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின்  மேனேஜிங் பார்ட்னர். 1984-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். முப்பது ஆண்டுகளில் இந்த நிறுவனத்தை,  சர்வதேச அளவில் தொழில் செய்துவரும் இந்தியத் தொழிலதிபர்களான சுனில் மிட்டல், குமார் மங்கலம் பிர்லா, அனில் அகர்வால் போன்றவர்களுக்கான சட்ட ஆலோசனை தரும் ஒன்றாக வளர்த்தெடுத்தவர் ஜியாதான்.
இந்த 5 பெண் சி.இ.ஓக்களை தெரியுமா உங்களுக்கு?
நிறுவனங்களை இணைப்பது, அது தொடர்பான ஆலோசனை என்றால் இந்தியத் தொழிலதிபர்களின் ஒரே சாய்ஸ் ஜியாதான். 59 வயதாகும் ஜியா,  மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞராக இருந்த சோலி சோராப்ஜி-யின் மகள். போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட,  '50 சக்தி வாய்ந்த பிஸினஸ் பெண்கள்'  பட்டியலில் இடம்பிடித்தவர் ஜியா.  ஒவ்வொரு பெண்ணுமே எல்லா இடங்களிலும் சக்தி வாய்ந்தவளாகத் திகழவேண்டும். ஏனென்றால் அது பணியிடத்திலும் வீட்டிலும் நிரந்தரமான நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும். "பெண்கள் இல்லாத அலுவலகம் என்பது தண்ணீர் இல்லாத செடியையும் சிறகில்லாத ஒரு பறவையையும் போன்றது'' என்பதுதான் ஜியாவின் கொள்கை. 
அருணா ஜெயந்தி - க்ளோபல் பிபிஓ ஹெட் ( கேப் ஜெமினி)
இவருடைய நிறுவனத்தில்,  இவருக்குக் கீழ் வேலை பார்க்கிறவர்களுடைய எண்ணிக்கை ஒரு லட்சம். மலைப்பாக இருக்கிறது இல்லையா... ? அருணாவுக்கு இதெல்லாம் ஜூஜூபி. இவர்களில் பாதிகூட இந்தியர்கள் கிடையாது. ஆனாலும், அத்தனை பேரையும் சிங்கிளாக சிங்கம்போல சமாளிக்கிறார். கேப் ஜெமினை நிறுவனத்தில் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் தன் திறமையால்,  உழைப்பால் டாப் மோஸ்ட் இடத்தை அடைந்தவர் அருணா. 4,600 கோடி ரூபாய் அளவுக்கான பிஸ்னஸ் விஷயங்களை அருணா கவனிக்கிறார்.  ஃபார்ச்சூன் இந்தியா நிறுவனம்,  2012-ல் வெளியிட்ட 'டாப் 50 சக்தி வாய்ந்த பிஸினஸ் பெண்கள்'  பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தவர்.
இந்த 5 பெண் சி.இ.ஓக்களை தெரியுமா உங்களுக்கு?
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கேப் ஜெமினி நிறுவனம், ஐடி துறையில் தனிப்பெரும் சக்தியாக விளங்குகிற ஒன்று.  2000-ம் ஆண்டு அருணா கேப்ஜெமினியில் வேலைக்குச் சேர்ந்தபோது,  சில நூறுகளாக இருந்த பிபிஓ பணியாளர் எண்ணிக்கை, இவருடைய வரவுக்குப் பிறகு நாற்பதாயிரமாக உயர்ந்தது. இந்தியாவில் இந்த நிறுவனத்தை வளர்த்ததில்,  அருணாவின் பங்கு மிகப் பெரியது. கேப் ஜெமினியில் இணைவதற்கு முன்பு ஐ.டி துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர். கணினிகள் இந்தியாவுக்குள் நுழைந்தபோதே அதைக் கற்றுக்கொண்டு அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தத் துறையில் கால் பதித்தவர். டிசிஎஸ், ஆப்டெக் என அவர் வேலை பார்க்காத பெரிய நிறுவனங்களே கிடையாது. 
மல்லிகா ஶ்ரீனிவாசன் - சிஇஓ ( டஃபே )
விவசாயிகளோடு தொடர்புடைய , அவர்களுக்கான விஷயங்களைத் தயார் பண்ணுகிற ஒரு நிறுவனத்தை வழிநடத்துவது என்பது, நகரத்திலேயே பிறந்து நகரத்திலேயே வளர்ந்த ஒருவருக்கு அத்தனை சுலபமல்ல. மல்லிகா ஶ்ரீனிவாசன் அதில் கில்லாடி. டிராக்டர் உற்பத்தி நிறுவனமான டஃபேயின் சிஇஓ இவர்.  2500 கோடி ரூபாய் நிறுவனம் ஒன்றைச் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால், நாம் நிறையவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
இந்த 5 பெண் சி.இ.ஓக்களை தெரியுமா உங்களுக்கு?
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவலிங்கத்துக்கு மகளாகப் பிறந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் மல்லிகா. அமெரிக்காவில் எம்பிஏ படித்துவிட்டு, திருமணம் செய்து கொண்டவர். 1986-ல் தன் தந்தையின் நிறுவனமான டஃபேயில் இணைந்தார். அப்போது 86 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிக்கொண்டிருந்த நிறுவனத்தில், மல்லிகா நுழைந்த நேரத்தில் எண்ணற்ற பிரச்னைகள். புதிய தொழில்நுட்பங்களின் வரவால் ஏராளமான நஷ்டங்கள். ஆனால் அதையெல்லாம் துணிவுடன் எதிர்கொண்டார் மல்லிகா. அக்காலக்கட்டத்திலேயே பல கோடி ரூபாய்களைச் செலவழித்து  புதிய தொழில்நுட்பங்களை, தங்களுடைய டிராக்டர்களிலும் விவசாயக் கருவிகளிலும் இணைக்க முனைந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இன்று இந்தியாவில் டிராக்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக டஃபே இருக்கிறது. அதற்குக் காரணம், மல்லிகாவின் துணிச்சலான முடிவுகள்தான். எண்ணற்ற விருதுகளை வென்ற இவர்,  2014-ல் பத்மஶ்ரீ கௌரவத்தையும் பெற்றவர். 
- வினோ