வெளியிடப்பட்ட நேரம்: 03:20 (23/08/2017)

கடைசி தொடர்பு:09:02 (23/08/2017)

'தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் போல வேறு யாரும் செயல்பட்டது கிடையாது' - பாக். அமைச்சர்!

பாகிஸ்தான் மந்திரி கவாஜா ஆசிப்

'தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்ததற்கு, 'தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் போரிட்டது போல, வேறு யாரும் போரிட்டது கிடையாது' என பாகிஸ்தான்  வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

தெற்காசியாவுக்கான புதிய கொள்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெளியிட்டார். அதில், தாலிபான் தீவிரவாதிகளை அழிக்கும் நோக்கில் கூடுதல் படைகளை ஆஃப்கானிஸ்தானுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டிருந்தது. மேலும் தாலிபான்கள், ஹக்கனி போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக உதவி செய்துவருகிறது. இதை, உடனடியாக பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தடை செய்யப்பட தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உதவி செய்துவந்தால், கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப், 'தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் போரிட்டது போல, வேறு யாரும் போரிட்டது கிடையாது' என்று கூறியுள்ளார். மேலும் , 'ஆஃப்கானிஸ்தானின் அமைதிதான் பாகிஸ்தானின் ஆசை' என்றும் கூறியுள்ளார்.