ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரால் கேன்சர் நோய்! 2,600 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் | Johnson & Johnson ordered to pay $417 million to woman for ovarian cancer

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (23/08/2017)

கடைசி தொடர்பு:19:35 (23/08/2017)

ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரால் கேன்சர் நோய்! 2,600 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகப் பெண் தொடர்ந்த வழக்கில் 2,600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஈவா எக்கேவார்ரியா. அவருக்கு வயது 63. கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நான் 11 வயது முதல் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் பயன்படுத்தி வருகிறேன். அதனால் எனக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதனால் இழப்பீடு வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 417 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அதன் இந்திய மதிப்பு 2,600 கோடி ரூபாய் ஆகும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று ஏற்கெனவே அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டால்கம் பவுடரைப் பிறப்புறுப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.