வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (26/08/2017)

கடைசி தொடர்பு:13:04 (26/08/2017)

அனல் கக்கும் பாலைவனத்தில் “மண் மூட்டை” வீடு கட்டும் பெண்... ஏன்?

கண்கள் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்யும். அந்த அனலில் கண்களைத் திறக்கவே முடியாதுதான். மீறிப் பார்த்தாலும் கூட, அது வெறும் கானல் நீராகத்தான் தெரியுமே தவிர பார்வையில் தெளிவிருக்காது. அத்தனை வெப்பம். அத்தனை அனல். அவ்வளவு வெயில். இது அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் மொஜாவ் (Mojave) பாலைவனம். கொஞ்ச நேரம்... அனல் கண்களுக்குப் பழகிவிடும். இப்போது கண்களை விரித்து, திறந்துப் பாருங்கள். ஒத்தையில் ஒரு பெண்மணி... என்ன செய்துகொண்டிருக்கிறார் அவர்?

பாலைவனத்தில் மண் வீடு கட்டும் பெண்

ஒரு நீளமான வெள்ளை நிற சாக்குப்பையை எடுக்கிறார். அதில் மண்ணை இட்டு நிரப்புகிறார். அந்தப் பையை தைக்கிறார். அதைக் கொண்டு போய் ஏற்கெனவே அடுக்கப்பட்டிருக்கும் பைகளுக்கு மேல் வைக்கிறார். அதன் மேல், ஒரு நீளமான வயரை ஒட்டுகிறார். பின்னர் மீண்டும் வேறு பையை எடுத்து அதே வேலைகளைச் செய்கிறார். இவர் கட்டிக் கொண்டிருக்கும் முறையின் பெயர் "சூப்பர் அடோப் " (Super Adobe). உலகில் உள்ள அனைவரும் தங்களுக்கான சொந்த வீட்டை தாங்களாகவே கட்டிக்கொண்டு வாழவேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கட்டட முறையை அறிமுகம் செய்தார் நதேர் கலீலி எனும் இரானிய - அமெரிக்க கட்டட கலைஞர். இது முழுக்க முழுக்க இயற்கைக்கு உகந்த கட்டடம். பூகம்பம், வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களை தாங்கி நிற்கக் கூடியது. அப்படி இயற்கையான முறையில், கலீலியிடம் படித்த முறையை வைத்துதான் இந்த வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறார் இந்தப் பெண்மணி. இந்தப் பெண்ணின் பெயர் லிண்ட்சே ஆண்டர்சன் (Lindsey Andersen). அவர், தான் கட்டும் கட்டடத்துக்கு வைத்திருக்கும் பெயர்  "வொண்டர் டூம் " (Wonder Dome).

பாலைவனத்தில் மண் வீடு கட்டும் பெண்

லிண்ட்சே அடிப்படையில் ஒரு கலைஞர். கலை மீது பேரன்பு, பெருங்காதலும் கொண்டவர். ஒரு நடிகையாக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக நியூயார்க்கிலும், லாஸ் ஏஞ்சலீஸிலும் பரபரப்பாகச் சுழன்று வேலை செய்துகொண்டிருந்தவர். அந்த நகரங்களில் வாழ... அல்ல பிழைக்க அதிகப்படியான பணம் அவருக்கு தேவைப்பட்டது. கலையை பேரன்போடு நேசித்தவருக்கு, அந்தக் கலையை மட்டுமே கொண்டு பணம் செய்யும் மனம் இல்லை. அதனால், அவர் அதைச் செய்யவில்லை. இருந்தும் அந்த நகரம் அவரிடம் கேட்டது பணத்தை மட்டுமே. தன் கலைத் தாகம் தீர்க்கும் வேலையை முடித்துவிட்டு கிடைக்கும் ஒவ்வொரு நொடியிலும் பார் டெண்டராக, ஹோட்டல் சப்ளையராக, வரவேற்பாளராக கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து அந்த நகர வாழ்வு கேட்ட பணத்தை சம்பாதித்துக் கொண்டேயிருந்தார். இந்தத் தேடல், கலை மீதான அவர் காதலை குறைக்கச் செய்தது. இதெல்லாம் நடக்க 15 வருடங்கள் ஆகிவிட்டன. அந்த பதினைந்து வருடங்களை அவர் திரும்பிப் பார்த்தபோது, பெரும் வெறுமை சூழ்ந்திருந்தது. கொஞ்சம் நிதானித்தார். கொஞ்சம் மெதுவாக நடந்தார். கொஞ்சம் உட்கார்ந்தார். நிறைய யோசித்தார்...

பாலைவனத்தில் மண் வீடு கட்டும் பெண்

“நாம் இங்கு எதை தேடி வந்தோம்? ஆனால் எதை தேடிப் போகிறோம்? நம் தேடல், நம் திருப்தி, நம் மகிழ்ச்சி, நம் கலை இங்கு இல்லை. அது இல்லாத இடத்தில் தொடர்ந்து இருந்து நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? இனியும் இந்த நகரம் எனக்கு வேண்டாம். இனியும் இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்.” இந்த முடிவை எடுத்த லிண்ட்சே அந்த நகரை விட்டுப் புறப்பட்டார். 

பாலைவனத்தில் மண் வீடு கட்டும் பெண்

தன்னிடமிருந்த அனைத்துப் பொருள்களையும் விற்று காசாக்கினார். அந்தக் காசைக் கொண்டு 1975-ம் வருட மாடல் வின்னிபேகோ எனும் மினி வேனை வாங்கினார். அதையே தன் வீடாக மாற்றி பயணிக்கத் தொடங்கினார். அந்தப் பயணத்தில் “சூப்பர் அடோப்” வீடுகளைப் பற்றி படித்தார். பயணம் தொடர்கிறது. கடுமையான பாலைவனத்தில் தனக்கு 5 ஏக்கர் நிலமாக இருப்பதாகவும், அங்கு யாரும், எதையும் செய்ய முடியாது என்பதாலும் அந்த நிலத்தை சொற்ப பணத்துக்கு லிண்ட்சேவுக்கு விற்கிறார் அவரின் நண்பர். லிண்ட்சே தனக்கான வாழ்வின் பாதை கிடைத்துவிட்டதாக உணர்கிறார். தன் கனவை, நனவாக்க வேலைகளைத் தொடங்குகிறார்.

பாலைவனத்தில் மண் வீடு கட்டும் பெண்

வொண்டர் டூம்களை கட்டத் தொடங்கியுள்ளார். இந்த டூம்கள் உலக கலைஞர்களுக்கானது. இங்கு வரும் கலைஞர்கள் இந்த டூம்களில் தங்கி கதை எழுதலாம், நடிப்புப் பழகலாம், அனிமேஷன் செய்யலாம், வரையலாம், சிலைகளை செதுக்கலாம்... இப்படியாக எந்த வேலையையும் செய்யலாம். பணம் இருப்பவர் பணம் கொடுக்கலாம். பணம் இல்லாதவர் அதற்கு ஈடாக ஏதேனும் பொருளையோ, சேவையையோ தரலாம். கலையை கலையாக மட்டுமே ரசிக்கலாம். 

பாலைவனத்தில் மண் வீடு கட்டும் பெண்

தன்னந்தனியாக லிண்ட்சே அந்த வெயிலில் ஆரம்பித்த இந்த வேலைக்கு இன்று உலகளவில் ஆதரவு கிடைத்துள்ளது. பலரும் லிண்ட்சேவை சந்திக்க  அந்தப் பாலைவனத்துக்குச் செல்கிறார்கள். லிண்ட்சேவோடு இணைந்து வேலைசெய்கிறார்கள். தான் வாழ ஆசைப்பட்ட வாழ்வை தன் செல்லப் பூனை "ஃப்ளாட் புஷ்"ஷோடு இணைந்து அத்தனை மகிழ்ச்சியாய், உண்மையாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார் லிண்ட்சே. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்