வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (27/08/2017)

கடைசி தொடர்பு:14:45 (27/08/2017)

பிரெய்லி புத்தகம் தெரியும்... காடு தெரியுமா!? - அமெரிக்கச் சிறுவனின் நச் ஐடியா

சில நிமிடங்கள் கண்களை மூடி உட்காருங்கள். சுற்றியிருக்கும் சத்தங்களை மட்டுமே கேளுங்கள். மெதுவாக எழுந்து நடக்க முயலுங்கள். சிரமமாகத் தானிருக்கும். இருந்தும் தொடர்ந்து முயன்று முன்னேறுங்கள். எதிர்வரும் பொருட்களை தொடுதலின் மூலம் உணருங்கள். சில நிமிடங்களை, சில மணி நேரங்களாக தொடர முயற்சியுங்கள். பெரும்பாலானவர்களால் முடியாது. ஆனால், பார்வையற்றவர்களின் உலகம் இப்படித் தானிருக்கும். 

பார்வையற்றவர்கள் உணரும் காடு

இது சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. சென்னை தான். பார்வையற்ற ஓர் இளம்பெண் சாலையைக் கடக்கிறார். பெரும்பாலான வண்டிகள் வேகத்தைக் குறைத்துவிட்டன. சாலையோரம் நிற்பவர்களின் அத்தனைக் கண்களும் அந்தப் பெண்ணின் கண்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அது ஒரு அரசு வாகனம். சாம்பல் நிற பொலீரோ. அவருக்கு என்ன அவசரம் என்று தெரியவில்லை. கண்மூடித்தனமான வேகத்தில் வந்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளைக் கண்ணை மூடிக் கொண்டுதான் வந்துக் கொண்டிருந்தாரோ என்று தெரியவில்லை. கண் பார்வையில்லாமல் வந்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அத்தனை வேகத்தில் நெருங்கியது பொலீரோ. ஒரு நொடி தான்... அந்தப் பெண்ணைத் தவிர அத்தனைப் பேரின் கண்களும் அந்த விபரீதத்தைப் பார்க்க கூடாது என்ற எண்ணத்தில் இறுக மூடிக் கொண்டன. அந்த நொடியில் அந்த மனிதனின் மனிதாபிமானமா அல்லது அந்த பொலீரோவின் "பொலீரோபிமானமா" என்று தெரியவில்லை. அந்த வண்டி சற்று வளைந்துச் சென்றது. அந்தப் பெண்ணின் அந்த அலுமினியக் குச்சியை உரசிக் கொண்டு சென்றது. அந்தப் பெண்ணின் உருண்டை முகம் ஒரு நொடி அத்தனை அச்சத்தை வெளிப்படுத்தியது. பலரும் அவர் அருகே ஓடிப்போனார்கள். அவரை ஆசுவாசப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால், அவர் அத்தனை அதிர்ச்சியடையவில்லை. மெல்லிய புன்சிரிப்போடு மெதுவாக நடக்கத் தொடங்கினார். தன் வாழ்க்கை அது தான் என்பது அவருக்குத் தெரியும். இதைப் பார்த்த நானும், நாங்களும் அதைக் கடந்தோம்.

பார்வையற்றவர்கள் உணரும் காடு

இப்படியான ஒரு சம்பவத்தை அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர்  பார்க்கிறான் 11 வயது சிறுவன் இவான் பர்னார்ட்.  அவனை பாதித்த அந்தச் சம்பவத்தின் பொருட்டு அவன் செய்த விஷயங்கள் இன்று உலக கவனத்தை ஈர்த்துள்ளது. 
ஜார்ஜியா மாகாணத்தில் ரோம் ( இத்தாலி ரோம் அல்ல )  என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு பார்வையற்றவர்கள் மரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மரங்களை, செடிகளை, கொடிகளை, இலைகளை உணரவும் ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு "ப்ரெய்ல் நேச்சுரல் ட்ரையல்" ( Braille Natural Trail ) என்று பெயர். 1967ல் அறிவியல் ஆசிரியர் பாப் லூயிஸ் என்பவரால் இது ஆரம்பிக்கப்பட்டது. ஒரு காட்டை ஒட்டியப் பகுதியில் கயிறு கட்டப்பட்டிருக்கும். அதைப் பிடித்தபடியே பார்வையற்றவர்கள் நடக்க வேண்டும். ஒரு மரத்தை அடைந்தபின் அங்கு ப்ரெய்லி மொழியில் எழுதப்பட்டிருக்கும் பலகையை அவர்கள் படிக்கலாம். அந்த மரம் குறித்த தகவல்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். மேலும், மரங்களைக் கட்டிப்பிடித்து அதை உணரலாம். எந்தத் தடைகளுமன்றி, தொந்தரவுகளுமன்றி அந்தக் காட்டில் இயற்கையோடு இயைந்தபடி அவர்கள் உலவலாம். இது தான் இதன் நோக்கம். ஆனால், இந்த முன்னெடுப்பு சரியான வெற்றியைத் தரவில்லை. 

பார்வையற்றவர்கள் உணரும் காடு

தன்னுடைய 11 ஆவது வயதில் இதைப் பார்த்த இவானுக்கு இது பெரும் கவலையைக் கொடுத்தது. பார்வையற்றவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்பினான் அவன். தன் பெற்றோரையும், நண்பர்களையும் கலந்தாலோசித்தான். அந்தப் பகுதியை சீரமைத்தான். புதிய கயிறுகளை வாங்கி அந்தப் பகுதியில் கட்டினான். ஆனால், இரண்டே நாள்கள்தான். ஒரு மர்மக் கும்பல் அந்தப் பகுதியை சூறையாடியது. அந்தக் கயிறுகளை திருடிக் கொண்டு போனார்கள். அங்கிருந்த பலகைகளை உடைத்துப் போட்டனர். கவலையில் கண்ணீர் விட்டு அழுதான் இவான். சிறுவன் தானே அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்க முடியவில்லை. பின்பு, சில நாள்களில் மீண்டும் அந்தப் பகுதியின் புனரமைப்பு வேலைகளைத் தொடங்கினான். 

பார்வையற்றவர்கள் உணரும் காடு

இவான் பர்னார்ட்

அந்தப் பகுதியில் இவானின் முயற்சி பெரிதாக பாராட்டப்பட்டது. பார்வையற்றவர்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களுக்கு அந்த இடம் ஒரு சொர்க்கமாக இருந்தது. இது தொடர்பாக www.braillenaturetrail.com எனும் வலைதளத்தை தொடங்கினான். உலகம் முழுக்க பார்வையற்றவர்களுக்காக இது போன்ற பூங்காக்களை அமைக்க வேண்டுமென்பது அவனின் எண்ணம். இன்று இவானுக்கு 19 வயது. இன்று உலகம் முழுக்க 6 கண்டங்களில், 35 நாடுகளில், 200 பிரெய்ல் பூங்காக்கள் இருக்கின்றன. 

பார்வையற்றவர்கள் உணரும் காடு

கருப்பைத் தவிர வேறு நிறத்தை அறிந்திராத ஒரு பெருங் கூட்டம், இந்தப் பூங்காக்களில் பச்சையை முகர ஆரம்பித்திருக்கிறார்கள்...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்