’டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிய ஹார்வி புயல்’ | Still powerful Hurricane Harvey slows after bashing into Texas

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (26/08/2017)

கடைசி தொடர்பு:00:11 (27/08/2017)

’டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிய ஹார்வி புயல்’

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைத் தாக்கிய ஹார்வி புயலால், பெரும் சேதம் ஏற்பட்டது. 

ஹார்வி புயல்


டெக்சாஸ் மாகாணத்தின் ராக்போர்ட் நகர் அருகில் கரையைக் கடந்த ஹார்வி புயலால் சுமார் 210 கி.மீ. (130 மைல்கள்) வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்தப் புயல் காரணமாக டெக்சாஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் ஏற்கெனவே 10 இன்ச் அளவுக்கு மழை பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்றுடன் மழைப்பொழிவும் இருந்ததால் பல இடங்களில் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் டெக்சாஸ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, ஹார்வி புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளாக ராக்போர்ட் நகரில் உள்ள மூன்றில் இரு பங்கு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹார்வி புயல் தற்போது வலுவிழந்து வந்தாலும், டெக்சாஸ் மாகாணத்தின் பல பகுதிகளில் வரும் புதன்கிழமை வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யும் பெரும்பாலான எண்ணெய் நிறுவனங்கள் மெக்சிகோ வளைகுடா பகுதியில் இருக்கின்றன. அந்தப் பகுதியில் ஹார்வி புயல் கோரத்தாண்டவம் ஆடி வருவதால் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் 4 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்படுகிறது. கடந்த 2005-ம் ஆண்டு 'வில்மா' புயலால் ஃபுளோரிடா மாகாணம் பலத்த சேதத்துக்கு உள்ளானது. அதன்பின் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாகியுள்ள இந்த 'ஹார்வி புயல்' மக்கள் அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close