Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்ரம்ப்புக்கு எதிராகக் களமிறங்கும் ஆயிரம் கோடி படை வீரர்கள்..!

ஹியூஸ்டன் ட்ரம்ப்பை பாதிக்கவில்லை

வலியும், வேதனையும், இழப்பும், தவிப்பும் ஒன்றுதான்.  சென்னையாக இருந்தாலும் சரி. அது  ஹியூஸ்டனாக இருந்தாலும் சரி... அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரம் வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இது எதுவும் டொனால்ட் ட்ரம்ப்பை பாதிக்கப் போவதில்லை. இது மட்டுமல்ல, இதைவிடப் பெரிய இயற்கை அழிவுகள் ஏற்பட்டாலும் அது அவரை பாதிக்கப்போவதில்லை. இந்த அழிவுகளெல்லாம் இயற்கையின் இயல்பினால் மட்டுமே ஏற்பட்டவை அல்ல, மனிதர்கள் இயற்கை மீது தொடுத்த போருக்கான இயற்கையின் பதில்தான் இது என்ற கருத்தில் அவருக்கு உடன்பாடில்லை. இது என் கற்பனை அல்ல. 2015ம் ஆண்டு “பருவநிலை மாற்றம்” குறித்த பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா விலகும் என்ற முடிவினை  சமீபத்தில் அறிவித்த போது ட்ரம்ப் சொன்னது இது தான்...

“மனிதர்களும் வளர்ச்சித் திட்டங்களும்தான் இந்த இயற்கை சீரழிவுகளுக்குக் காரணம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் என்றும் வளர்ச்சிக்கானவன். இயற்கையைக் காப்போம், உலக அழிவைத் தடுப்போம் என்றெல்லாம் சொல்லும் இந்த ஒப்பந்தத்தில் இருந்தால் நம்மால் புது நகரங்களையும், தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியாது. பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதனால், உலகின் ஆகப்பெரும் வல்லரசாகும் கனவோடு பயணிக்கும் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது..."

முதலில் இந்த பாரீஸ் ஒப்பந்தம் என்பது என்ன என்பதை புரிந்துக் கொள்ளலாம். பூமி தொடர்ந்து வெப்பமாகி வருகிறது. இதனால் பலவித பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது மனிதர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கின்றது. இதிலிருந்து நம் பூமியை மீட்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்று கூடி பாரீஸில் ஒரு ஒப்பந்தம் போட்டன. அதாவது, வரும் 2025ற்குள் பூமி வெப்பத்திற்குக் காரணமாக இருக்கும் கார்பன் வெளியேற்றத்தைப் பெருமளவு குறைக்க வேண்டுமென்பதே அதன் சாராம்சம். அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா அதில் கையெழுத்திட்டார். இந்தியா உட்பட 190 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அனைத்து நாடுகளுமே அந்தக் கனவை அடையும் திட்டங்களை அமல்படுத்தத் தொடங்கின. 

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய ட்ரம்ப்

இந்தியா பல கோடி மரங்களை நட்டது. ஒபாமா “க்ளீன் பவர் ப்ளான்” (Clean Power Plan) எனும் திட்டத்தைக் கொண்டுவந்தார். இதன்படி, நிலக்கரிச் சுரங்கங்கள் படிப்படியாகக் குறைக்கப்படும், நிலக்கரி மற்றும் எரிவாயுக்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் அளவு குறைக்கப்படும். இதனை செய்வதன் மூலம் 2025ற்குள் 650 மெட்ரிக் டன் அளவிற்கான கார்பன் வெளியேற்றம் தடுக்கப்படும்.  ஒபாமாவின் " க்ளீன் பவர் ப்ளான் " மறுசீரமைக்கப்படும், அதில் நிறைய கோளாறுகள் இருக்கின்றன என்று சொன்ன ட்ரம்ப், 

“நாம் இன்னும் நிறைய நிலக்கரிகளைத் தோண்டி எடுக்கவிருக்கிறோம். அதுவும் சுத்தமான நிலக்கரிகளை எடுக்கப்போகிறோம். இறந்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் நிலக்கரி தொழிற்சாலைகளை மீண்டும் உயிர்ப்பெறச் செய்வோம். அதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்." என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

இப்படியாக, தொடர்ந்து இயற்கைக்கு எதிரான பெரும் யுத்தத்தை நடத்தி வருகிறார் டொனால்ட் ட்ரம்ப். அவரின் இந்த நடவடிக்கைகளுக்கு, அமெரிக்கர்கள் கடுமையான எதிர்ப்புகளைப் பதிந்து வருகிறார்கள். அந்த எதிர்ப்புகள் வெறும் சடங்காக மட்டுமல்லாமல், ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று சிந்தித்த சிலர் ட்ரம்ப்பிற்கு எதிரான புது ஆயுதத்தை எடுத்துள்ளனர்.

ட்ரம்ப்பிற்கு எதிரான இந்த யுத்தத்தில் அவரை எதிர்க்கப் போவது ஆயிரம் கோடி மரங்கள். பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர். டான் பிரைஸ் “ட்ரம்ப் ஃபாரஸ்ட்” (Trump Forest) பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம், மக்களை ஒன்றிணைத்து 1 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பில், ஆயிரம் கோடி மரங்களை நட முடிவு செய்துள்ளார். இதன் மூலம் ட்ரம்ப் இயற்கைக்கு எதிராக நடத்தும் யுத்தத்திற்கு அகிம்சை வழியில் பதிலடி கொடுக்க முடியுமென்று நம்புகின்றனர். இந்தத் திட்டத்தின் கடைசி மரத்தை வெள்ளை மாளிகைக்கு முன்னர் நடவும் திட்டமிட்டுள்ளனர். 

"இது ஒரு பெரும் முயற்சி. இது வெற்றி பெறுமா, பெறாதா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், தான் செய்வது முற்றிலும் தவறு என்பதை ட்ரம்ப் உணர வேண்டும். அவர் இயற்கைக்கு எதிராக நடத்தும் யுத்தத்திற்கு, மரங்களை படை வீரர்களாகக் கொண்டு நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைகள் அவரின் சொத்து மதிப்பை வேண்டுமானால் காப்பாற்றலாம். ஆனால், அவரின் வாரிசுகளையும் இது பாதிக்கும் என்பதை அவர் உணர வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் டான் பிரைஸ். trumpforest.com என்ற வலைதளத்தைத் தொடங்கி, உலகம் முழுக்க மக்களை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தக் குழுவினர். 

ட்ரம்ப்பிற்கு எதிராக களமிறங்கும் படை வீரர்கள்

சூழலியல் சீர்கேடுகளும், பூமி வெப்பமயமாதலும் இன்றைய நாளின் செய்திகள் மட்டுமே அல்ல. அது ஒவ்வொரு நாளின் செய்தியும் கூடத்தான். ட்ரம்ப் குறித்த இந்தக் கட்டுரை ஒரு போதும் ட்ரம்ப்பின் காதுகளை எட்டப்போவதில்லை தான். ஆனால், ட்ரம்ப் மேற்கொள்ளும் இது போன்ற  இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது நீங்களும், நானும் கூடத்தான். 

ஹியூஸ்டன் நகர மக்களுக்கான பிரார்த்தனைகளோடு இந்தக் கட்டுரையை முடியுங்கள். அவர்களுக்கான பிரார்த்தனைகள் நாளை நமக்கானதாகவும் மாறலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement