Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“என் அம்மா உயிருடன் தான் இருந்தார்!” - மனம் திறந்த டயானா மகன்

ங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் இறந்து இந்த மாத இறுதியுடன் இருபது ஆண்டுகள் நிறைவடைகிறது. அன்னை தெரசாவின் மதிப்புக்குப் பாத்திரமானவர், ஆப்பிரிக்க மக்களின் நல்வாழ்வுக்காகவும் அங்குள்ள வன உயிரினங்களைக் காப்பதற்காகவும் தன் வாழ்நாளில் முக்கியப் பங்காற்றினார்.

தன் அம்மாவிற்கு முத்தம் கொடுக்கும் ஹாரி

ராஜ வம்சத்தினருக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளாமல், மக்களோடு மக்களாக அவர் ஒன்றியிருந்ததே அவரது பலமாகவும் பலவீனமாகவும் பார்க்கப்பட்டது. மகாராணி எலிசபெத் உள்பட அனைவருக்குமே அவர் மக்களுடன் நெருங்கிப் பழகியது பிடிக்காத ஒரு விஷயமாக இருந்ததாகவே கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல், திருமணத்துக்கு முன்பு 'சம்பளம் பெறும் வேலையில் இருந்த அரச பரம்பரையைச் சேர்ந்த பெண்'ணும் டயானா மட்டுமே.  டயானாவின் இளவரசர் சார்லஸுடனான காதல் வாழ்க்கை 1980-ல் தொடங்கியது. 1981-ல் திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு வில்லியம், ஹாரி என்று இரண்டு அரச வாரிசுகள் பிறந்தனர். மீடியா வெளிச்சத்திலேயே இருந்த இவர்களது குடும்ப வாழ்க்கை 1996-ல் விவகாரத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னும் டயானா மீடியாவின் பார்வையிலேயே இருந்தார். 

சார்லஸ் டயானா வில்லியம் மற்றும் ஹாரி

1997 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தனது காரில் நண்பருடன் பயணம் செய்துகொண்டிருந்தார் டயானா. அப்போது டன்னலுக்குள் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் டயானா மரணமடைந்தார்!. டயானாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகளும் அது குறித்தப் பல்வேறு கோணங்களிலான செய்திகளும் 20 ஆண்டுகள் கழித்து இன்றும் வெளியாகிவருகின்றன.

இங்கிலாந்து அரச வம்சத்தைப் பற்றி டாகுமென்ட்ரி தயாரித்த பிபிசி தொலைக்காட்சி நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் அதனை வெளியிட்டதை அடுத்து தற்போது அதனைப் பொதுப் பார்வைக்காக வெளியிட்டுள்ளது. அதில் தனது தாயின் மரணம் தொடர்பாக முதல்முறையாக மனம் திறந்துள்ளனர் இளவரசர்கள். தங்கள் வாழ்வின் கடந்து வரமுடியாத தருணம் எது என்று இளவரசர் ஹாரியிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்துள்ள இளவரசர் ஹாரி, “காரில் பயணம் செய்யத் தொடங்குவதற்கு சில மணிநேரங்கள் முன்பு அம்மா என்னை தொலைபேசியில் அழைத்தார். ஆனால், அப்போது விளையாடுவதில் ஆர்வமாக இருந்த நான், 'பேசமுடியாது' என்று கூறிவிட்டேன். அதுதான் என் அம்மாவினுடைய கடைசி அழைப்பு என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது” என்று கூறியுள்ளார்.

விபத்துக்குப் பிறகும் உயிர் இருந்தது

ஆப்ப்ரிக்காவில் டயானா

அதுமட்டுமல்லாமல் சில திடுக்கிடும் தகவல்களையும் அவர் அந்த டாகுமென்ட்ரியில் பகிர்ந்துள்ளார். “என் அம்மாவின் கார் செல்வதைப் பார்த்ததும் சில புகைப்படக்காரர்கள் அந்த டன்னல் வரைச் சென்று படமெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதில் கொடுமையான விஷயம், எனது தாய் சென்றுகொண்டிருந்த கார் மோதி விபத்துக்குள்ளான பிறகும் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தனர். விபத்தில் அவரது தலையில் மிக பலத்தக் காயம் ஏற்பட்டிருந்தது. இருந்தாலும் அவரது உயிர் துடித்துக் கொண்டிருந்தது. அவரைப் புகைப்படம் எடுத்த சிலரே என்னிடம் இதுகுறித்துப் பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆனால், புகைப்படம் எடுத்த ஒருவர் கூட  அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை. புகைப்படங்கள் மறுநாள் செய்திகளுக்காகத் தங்களது அலுவலக நியூஸ் டெஸ்க் நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தன” என்று உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

அதே டாகுமென்ட்ரியில் பேசிய இளவரசர் வில்லியம், ''பதினைந்து வயது மகனுக்கு தனது தாயின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதை விடப் பெரிய பாதிப்பு வேறு என்ன இருந்துவிடப் போகிறது? அந்த நிமிடங்களை இன்னும் என்னால் கடந்து வரமுடியவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். 

விபத்து நிகழ்ந்து இத்தனை ஆண்டுகளில் டயானாவுடன் அந்த காரில் இருந்தவர் அவரது ஆண் நண்பர்தான் என்று கிட்டத்தட்ட ஊர்ஜிதப்படுத்தப்பட்டு தகவல்களும் சில புத்தகங்களுமே வரத் தொடங்கிவிட்டன.  டயானா தொடர்பான பயோகிராபி வெளியாகி இன்றும் டாப்செல்லராக இருந்து வருகிறது. இதற்கிடையே 20 ஆண்டுகள் கழித்து அரச குடும்பத்தின் வாரிசுகள் டயானாவின் மரணம் குறித்துப் பேசியிருப்பது அங்கே மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது!.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement