Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

20 வருடங்களில் 200 யானைகளைக் காப்பாற்றிய தேவதை..!

யானைகள் கூட்டமாக அந்த மலையடிவாரத்தில் நின்றுகொண்டிருக்கின்றன. செம்மண்ணை எடுத்து தங்களின் தலை மேல் போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றன. கீழே சில வெள்ளரிக்காய்கள் போடப்பட்டிருக்கின்றன. லேசாக மழைத்தூற ஆரம்பிக்கிறது. யானைகள் குதூகலமாக விளையாடுகின்றன. மெதுவாக அதன் காலடியிலிருந்து வெளிவருகிறார் அந்தப் பெண். மற்றவைகளின் கால்களில் புகுந்து அவைகளுக்கு விளையாட்டுக் காட்டுகிறார். சில யானைகளின் தும்பிக்கைகளைப் பிடித்து விளையாடுகிறார். கொஞ்ச நேரம் கழித்து மெல்லிய குரலில் தாலாட்டுப் பாடல் பாடுகிறார். யானைகள் அனைத்தும் அமைதியாகின்றன. ஆட்டத்தைக் குறைத்து அதைக் கவனிக்க ஆரம்பிக்கின்றன. 

யானைகளின் தேவதை

அந்தப் பெண்ணின் பெயர் லெக் செயிலர்ட் (Lek Chailert). அந்த இடம் தாய்லாந்தின் வடப் பகுதியிருக்கும் சியாங் மய் மாகாணம். 1989யில் தேக்கு மரப் பட்டறைகளில் யானைகளை உபயோகப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்தது. காலங்காலமாக கால்களில் சங்கிலிகளால் கட்டப்பட்டுக் கிடந்த யானைகளுக்கு அந்தச் சங்கிலிகள் அறுபட்டன. இது தங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என கூப்பாடு போட்டார்கள் பல விலங்கின ஆர்வலர்கள். யானைகளுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என கொக்கரித்தார்கள். ஆனால், அவர்கள் ஒன்றை கவனிக்க மறந்திருந்தார்கள். அது அந்த அறுபட்ட சங்கிலிகளின் பின்னால் இருந்த காயங்கள். அந்தக் காயங்கள் உடலை மட்டுமல்ல அவைகளின் மனதையும் கடுமையாக பாதித்திருந்தன. யானைகளின் இந்த வலிகளை உணர்ந்த ஒருவர் லெக் மட்டுமே. 

சங்கிலியின் பின்னிருக்கும் வலி

தேக்கு மரப் பட்டறைகளிலிருந்து மீட்கப்பட்ட யானைகள் உடலளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த லெக், அவைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டுமென்று நினைத்தார். தொடர்ந்து எடுத்த முயற்சிகளின் பயனாய் 1996ம் ஆண்டு " எலிஃபெண்ட் நேச்சர் பார்க் " ( Elephant Nature Park ) எனும் பாதுகாப்பு பூங்கா ஒன்றை அமைத்தார். மரம் சுமந்த யானைகள், சர்க்கஸ்களில் உபயோகப்படுத்தப்பட்ட மற்றும் சாலைகளில் பிச்சையெடுக்கப் பயன்படுத்தப்பட்ட யானைகள் என எங்கெல்லாம் அவை கொடுமைப்படுத்தப்பட்டனவோ அங்கிருந்தெல்லாம் அவைகளை மீட்டு பாதுகாக்கத் தொடங்கினார். 

தாய்லாந்தில் ஒரு தேவதை

முதலில் பொருளாதார ரீதியில் இந்த முயற்சி சில சிக்கல்களை சந்தித்தது. சிலரோடு சேர்ந்து செயல்பட ஆரம்பித்தார். இந்தப் பூங்காவை வெறும் வருமானமாகப் பார்த்த அவர்கள், இந்த யானைகளைக் கொண்டு பல விளையாட்டுக்களை நடத்தினர். இதற்கு லெக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிந்தார். " இப்படியொரு செயலை செய்வதற்கு நாம் யானைகளை மீட்கவே தேவையில்லையே... அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?" என்ற கேள்வியைக் கோபமாக முன்வைத்தார். 

" சரி... யானைகளைப் பராமரிக்க நிறைய செலவாகிறதே... அதை எப்படி சமாளிப்பது ? " என்ற எதிர் கேள்விக்கு பதில் தேடத் தொடங்கினார். இன்று இந்தப் பூங்கா மிகச்சிறந்த சூழலியல் சுற்றுலாத் தளமாக இயங்கி வருகிறது. அதன் மூலம் கணிசமானத் தொகையையும் ஈட்ட முடிகிறது. இன்று தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு நாடுகளையும் சேர்த்து 5 பூங்காக்கள் அமைத்திருக்கிறார் லெக். 
பூங்காவிலிருக்கும் ஒவ்வொரு யானையின் இயல்பையும் அவ்வளவு துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.

" இவள் பொறாமைக்காரி, இவன் பிடிவாதக்காரன், இவன் சேட்டைக்காரன், இவள் அதிகமாக குறும்புகளைச் செய்வாள்..." என அந்த யானைகளின் குணத்தை அவ்வளவு தெளிவாகச் சொல்கிறார். அத்தனைப் பெரிய உருவத்தோடு எந்தவித பயமுமின்றி இயல்பாக அன்போடு பழகுகிறார். யானைகளும் அவரிடத்தில் அத்தனை அன்போடு நடந்துக் கொள்கின்றன. இந்தப் பரஸ்பர அன்பை எப்படி சம்பாதித்தீர்கள் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்ட போது, 

 தேவதை

" இது எல்லாவற்றிற்கும் அடிப்படை அன்பு தான். அந்தத் தடினமான கால்களை பிய்த்து எறியும் சங்கிலிகளில் அடைபட்டிருந்த அந்த யானைகளுக்குத் தேவையான அன்பை நான் அள்ளிக் கொடுத்தேன். அந்த அன்பு, எங்கள் இருவருக்குமான நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த நம்பிக்கை எங்கள் உறவுக்கான ஆதாரமாக திகழ்கிறது..." என்று சொன்னார். 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement