வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (29/08/2017)

கடைசி தொடர்பு:18:39 (29/08/2017)

வட கொரியாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய ரஷ்யா... அதிகரிக்கும் அழுத்தம்!

வட கொரியா - அமெரிக்கா இடையிலான உறவுச் சிக்கல் சர்வதேச நாடுகளைப் பல நாள்களாகத் தூக்கமிழக்கச் செய்துள்ளது. இந்தப் பிரச்னையில் யார் பக்கமும் சாயாமல் அமைதி காத்துவந்த ரஷ்யா, தற்போது வட கொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கு நெருக்கடிகொடுக்கும் விதமாக, வட கொரியா சமீப காலமாகக் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசும், அடாவடி போக்குடன் இந்த விஷயத்தை அணுகி வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் பலவும் அச்சம் தெரிவித்து வருகின்றன. கடந்த சில நாள்களாக இரு தரப்பும் மோதல் போக்கை கைவிட்டு சற்று அமைதி காத்து வருகின்றன. இருப்பினும் வட கொரியா தற்போது, ஜப்பான் வான்வெளியைத் தாண்டி ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் போர் பதற்றம் மீண்டும் தொற்றிக் கொண்டுள்ளது. இதையடுத்து ரஷ்ய அரசு தரப்பு, 'வட கொரியா எடுத்து வரும் நடவடிக்கைகளால் மிகவும் வருத்தம் அளிக்கிறது. வட கொரியாவால் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது' என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.