வெளியிடப்பட்ட நேரம்: 08:02 (30/08/2017)

கடைசி தொடர்பு:08:02 (30/08/2017)

ரஸ்புடின் முதல் குர்மீத் சிங் வரை... உலகை உலுக்கிய சாமியார்கள் உணர்த்திய உண்மைகள்!

போலி சாமியார் குர்மீத் சிங்

குர்மீத் ராம் ரஹீம் சிங்... தற்போது இந்தியாவை புரட்டிப் போட்ட ஒரு பெயர். இந்த ஒரு பெயர் 30 -க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. 300-க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வீழ்த்தியுள்ளது. இரண்டு பெண்களின் கற்பை சூறையாடியுள்ளது. ஒரு போலி சாமியாருக்காக இவ்வளவு கலவரமா? 'நான் கடவுளின் அவதாரம், கடவுள் என்னுள் குடிகொண்டிருக்கிறார்' என பிதற்றிக்கொண்டிருக்கும் சாமியார்கள் 'போலிகள்' என்று அறிந்த பின்னும் 'செம்மறி ஆட்டுக்கூட்டங்கள் போல பள்ளத்தில் விழும்' மக்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சாமியார்களை தங்களின் ஆதர்ச நாயகர்களாக, தங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் இறைவனின் தூதுவர்களாக நினைத்து அந்தப் போலிகளின் காலடியில் விழுந்து கிடக்கும் கூட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே உள்ளனர். அந்தப் போலிகளின் மாயப்பேச்சு வலையில் வீழ்ந்துவிடுகிறார்கள். தங்களைக் காக்க வந்த கடவுளாகவே அவர்களை எண்ணி பிரார்த்திக்கவும் செய்கின்றனர். தன்னைக் 'கடவுள்' என்றும், தன்னால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கமே, 'கடவுளைச் சேருவதற்கான ஒரே வழி' என்றும் மக்களை முட்டாள்களாக்கி பல உயிர்களைக் காவு வாங்கிய உலக அளவிலான கொடூர சாமியார்கள் சிலரைக் காண்போம்.

ஜிம் ஜோன்ஸ் :

ஜிம் ஜோன்ஸ் கொலை

ஒரு சாமியார் தனது பேச்சால், பக்தகோடிகளை எந்த அளவுக்கு அடிமையாக, எந்திரமாக மாற்ற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம்தான் ஜிம் ஜோன்ஸ்! அமெரிக்காவின் 'ஜோன்ஸ் டவுன்' என்கிற பகுதியில் ஆசிரமம் நடத்தி வந்தார் ஜிம்ஜோன்ஸ். 1978 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி தனது ஆசிரமத்தில், பிரமாண்ட இறையுரையாற்ற ஏற்பாடு செய்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தகோடிகள் கூடுகின்றனர். ஜிம் ஜோன்ஸ்அரங்கம் முழுக்க ஒரே பக்திமயம். வந்திருந்த பக்தகோடிகள் அனைவரும் கடவுளை காணும் ஆசையில் தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர். திடீரென மேடையில் தோன்றிய ஜிம் ஜோன்ஸ், "என் அருமை குழந்தைகளே இந்த உலகை பொருத்தவரையில் இதுவே நமது கடைசி சந்திப்பு. தீய சக்திகள் இந்த உலகத்தை அழிக்கப் போகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க நாம் சொர்க்கத்துக்குச் செல்ல வேண்டும். வேறுவழி இல்லை... நாம் உயிர் தியாகம் செய்யவில்லை என்றால், விளைவுகள் விபரீதமாக மாறிவிடும்" என்று பக்தர்களை மூளை சலவை செய்தான்.

பெரிய அளவு குடுவைகளில் எலுமிச்சை பழச்சாறுடன் சயனைடுகளை கலந்தார்கள். “அனைவரும் வரிசையில் வாருங்கள். குழந்தைகளுக்கு முன்னுரிமை. பின் அனைவருக்கும் வழங்கப்படும். மகிழ்ச்சியாக பருகுங்கள். நாம் அனைவரும் சொர்க்கத்துக்குச் செல்லப்போகிறோம்" என்றார் ஜோன்ஸ். கூட்டம் கூட்டமாக குடித்து மடிந்தார்கள் பலர். முரண்டு பிடித்த சிலர் துப்பாக்கி முனையில் குடிக்கவைக்கப்பட்டனர். பக்தகோடிகள், சிஷ்யர்கள் அனைவரும் இறந்ததை உறுதி செய்தபின் ''நானும் வருகிறேன்'' என்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இறந்தார் ஜோன்ஸ். விவரம் அறிந்து காவலர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த ஆசிரமத்தில் 900-க்கும் அதிகமானோர் இறந்து கிடந்தனர்.

ஷோகோ அசஹரா : 

ஜப்பானைச் சேர்ந்த ஷோகோ அசஹரா உருவாக்கிய 'ஒரே மதம் ஒரே கடவுள்' இயக்கம் தான் ஓம் ஷின்ரிக்கியோ. இந்த ஷோகோ அசஹரா கடவுளுக்கு ஒரு விசித்திர எண்ணம் தோன்றுகிறது. 'எப்படியும் இந்த உலகம் அழியபோகிறது. அதை நாமே அழித்தால் என்ன?' ஷோகோ அசஹராஎன்று புது அவதாரம் எடுக்கிறார். 1995 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் ஒரு சுரங்கப் பாதையின் ஓரத்தில் இருந்த ஒரு பொட்டலத்தை துப்புரவு தொழிலாளர் எடுத்து பிரித்துப் பார்க்கிறார். அந்த பொட்டலத்திலிருந்து ஏதோ ஒரு வித வாசனை காற்றில் கலக்கிறது. அதை சுவாசித்த அடுத்த நொடி அந்த பெண்ணின் கண் கருவிழிகள் இறுக ஆரம்பித்து, வாயில் நுரை தள்ளி இறந்து போனாள். அந்தப் பெண்ணுக்கு உதவ வந்தவர்களும் அதே போல இறந்து போனார்கள். அவர்களுக்கு உதவ வந்தவர்களுக்கும் அதே கதிதான். இதுபோன்ற தொடர் மரணங்கள் தொடர்கதையாக மாறின. மக்கள் அனைவரும் அப்படி என்ன பொருளைத் தொட்டார்கள்? சுவாசித்தார்கள்? அது 'சரின்' என்ற வேதிப்பொருள். இதை சுவாசிக்கும் மறுநொடியே வாயில் நுரை தள்ளி, கை, கால் வலிப்பு ஏற்பட்டு இறப்பார்கள். (நடப்பு ஆண்டில் [2017 ] இந்தக் கொடிய 'சரின்' என்ற வேதிப்பொருள் அடைத்து வைக்கப்பட்ட குண்டுகளை வீசியெறிந்து ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தது சிரியா என்பது குறிப்பிடத்தக்கது).

இதனால் ஜப்பானில் பலநூறு பேர் இறந்துபோனார்கள். இந்தக் கொடிய செயலை செய்தவர்கள் ஷோகோ அசஹராவும், அவரது மதத்தைச் சேர்ந்த சிஷ்யகோடிகளும்தான். ஜப்பான் அரசு, இந்தக் குற்றவாளியைக் கண்டுபிடித்து மரண தண்டனை விதித்ததோடு, 'ஒரே மதம் ஒரே கடவுள்' இயக்கத்தையும் தடை செய்தது. இப்போது ஷோகோ அசஹரா ஜப்பான் நாட்டு சிறையில் மரண தண்டனையைக் கழித்து வருகிறார்.

டேவிட் கொரேஷ் :

இந்தச் சாமியாரின் செயல்கள் ஹாலிவுட் படங்களின் ஆக்‌ஷன் ரகத்தையே தூக்கிச் சாப்பிட்டுவிடும். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் வாக்கோ நகர் அருகே ஆசிரமம் அமைத்து சாமியார் வேஷம் போட்டு வந்தவர் டேவிட் கொரேஷ். தாவீது மதப்பிரிவின் டேவிட் கொரேஷ்தலைவர் என்றும், இறைவனின் இறுதி தீர்க்கதரிசி என்றும் தன்னைக் கூறிவந்தார். இதனால் இவருக்கு பக்தகோடிகள் ஏராளம். போலியான மத இயக்கத்தை ஆரம்பித்து மக்களை மூளை சலவை செய்து வருகிறார் என்று FBI-க்குத் தகவல் போனது. 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காவலர்கள் டேவிட் கொரேஷின் ஆசிரமத்தைச் சுற்றி வளைத்து சரணடைய கட்டளையிட்டனர். ''பக்தர்களே சாத்தான்கள் நம்மைச் சுற்றி வளைத்துவிட்டார்கள். கொடிய சாத்தான்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் ஆயுதம் ஏந்துங்கள்" என்று அனைவரிடமும் எந்திரத் துப்பாக்கியை நீட்டினான். பக்தர்கள் சுட்டதில் நான்கு காவலர்கள் பலியாயினர். விளைவு காவலர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. 51 நாட்கள் நடந்த யுத்தத்தின் முடிவில் பீரங்கி வந்ததால், டேவிட் கொரேஷுக்கு பின்னடைவு ஏற்பட்டது. "போலீஸ் என்ற சாத்தான்கள் கையில் ஒருவர்கூட சிக்கிக்கொள்ளக் கூடாது. உலக வாழ்வு முடிந்துவிட்டது. நாம் சொர்க்கத்துக்குக் கிளம்புவோம்" என்று டேவிட் கொரேஷ் சொல்ல... அனைவரும் தங்களது உடலுக்கும், ஆசிரமத்துக்கும் தீ வைத்துக்கொண்டனர். விளைவு 23 குழந்தைகள் உட்பட 80 பேர் தீயில் கருகி இறந்து போனார்கள்.

ரஸ்புடின் :

இந்தச் சாமியார் சற்று வேறு ரகம். 'பாப் சாங்' ஆல்பமெல்லாம் இவரால் தாறுமாறாய் எகிறியது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவரின் ஆசை மனிதர்களைக் கொல்வதல்ல. 'பில்லி சூனியம், ஹிப்னாடிசம் கற்றுக்கொண்டு புகழின் உச்சத்தை அடைவது. அதனால் கிடைக்கப்படும் பலனை அனுபவிப்பது' ஆகியவைதான். இவருக்குக் 'குட்டி கடவுள்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவருடைய சிறுவயதில், வீட்டில் வளர்க்கப்பட்ட குதிரை ஒன்று காணாமல் போனது. யார் திருடன் என்று ஒருவரை கைநீட்டிக் குற்றம்சொல்லி குத்துமதிப்பாக அள்ளிவிட்டார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, அவரேதான் திருடன். இதுபோதாதா? குட்டிக் கடவுள் என்ற பெயரைச் சூட்டுவதற்கு. வளர வளர இவரின் ஆசை ரஷ்ய ராஜ குடும்பத்தின் பக்கம் திரும்பியது. இளவரசனுக்கு இருந்த நோயைக் குணப்படுத்துவதாகச் சொல்லி அரண்மனைக்குள் நுழைந்தவர் கடைசியில், ராணியைத் தன் மாயவலையில் சிக்க வைத்தார். இதனால் ஆட்சி நிர்வாகம் சீர்கெட்டு தடுமாறியது. ஒருபக்கம் இவரை மக்கள் குட்டிக் கடவுளாகக் கண்டாலும், மறுபக்கம் மக்களின் கோபம் ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது. ஒருநாள் ரஸ்புடின் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்.

ரஸ்புடின்

இதே போல எத்தனை எத்தனையோ போலி ரகங்கள் உலகம் முழுவதும் முளைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதில் என்ன கொடுமை என்றால், ஒவ்வொரு முறையும் ஒரு போலி சாமியார் காவலர்களிடம் மாட்டிக்கொள்வதைப் பார்க்கும் மக்கள், அடுத்தமுறை புதிய போலி சாமியார் வரும்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு அந்தப் புதுப் சாமியாரையும் நம்புகின்றனர். போலிச் சாமியார்களும் இதைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு பல்வேறு முறைகேடுகளை செய்துவருகின்றனர். ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுதலே இதுபோன்ற போலிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் வழி! சுருக்கமாகச் சொன்னால், 'பகுத்தறிந்து செயல்படுவதே பாதுகாப்பு!'


டிரெண்டிங் @ விகடன்