உலகின் முதல் பெண் டெலிபோன் ஆப்ரேட்டர் என்ன செய்தார்? #EmmaMNuttDay | world's first female telephone operator Emma m nutt

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (01/09/2017)

கடைசி தொடர்பு:10:00 (01/09/2017)

உலகின் முதல் பெண் டெலிபோன் ஆப்ரேட்டர் என்ன செய்தார்? #EmmaMNuttDay

டெலிபோன்

உலகில் எத்தனையோ துறைகளில் பெண்கள் காலூன்றி வெற்றி வாகை சூடி, மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சில பணிகளை நாம் நினைத்துப் பார்த்தாலே அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்யக்கூடியவர்கள் பெண்கள்தான் என்று கருத வைக்கும் விதத்தில் அற்புதமாக இயங்கி வருகின்றனர். வேலைகளில் ஆண், பெண் பேதமில்லை என்று இந்த உலகிற்கு உரக்கச் சொல்லி வருவதை நாம் பெருமையுடம் பார்த்து வருகிறோம். ஆனால், பெண்கள் ஏராளமான சவால்களைக் கடந்தே இந்த இடத்தை அடைந்திருக்கின்றனர். ஒவ்வொரு வேலையிலும் முதன் முதலாகப் பணிக்குப் பெண்கள் வந்ததே ஒரு சாதனைதான். அதுபோன்ற சாதனைக்கு உரியவர்தான் எம்மா நட். டெலிபோன் ஆபரேட்டர் என்றாலே பெண்களின் முகங்கள்தாம் இன்றைக்கு நினைவுக்கு வரும். உலகிலேயே முதன்முதலாக டெலிபோன் ஆபரேட்டராகப் பணிபுரிந்தவர்தான் எம்மா நெட். அவரின் இந்தத் துணிச்சலான முயற்சியைப் பாராட்டும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் தேதி Emm M. Nutt day கொண்டாடப்படுகிறது. எம்மா நெட் 1978 ஆம் ஆண்டுச் செப்டம்பர் 1 -ம் தேதிதான் தன் பணியைத் தொடங்கினார். 

1878 ஆம் ஆண்டு Edwin Holmes Telephone Dispatch Company மற்றும் Boston Telephone Dispatch Company ஆகியவை ஆண்களைத்தான் டெலிபோன் ஆபரேட்டர் பணியில் சேர்த்து வந்தனர். George Williard Croy என்பவர்தான் முதலில் அந்தப் பணியில் சேர்க்கப்பட்டார். அங்கு எம்மா நெட்டின் கணவரும் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். ஆனால், இந்த வேலையை ஆண்களை விடப் பெண்களால் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதாக நிறுவனம் நினைத்தது. காரணம், ஆண்கள் தொலைபேசியில் பேசும் முறை மிகவும் முரட்டுத்தனமாகவும் கேலியான மொழிநடையிலும் இருந்ததாகப் பல குற்றச்சாட்டுகள் வந்தன. ஆகையால், இந்தச் சிக்கலைச் சீர்படுத்த நினைத்த நிறுவனம் பெண்களை டெலிபோன் ஆபரேட்டர் பணியில் அமர்த்துவது என முடிவெடுத்தது. இதன் விளைவாக 1878 ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி  எம்மா நெட் பணியில் சேர்ந்தார். அவருக்குப் புதிய அனுபவமாக இருந்ததோடு, சவால் நிறைந்ததாக இருந்ததை உணர்ந்தார். அதற்காகக் கொஞ்சமும் தன் முயற்சியில் பின் வாங்காமால் உற்சாகமாகப் பணிகளை மேற்கொண்டார். அந்த உற்சாகமே சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த வேலையில் நிலைக்க வைத்தது.

டெலிபோன் எம்மா நெட் வேலைக்குச் சேர்ந்ததில் சுவாரஸ்யமான செய்தியும் உண்டு. டெலிபோனைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்தான் எம்மா நெட்டைப் பணிக்குச் சேர்த்திருக்கிறார். ஆண்களால் சிறப்பாக முடிக்க முடியாத வேலை என்று தன்னிடம் தரப்பட்ட வேலையை மிகச் செம்மையாகச் செய்தார். இவை எல்லாம் 1878 - ஆம் ஆண்டுகளில் நடந்தவை எனும் பார்க்கும்போது எவ்வளவு சிரமமான ஒன்று எனப் புரிந்துகொள்ளலாம். அந்தச் சிரமங்கள் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதை உலகிற்குச் சொல்லும் விதமாகத் தன் தங்கை ஷீலா நெட்டையும் (Shella Nutt) டெலிபோன் ஆபரேட்டர் வேலைக்குச் சேர வைத்தார். டெலிபோன் ஆபரேட்டர் வேலையில் இணைந்த இரண்டாம் பெண் எனும் பெருமையைச் சூடிக்கொண்டார் ஷீலா நெட்.

இந்தப் பணிக்கான விதிமுறைகள் கடுமையாக இருந்தன. வேலைக்குச் சேருபவர்கள் 17 முதல் 20 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். வேலை நேரமும் அதிகமாகயிருந்தது. இதோடு ஆப்ரிக்க மற்றும் யூத பெண்கள் டெலிபோன் ஆபரேட்டர் பணிகள் புரிய அனுமதி அளிக்கப்பட வில்லை. ஆண்களின் உலகில் துணிச்சலோடு களமிறங்கி, நம்பிக்கையோடு பணியாற்றிய எம்மா நெட்டின் நினைவுகளைப் போற்றுவோம். பெண்களின் திறமைகள் இன்னும் இன்னும் விரியட்டும்.


டிரெண்டிங் @ விகடன்