பீலேவை விஞ்சிய ரொனால்டோ! | Cristiano Ronaldo overtakes Pele

வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (01/09/2017)

கடைசி தொடர்பு:18:01 (01/09/2017)

பீலேவை விஞ்சிய ரொனால்டோ!

சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் தேசிய அணிக்காக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பவான் பீலேவை முந்தினார் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ரொனால்டோ

ரஷ்யாவில் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடக்க உள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல், ஃபரோ தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி, போர்ச்சுகல் நாட்டின் போர்டோவில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல்கள் அடித்து உதவ, 5-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல், அந்தக் குட்டித் தீவை வீழ்த்தியது.

ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம், சர்வதேச அரங்கில் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். ரொனால்டோ தற்போது 78 கோல்கள் அடித்துள்ளார். பிரேசில் ஜாம்பவான் பீலே தன் அணிக்காக 77 கோல்கள் அடித்திருந்தார். ஹங்கேரியைச் சேர்ந்த ஸ்ட்ரைக்கர் ஃபெரெங்க் புஸ்காஸ் 86 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். அசத்தலான ஃபார்மில் இருக்கும் ரொனால்டோ, ஃபிட்னெஸில் மட்டும் கவனம் செலுத்தினால், விரைவில் நம்பர் -1 வீரராக வாய்ப்பு இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் யூரோ சாம்பியனான போர்ச்சுகல், குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

 

 

 

ரொனால்டோ தன் முதல் கோலை side-footed volley மூலம் அடித்தார். ரைட் விங்கில் இருந்து வந்த கிராஸை, பறந்து அவர் கோல் அடித்தபோது கோல் கீப்பரால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியவில்லை. பெனால்டி கிக் மூலம் இரண்டாவது கோலை அடித்த CR7, பெனால்டி பாக்ஸில் டிஃபண்டர்களுக்கு வித்தைக் காட்டி நேக்காக மூன்றாவது கோலை அடித்தார். இதுவரையிலும் இந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றில், 7 போட்டிகளில் 14 கோல்கள் அடித்துள்ளார் ரொனால்டோ

நீங்க எப்படி பீல் பண்றீங்க