கூட்டுச் சேர்ந்த தென் கொரியா - அமெரிக்கா... சிக்கலில் வடகொரியா!

அமெரிக்கா- வடகொரியா இடையில் பல மாதங்களாகப் பிரச்னை நிலவி வரும் நிலையில், தற்போது இரு தரப்புகளுக்கு இடையிலான மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் வடகொரியா, ஜப்பானின் வான் வழியைத் தாண்டி ஏவுகணைச் சோதனை நடத்தியது பிரச்னையின் வீரியத்தை இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஒன்றாக இணைந்து வடகொரியாவுக்கு எதிராகச் செயல்பட முடிவு செய்துள்ளன.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணைச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. அதில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வடகொரியா.

இந்நிலையில், ஜப்பானைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் ஏவுகணைச் சோதனை ஒன்றை வடகொரியா அரங்கேற்றியது. ’பசிபிக் பெருங்கடலில் நிகழ்த்தும் முதல் வெற்றிகர ஏவுகணைச் சோதனை. இதுபோல் பல தாக்குதல்கள் பின்னாளில் தொடரும்’ என்று வடகொரியா அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.

இந்நிலையில், வடகொரியாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்தி அழிக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக சோதனை செய்தது. இதைத்தொடர்ந்து தென் கொரியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய ஏவுகணைகள் படை எடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அரசு தரப்பு, 'ட்ரம்ப்பும் தென் கொரிய அதிபர் மூனும் இணைந்து பொருளாதார மற்றும் தூதரக அழுத்தங்களை வடகொரியாவுக்குத் தொடர்ந்து கொடுக்க முடிவு எடுத்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!