அடங்கமறுக்கும் வடகொரியா : ஆறாவது முறையாக அணுகுண்டு சோதனை!

உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி ஆறாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி மீண்டும் பதற்ற நிலையை அதிகரித்துள்ளது வடகொரியா.

வடகொரியா

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வட கொரியா.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவருகிறது வட கொரியா. அந்த நாட்டின் மீது, ஐ.நா. சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வட கொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், ஜப்பானைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் சமீபத்தில் ஏவுகணைச் சோதனை ஒன்றை வடகொரியா அரங்கேற்றியது. ’பசிபிக் பெருங்கடலில் நிகழ்த்தும் முதல் வெற்றிகர ஏவுகணைச் சோதனை. இதுபோல் பல தாக்குதல்கள் பின்னாளில் தொடரும்’ என்று வடகொரியா அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

இதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன. இந்நிலையில், இன்று சக்திவாய்ந்த அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக வடகொரியா நிகழ்த்தியதில், தென் கொரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!