Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இயற்கைக்கு ஏன் இவ்வளவு ஆக்ரோஷம்? உலகை உலுக்கிய பேரழிவுகள்!

இந்திய நில மண்டல அமைப்பின் அடிப்படையில் இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. உலகளவில் நிகழும் அசாதாரணமான சூழல் இயற்கைப் பேரழிவுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் கொட்டித் தீர்த்த மழை, வடிந்து முடியா வெள்ளம் பல உயிர்களை பலி வாங்கியது. நில அதிர்வுகளும், கடல் கொந்தளிப்புகளும் விடாமல் மனிதனைத் துரத்திக் கொண்டிருக்க, 21-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இயற்கைப் பேரழிவுகள் குறித்த இப்பட்டியல், இயற்கையை மனிதன் எவ்வாறு கையாண்டுள்ளான் என்பதற்கு சாட்சியாக நிற்கின்றன. இயற்கையின் கருணையை விட கோபம் பெரியது என்பது ஒவ்வொரு முறையும் நிரூபனம் ஆகிறது.

பேரழிவுகள்

1. சுனாமி 2004

கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கி கோர தாண்டவம் ஆடிவிட்டுச் சென்ற  சுனாமியின் துயரங்களும்,சோகங்களும் ஆண்டுகள் பல ஆகிவிட்டபோதிலும்  சொந்தங்களையும்,உறவுகளையும் பறிகொடுத்தவர்களிடத்தில் நீங்கியபாடில்லை.  

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம்  தேதி, ஒரு கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்திற்கு மறுதினம், சக்தி வாய்ந்த நில  நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால்,  அதுவரை சுனாமி என்றால் என்ன? என்று தெரியாதவர்களுக்கு, ஆழிப்பேரலை தனது கோர முகத்தைக் காட்டியது. இந்த சுனாமியால் இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லந்து உள்ளிட்ட 14  நாடுகளில் மொத்தம் இரண்டு லட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  உயிரிழந்தனர். இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். தமிழகத்தில்  உள்ள 13 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது. கடற்கரையை ஒட்டியுள்ள சுமார்,  418 பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின. அங்கு வசித்த,8,000 பேர் உயிரிழந்தனர்.  சுமார்,10,000 க்கும் அதிகமானோர் தங்களது வீடு உள்ளிட்ட உடமைகளை பறிகொடுத்து  வீதியில் நின்றனர்.இந்த சுனாமி தாக்குதலில், காணாமல் போன 846 பேரின் நிலை  என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.

2. ஆப்கானிஸ்தான் பனிப்புயல் 2008

கடந்த 2008-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய பனிப்புயலின் கோரத் தாண்டவம் விவரிக்க இயலாதது. மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நீடித்த ஆப்கானிஸ்தான் நகரங்களில் 180 செ.மீ அளவுக்கு பனி நிறைந்து காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களைக் குளிரால் கொன்று குவித்த இந்த பனிப்புயல் மனிதர்களை மட்டுமல்ல லட்சக்கணக்கான ஆடு, மாடுகள் போன்ற விலங்கினங்களையும் காவு வாங்கியது.

3. மொசாம்பிக் வெள்ளம் 2000

தென் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொசாம்பிக் நாட்டில் கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட பெருவெள்ளம் உலகை உலுக்கிய வெள்ளங்களுள் ஒன்று. தொடர்ந்து ஐந்து வாரங்கள் விடாது பெய்த பெரு மழையால் சுமார் 700-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பெருமழை, வெள்ளம் என தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களை வீடுகள் இழந்து தவிக்கச் செய்த இயற்கையின் சீற்றம் அதோடு நிற்கவில்லை. வெள்ளத்தைத் தொடர்ந்து ‘எலைன்’ என்ற சூறாவளி மொசாம்பிக் நாட்டை சூறை ஆடிச் சென்றது. ஆண்டுகள் பதினேழு ஆன போதும் இன்னும் இப்பெருந்துயரில் இருந்து மக்கள் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

4. ஐரோப்பிய வெப்ப அலைகள் 2003

16-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பாவில் கடந்த 2003-ம் ஆண்டு கொடூரமான வெப்பம் நிலவியது. குறிப்பாக இந்த கொடும் வெப்ப அலைகளுக்கு உள்ளான நாடுகளில் பிரான்ஸ் கடும் பாதிப்புக்கு உள்ளானது. அன்று நிலவிய வெப்ப அலைகளால் பல ஐரோப்பிய நாடுகளில் உடல் நலம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும், தொடர் வறட்சியின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மடியத் தொடங்கினர். 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே இந்த நூற்றாண்டின் மிக வெப்பமான காலம்.

5.  கிழக்கு ஆப்ரிக்க வறட்சி, 2011

ஆப்ரிக்காவின் கடந்த ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியே மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கிழக்கு ஆப்ரிக்காவின் சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா போன்ற நாடுகளில் கடும் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை இந்த வறட்சி வறண்டு போகச் செய்தது. இதுநாள் வரையில் சத்துக்குறைபாடு, மோசமான சுகாதார சூழலில் மீள முடியாமல் தவித்து வருகின்றன இந்த கிழக்கு ஆப்ரிக்க நாடுகள்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement