'உடனே நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால்...'- வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி ஆறாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி மீண்டும் பதற்ற நிலையை அதிகரித்துள்ளது வடகொரியா. இதையடுத்து, பல நாட்டுத் தலைவர்களும் வட கொரியாவை எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், 'வட கொரியா, தனது அணு ஆயுதச் சோதனையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதனால் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வட கொரியா. சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவருகிறது வட கொரியா. அந்த நாட்டின் மீது, ஐ.நா. சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வட கொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், ஜப்பானைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் சமீபத்தில் ஏவுகணைச் சோதனை ஒன்றை வடகொரியா அரங்கேற்றியது. ’பசிபிக் பெருங்கடலில் நிகழ்த்தும் முதல் வெற்றிகர ஏவுகணைச் சோதனை. இதுபோல் பல தாக்குதல்கள் பின்னாளில் தொடரும்’ என்று வடகொரியா அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன. இந்நிலையில், சக்திவாய்ந்த அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக வடகொரியா நிகழ்த்தியதில், தென் கொரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆகப் இது பதிவாகியுள்ளது.

இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க், 'வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள் அனைத்தும் சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறுகின்றன. இதனால், உலக நாடுகள் அனைத்தும் தங்களது கவனத்தை வட கொரியாவின் பக்கம் திருப்பி, நடந்து வரும் விஷயங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டிய சூழலில் உள்ளோம். அனைத்து வித அணு ஆயுதச் சோதனைகளை வட கொரியா இனிமேலும் நேரம் கடத்தாம் விட்டொழிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!