குடிமகனை மணக்கும் ஜப்பானிய இளவரசியின் கதை! | The story of Japanese Princess Mako who set to marry a commoner

வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (06/09/2017)

கடைசி தொடர்பு:09:59 (06/09/2017)

குடிமகனை மணக்கும் ஜப்பானிய இளவரசியின் கதை!

ஜாப்பானிய இளவரசி

Photo courtesy: Reuters

ப்பான்  இளவரசி மகோவின் காதல்தான், தற்போது வெளிநாட்டு ஊடகங்களில் டாப் டாபிக். தனது காதலர்  கே கோமுரோவுடன் அடுத்த ஆண்டு கரம் கோக்கவிருக்கும் மகோ, அதற்காக தனது 'ராயல்’ அந்தஸ்தையும், இளவரசிப் பட்டத்தையும் துறக்கவிருக்கிறார் என்ற செய்தி,  உலகத்தை அவர் பக்கம் திருப்பியிருக்கிறது. 

ஜப்பானிய சட்டத்தின்படி, அரச குடும்பத்திற்கு வெளியில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் அரச குடும்ப அந்தஸ்தை துறக்க வேண்டும். ஆனால், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண் வாரிசுகளுக்கு  இத்தகைய வரையறைகள் இல்லை. அவர்கள் சாமானிய பெண்களை மணந்தாலும், தங்களது அரச அந்தஸ்தை இழக்கமாட்டார்கள். இந்த மண விதி கொண்ட ராயல் குடும்பத்தில் பிறந்த மகோவுக்கு, ஒரு சாமனியருடன் காதல் ஏற்பட்டது. தற்போது ஐந்து வயதாகும் தன் காதலுக்காக, தன்னுடைய அரச அடையாளத்தைத்  துறக்கும் முடிவெடுத்திருக்கும் மகோவை, 'தேவதை' என்று கொண்டாடுகிறார்கள் உலகக் காதலர்கள். 

ஜப்பானிய இளவரசிகடந்த 2012ம் ஆண்டு,டோக்கியோ இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் பல்கலைகழகத்தில் மகோவும் கே கோமுரோவும் முதன்முறையாகச் சந்தித்துக்கொண்டனர். 2013ம் ஆண்டு டிசம்பர், கோமுரோ தனது காதலை  மகோவிடம் தெரிவித்திருக்கிறார். டோக்கியோ  பல்கலைக்கழகத்தில், இளவரசி மகோ பொருட்காட்சியக ஆய்வாளராகப் பணிபுரிக்கிறார். கோமுரோ வணிக  சம்பந்தமான சட்டப்படிப்பு படித்துவிட்டு, சட்ட ஆலோசகராகப் பணியாற்றுகிறார். தற்போது தங்களின் திருமணம் குறித்து இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, உலகக் கேமராக்களின் ஃபிளேஷ் அவர்கள் மேல் விழுந்துகொண்டிருக்கின்றன. 

மகோவின் காதலர் கே கோமுரோ, “மகோ என்னை அமைதியாக கவனிப்பார்... ஒரு நிலவைப்போல!  நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள  சம்மதித்த ஜப்பானிய அரச குடும்பத்துக்கு எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக, இளவரசி மகோவின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார். 

இளவரசி மகோ, “கே கோமுரோவை முதன்முறையாக பார்த்தபோது, அவர் ஒரு சூரியனைப்போல் சிரித்தது இன்றும் என் நெஞ்சில் இருக்கிறது. அரச குடும்பத்தைச் சேர்ந்தவளாக எனது கடமைகளை நிறைவேற்றியிருக்கிறேன். அதே சமயம், என் தனிப்பட்ட வாழ்க்கையும் எனக்கு முக்கியம். ஒரு புதிய குடும்பத்தை உருவாக்கும் பொறுப்பு, இப்போது என் கற்பனைக்கு எட்டாத விஷயமாக இருக்கிறது. என்றாலும், இந்தப் புதிய வாழ்க்கையை நான் நிறைந்த புன்னகையுடன் வரவேற்கிறேன்” என்றவர் தன் காதலுக்குக் கொடுக்கும் விலை பற்றிச் சொல்லும்போது, ''எனக்கு சாமானியருடன் திருமணம் நடந்தால், என் அரச  அந்தஸ்தை இழப்பேன் என்பது சிறுவயதிலேயே எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நான் ஏற்கிறேன்'' என்கிறார் மாறாத புன்னகையுடன். 

இந்தச் சட்டத்தினால் ஜப்பானிய அரச குடும்பங்களைச் சேர்ந்த 11 கிளைக் குடும்பங்கள் ஏற்கெனவே ‘அரச’ அந்தஸ்திலிருந்து விலகப்பட்டிருக்கின்றன. இது அரச குடும்பச் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாகவும் விமர்சிக்கப்பட்டது. இன்னொரு பக்கம், அரச குடும்பப் பெண்களை மணப்பதற்கு, அதே அந்தஸ்துடன் இருக்கும் ஆண்கள் தற்போது எவரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய ஜப்பான் அரசர், மகோவின்  தாத்தா அகிஷிதோ. 83 வயதாகும் அவர், வரும் 2018ம் ஆண்டிற்கு பின் தனது அரச பொறுப்புகளை மகோவின்  தந்தை, க்ரோன் இளவரசர்  நருஹிதோவிடம் ஒப்படைக்கவிருக்கிறார். அதன் பின்னர், நருஹிதோவின் தம்பி அகிஷினோ மற்றும் அவரது 10 வயது மகன் ஹிசஹிதோ அரச பொறுப்புகளை ஏற்பர்.  
 
இதற்கு முன், அரசர் அகிதோவின் ஒரே மகளும், இளவரசி மகோவின் அத்தையுமான சயகோ, 2005ம் ஆண்டு சாமானியரான யோஷிகி  குரோடாவை மணந்து, தனது அரச அந்தஸ்தை துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரண்மனைக் கிளிகள் கூடுடைத்து வருகிறார்கள் அன்புக்காக!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்