பஹாமஸில் உள்வாங்கிய கடல் நீர்! - ஃபுளோரிடாவைத் தாக்கிய இர்மா புயல்! | Northern Eyewall of Hurricane Irma Reaches Lower Florida Keys

வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (10/09/2017)

கடைசி தொடர்பு:17:12 (10/09/2017)

பஹாமஸில் உள்வாங்கிய கடல் நீர்! - ஃபுளோரிடாவைத் தாக்கிய இர்மா புயல்!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை அடுத்துள்ள ஃபுளோரிடா தீவுக்கூட்டத்தை இர்மா புயல் தாக்கியது. 

கரீபியன் தீவுகளில் கோரதாண்டவம் ஆடிய இர்மா புயல் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியை நோக்கி தற்போது நகர்ந்து வருகிறது. ஃபுளோரிடா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபுளோரிடா கீஸ் தீவுக்கூட்டத்தை இர்மா புயல் தாக்கியதாக அமெரிக்காவின் தேசிய புயல் மையம் அறிவித்துள்ளது. அப்போது காற்று அதிகபட்சமாக மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் வீசியதாகவும், வடகிழக்கு திசையில் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் எச்சரிக்கை காரணமாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர். இர்மா புயலின் தாக்கத்தால் பஹாமஸ் தீவுப்பகுதியில் கடல் மொத்தமாக உள்வாங்கியது. இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுமோ என்று மக்கள் அச்சமடைந்திருந்த நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு கடல் நீர் இயல்பு நிலைக்குத் திரும்பியது.  முன்னதாக கரீபியன் தீவுகள் மற்றும் கியூபா ஆகிய பகுதிகளை இர்மா தாக்கியது. அந்த புயலின் தாக்கத்தில் சிக்கி கரீபியன் தீவுகளில் 24 பேர் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இர்மா புயல் ஏற்படுத்திய சேதம் பல மில்லியன் டாலர்கள் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.