வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (12/09/2017)

கடைசி தொடர்பு:21:41 (12/09/2017)

சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் எப்போதெல்லாம் பூமியைத் தாக்கும்?

சுனாமி


இயற்கை எப்போதும் நமக்குச் சாதகமாக செயல்படுவதில்லை. அவ்வப்போது, ஏதாவது ஒரு வகையில் நம் மீதான கோபத்தை அது காட்டிக்கொண்டேதான் இருக்கிறது. அப்படி இயற்கை நிகழ்த்தும் பல  அழிவுகளில் மிகவும் முக்கியமானது நிலநடுக்கமும் சுனாமியும்தான் . 

சுனாமி என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது?
சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்துதான் வந்தது இதற்கு பெரிய அலைகள் என்று பொருள். கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் கடலில் உள்ள நீரானது மிகப்பெரிய அளவில் உந்தப்பட்டு பெரிய பெரிய அலைகளாக உருவெடுத்து கரைக்கு வெளியே சேதத்தை ஏற்படுத்தும். இதைத்தான் நாம் சுனாமி என்கிறோம்

சுனாமி ஏற்படும்போது தோன்றக்கூடிய அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக மேலெழும்பும். இந்த அலைகளின் அளவும் வீரியமும் கடலுக்கடியில் ஏற்படுகிற நிலநடுக்கத்தின் அளவைப் பொறுத்து மாறுபடும். சுனாமி என்பது ஒரேயொரு பெரிய அலை அல்ல அது அடுக்கடுக்கான அலைகளின் தொகுப்பு.

பெரும்பாலும் இந்த அலைகளால் கடலில் இருக்கும் நீர் தரைப்பகுதியை நோக்கி இடம்பெயர்வதால் நிலப்பரப்பின் இயல்பான தன்மை முற்றிலுமாக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல் முன்பு நிலமாக இருந்த பகுதி நீராகவும்; நீராக இருந்த பகுதி நிலமாகவும் கூட மாற நேரிடும்.

சுனாமியின்போது அநேகமாக கடலில் உள்ள நீர் தரைப்பகுதிக்குச் சென்றுவிடுவதால் கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகள் கூட எளிமையாகத் தென்படும். மணிக்கு சுமார் 1000 கீ.மீ வேகத்தில் வெகுன்டெழுகிற அலைகள் தன் பாதையில் உள்ள அனைத்தையும் நாசப்படுத்திக் கொண்டே முன்னேறும்.ஒரு சில நிமிடங்களில் நாம் நினைத்துப்பார்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தி விடும்.

கடலில் இருந்து வெளிவருகிற ராட்சத அலைகளில் மாட்டிக்கொள்ளும்போது கூட எப்படியாவது தப்பித்துக்கொள்ள முடியும். ஆனால், இந்த நீர் திரும்ப கடலுக்குள் செல்லும்போது வழியில் உள்ள அத்தனையும் கடலுக்குள் சென்றுவிடும்.

பூமிக்கு அருகே சந்திரன் வரும் ஒவ்வொருமுறையும் சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகமாக ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்தச் சமயங்களில் சந்திரனின் அளவு வழக்கத்தை விட பெரியதாக காட்சியளிக்கும். 1947, 1974,1992, 1995, ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகே சந்திரன் வந்தபோது இதுபோன்ற கோரச் சம்பவங்கள் அரங்கேறின

கடல்

உலகில் இதுவரை ஏராளமான நாடுகளில் சுனாமி தன் கோரத்தாண்டவத்தை நிகழ்த்தியுள்ளது. இவற்றுள் மிக அதிகமான சேதம் 2004 டிசம்பரில் நிகழ்ந்தது. இந்தச் சுனாமியில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாயினர். 

1700களில் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா ஓரிகன் வாஷிங்டன் ஆகிய நகரங்களைத் தாக்கிய பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி ஏற்பட்டது.

1755ல் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் 8.7 ரிக்டர் அளவுள்ள பூகம்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்.

1868ல் சிலியில் ரிக்டர் அளவில் 9 ஆக பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி தென் அமெரிக்காவைத் தாக்கியது. இதில் சுமார் 25 ஆயிரம் பேர் பலியானார்கள்.

1906ல் ஈகுவெடார் மற்றும் கொலம்பிய கடற்கரையில் ரிக்டரில் 8.8 அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் பலியானார்கள்.

1946ல் யுனிமாக் தீவுகளில் 8.1 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் அலாஸ்காவைத் தாக்கியது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துபோனார்கள்.

1960 ல் தெற்கு சிலியில் ஏற்பட்ட சுனாமியின்போது ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 9.5 ஆக பதிவானது.

1976-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சுனாமி ஐயாயிரம் உயிர்களை காவு வாங்கியது. அப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் 9.2 ஆக பதிவாகியிருந்தது

2007 ல் சாலமன் தீவுகளில் 8.1 ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவானது அதனால் ஏற்பட்ட சுனாமியில் 28 பேர் பலியானார்கள்.

2009ல் தெற்கு பசுபிக் பகுதியில் 8.1 என்ற ரிக்டர் அளவில் பதிவான நிலக்கடுத்தால் ஏற்பட்ட சுனாமி நூற்றுக்கணக்கான உயிரை பறித்துச் சென்றது.

2011 - ஜப்பானில் 8.9 ஆக பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி ஜப்பானை நாசமாக்கியது.


டிரெண்டிங் @ விகடன்