அமெரிக்காவை சாம்பலாக்குவோம்... ஜப்பானை மூழ்கடிப்போம்! உக்கிர வடகொரியா | We will finish america and japan says north korea

வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (15/09/2017)

கடைசி தொடர்பு:12:01 (16/09/2017)

அமெரிக்காவை சாம்பலாக்குவோம்... ஜப்பானை மூழ்கடிப்போம்! உக்கிர வடகொரியா

அமெரிக்கா மற்றும் வடகொரியா

.நா. சபை தொடர்ச்சியாகப் பலமுறை எச்சரித்தும் மீண்டும் மீண்டும் வடகொரியா அணு ஆயுதச் சோதனையை நடத்திவருகிறது. எத்தனை முறை எச்சரிக்கை விடுத்தாலும் வட கொரியா தன் அணு ஆயுதச் சோதனையை நிறுத்திக்கொள்ள மறுப்பதுடன், போர் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துவருவதால் உலக நாடுகள் பல, வட கொரியாவின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றன. இதனால் ஐ.நா சபை, வட கொரியாவின்மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தத் தடையால் கடும்கோபம் கொண்ட வட கொரியா, 'விரைவில் அமெரிக்கா சாம்பலாக்கப்படும்; ஜப்பான் கடலில் மூழ்கடிக்கப்படும்' என்று அறிக்கை விடுத்துள்ளது. 

கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வட கொரியா ஆணு ஆயுதச் சோதனையில் இறங்கியது மட்டுமல்லாமல், கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைச் சோதனையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா ஒவ்வொரு முறையும் வட கொரியாவை எச்சரிக்க... அமெரிக்காவுக்காகவே வட கொரியா ஒவ்வொருமுறையும், அணு ஆயுதச் சோதனைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவும் தன் நாட்டுப் போர்க்கப்பலைக் கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பிவைப்பதும், தென் கொரிய நாட்டுடன் போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதும் என வட கொரியாவைப் பயமுறுத்திப் பார்த்தது. ஆனால், இதைப்பற்றி வட கொரியா கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. 

ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்

இந்நிலையில், கடந்த மூன்றாம் தேதி சக்திவாய்ந்த ஹைட்ரஜன் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது வட கொரியா. 'இனி, வேறு வழியே இல்லை' என அமெரிக்கா, ஐ.நா சபையைக் கூட்டி உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வட கொரியாவின்மீது பொருளாதாரத் தடையை விதித்தது. வட கொரியா மீதான இந்தப் பொருளாதாரத் தடைக்கு ஜப்பானும், தென் கொரியாவும் மற்ற நாடுகளைவிட அதிக ஆதரவு அளித்தன. மேலும், வட கொரியாவின் நட்பு நாடான சீனாவும், ரஷ்யாவும் 'பொருளாதாரத் தடை உத்தரவு வரைவில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டன. அதனடிப்படையில், வருடந்தோறும் இரண்டு மில்லியன் பேரல் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதிக்குச் செய்வதற்கும், ஜவுளி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 'வட கொரியாவின் கப்பல்கள் சோதனை செய்யப்படும்' எனவும் பொருளாதாரத் தடை வரைவில் திருத்தம் செய்துள்ளது ஐ.நா சபை. இதனால், வட கொரியாவுக்கு ஆண்டுக்கு 700 மில்லியன் டாலருக்கும் மேல் இழப்புகள் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது.

ஆயுதங்கள்

இதுகுறித்து ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, "ஆபத்துகள் வளர்ச்சிப் பெறுவதை தடுக்கும் விதத்தில்தான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம். தேவைப்பட்டால், தனியாகவே நின்று வட கொரியாவின்மீது அணு ஆயுதச் சோதனையை நடத்தும்" என்று கூறினார். இந்தப் பொருளாதார நடவடிக்கையால் வட கொரியா கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இதற்கு ஐ.நா சபையின் வட கொரியா தூதர் ஹன் தயே சாங் கூறியதாவது, "வட கொரியாவின்மீது ஐ.நா சபை விதித்திருக்கும் இந்தப் பொருளாதாரத் தடை என்பது சட்டத்துக்கு எதிரானது. அமெரிக்கா தனது வரலாற்றில் இல்லாத கடும் வேதனையை அனுபவிக்கும்" என்றார்.

அணுஆயுதம்

"தங்கள் நாட்டின்மீது பொருளாதாரத் தடைவிதித்த அமெரிக்கா விரைவில் சாம்பலாகிவிடும். அதற்குக் காரணமாக இருந்த ஜப்பான் கடலில் மூழ்கிவிடும். நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள ஜப்பான் எப்போதே அணுகுண்டால் கடலில் மூழ்கியிருக்க வேண்டும். இனி, ஜப்பான் எங்கள் அருகில் இருக்கத் தேவையில்லை" என அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் வட கொரியா பகிரங்க அறிக்கை விடுத்திருந்தது. இந்தப் பகிரங்க அறிக்கைக்கு அடுத்த நாளே, ஜப்பான் நாட்டுக்குச் சொந்தமான ஹோக்கைடோ தீவின் வழியாக ஏவுகணைச் சோதனை செய்து மீண்டும் தங்களின் பலத்தை நிரூபித்துள்ளது வட கொரியா. சுமார் 17 நிமிடங்களில் ஹோக்கைடோ தீவின் வழியாகச் சென்ற அந்த ஏவுகணை சுமார் 1,200 மைல் தொலைவில் பசுபிக் தீவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. இந்த ஏவுகணைச் சோதனைக்கு, ஜப்பான் அதிபர் ஷின்ஷோ அபே கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ''வட கொரியாவின் இந்தச் செயல் எங்களை ஆத்திரமூட்டுகிறது. இதை, எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது'' என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அணுஆயுதம்

ஐ.நா சபையின் பொருளாதாரத் தடை, உலக நாடுகளின் எச்சரிக்கை என எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாத வட கொரியா,  அணு ஆயுதச் சோதனையில் மட்டுமே தீவிரம் காட்டிவருவது உலக நாடுகளை ஒருவித பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்