வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (17/09/2017)

கடைசி தொடர்பு:16:45 (17/09/2017)

அமெரிக்காவில் எதிர்ப்புக் கிளம்பும் எண்ணெய் குழாய் பதிப்புத் திட்டம்! #KeystoneXL

"நான் ஒரு விவசாயி, நான் விவசாயம் செய்கிறேன், உணவை உற்பத்தி செய்கிறேன்" என்கிறார், ஜிம் கார்ல்சன். அமெரிக்காவைச் சேர்ந்த மினசோட்டா ஜனநாயக-விவசாயி-தொழிற் கட்சியின் உறுப்பினர். மிகத் தீவிரமான அரசியல்வாதி. இவருடைய சோளம் மற்றும் சோயா விளையும் நிலத்தில் எண்ணெய் குழாய்களை அமெரிக்க அரசாங்கம் பதிக்கப்போகிறது. அதற்காகத்தான் ஜிம் கார்ல்சன் விவசாயி என்ற வாசகத்தை உரக்கப் பேசியிருக்கிறார். இதுதவிர அவர் இன்னும் பேசிய வார்த்தைகள் சற்று உற்றுநோக்க வைக்கிறது. கார்ல்சன் தனக்காக மட்டும் இந்த வார்த்தையைப் பேசவில்லை. அக்குழாய்கள் பதிக்கப்படும் அனைத்து நிலங்களின் உரிமையாளர்களுக்காகவும்தான் இதைப் பேசியிருக்கிறார். "காலநிலை மாற்றம் பற்றிக் கவலைப்படுகிறேன்" என்றும் சொல்லியிருக்கிறார். உலகம் வெப்பமடைவதற்கு முக்கியமான காரணம் பெட்ரோலியம் என்பதை நம்புகிறார்.  நூற்றாண்டுகளைக் கடந்து முன்னோர்கள் கொடுத்த நிலத்தை எண்ணெய் குழாய்கள் பதிப்பதற்கு அரசு எடுத்துக் கொள்ளப்போகிறது என்பதுதான் முக்கியக் காரணம். நெப்ராஸ்காவில் கால்நடைகளுக்கு முக்கியமான தேவையே சோளம் தான்... சரி விஷயத்துக்கு வருவோம். 

ஆயில் குழாய் பதிப்பதற்கான இடம் எண்ணெய்

தமிழகத்தில் பெட்ரோலியம் எரிவாயுக் குழாய்கள், மீத்தேன் குழாய்கள் என எண்ணெயும், வாயுவும் கொண்டு செல்லக் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோலத்தான் அமெரிக்காவிலுள்ள நெப்ராஸ்கா மாகாணத்தில் எண்ணெய் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அதுதான் நெப்ராஸ்கா விவசாயிகளை கொதிப்படையச் செய்துள்ளது. முன்னர் ஒபாமா அதிபராக இருந்தபோது அனுமதியளிக்காத கீஸ்டோன் எக்ஸ்.எல் திட்டம் இப்போது அதிபராகப் பதவி வகிக்கும் டிரம்ப்பால் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டகோடா அணுகல் எரிவாயுக் குழாய்த் திட்டம் கடந்த ஆண்டு முடிக்கப்பட்டது. மொத்தமாக 1,172 மைல்கள் தூரத்திற்கு அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவிலிருந்து இல்லினாய்ஸ் மாநிலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது. அத்திட்டம் முடிக்கப்பட்டு எண்ணெய் செலுத்தப்பட்டது. அப்போது குழாய்களில் இரண்டு இடங்களில் இருந்த துளைகளின் வழியாக சுமார் 350 லிட்டர் எண்ணெய் வெளியானது. அப்போதே அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கீஸ்டோன் எக்ஸ்.எல் திட்டத்திற்கு அனுமதி கிடைத்துவிட்டால் ஹார்டெஸ்டி நகரத்தில் இருந்து கனடாவிற்கு 1,179 மைலுக்குக் குழாய்கள் பதிக்கப்படும். இத்திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதனை கனடாவைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ட்ரான்ஸ் கனடா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இத்திட்டத்தை 2015-ம் ஆண்டு பாரீசில் பருவநிலை குறித்த நிகழ்வில் வேண்டாம் என்றனர். அந்த அளவுக்கு எதிர்க்கப்பட்ட திட்டம் இப்போது டிரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் வெளிவர உள்ளது. இத்திட்டத்திற்காக அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்படும். இந்தப்பகுதி அதிகமாக விவசாயப் பகுதிகளைக் கொண்ட பகுதியாகும். இவ்விளைநிலங்களில் எரிவாயுக் குழாய்கள் பதிப்பதைத்தான் ஜிம் கார்ல்சன் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இவருக்கு ஆதரவாக விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆயில் குழாய் திட்டம்

புகைப்படம் : பாப்புலர் சயின்ஸ்.

ஜிம் கார்ல்சன் எண்ணெய் குழாய்களைப் பதிப்பதில் உள்ள பிரச்சனைகளை "எரிவாயுக் குழாய்கள் பதிப்பதால் மேற்பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு விவசாயம் செய்ய முடியாது. அக்குழாய்கள் பழுதடைந்து விட்டாலோ அல்லது சேதமடைந்து விட்டாலோ அதற்கு நிலத்தின் உரிமையாளர்தான் பொறுப்பு. குழாய்கள் பதித்த பின்னர் எண்ணெய் வெளியாகிவிட்டால் அதற்குப் பின்னர் அந்தந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியாது. இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். குழாய்கள் செல்லும் வழியெங்கும் இருக்கும் நீர்நிலைகள் மாசுபடும். விவசாயம் அதிகமாக நடக்கும் இடங்களில் குழாய்கள் பதித்தல் தவறான ஒன்று. இதற்கு முன்னர் நடந்த எண்ணெய்க் கசிவினால் ஏற்பட்ட பாதிப்புகளை வைத்துப் பார்க்கும்போது இத்திட்டம் ஆபத்தான ஒன்று. பூமி எப்போதும் நிலையான வெப்பத்தில் இருக்காது. அது பருவநிலைக்கு ஏற்றதுபோல மாறுபடும். இதனால் இத்திட்டம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது" என வரிசையாக அடுக்குகிறார். இதே போலத்தான் தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் குழாய்களைப் பதித்திருக்கிறார்கள். வளரும் நாடுகளிலேயே தீர்க்கமாக எதிர்க்கும் திட்டங்கள் நமது நாட்டில் எளிதாக அமல்படுத்தப்படுவது யாருக்காக என்றுதான் தெரியவில்லை. 


 


டிரெண்டிங் @ விகடன்