“இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்!” - ஐ.நா. முற்றத்தில் திரண்ட ஈழத்தமிழர்கள் | Eelam tamils protest at UN geneva

வெளியிடப்பட்ட நேரம்: 22:03 (19/09/2017)

கடைசி தொடர்பு:09:59 (20/09/2017)

“இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்!” - ஐ.நா. முற்றத்தில் திரண்ட ஈழத்தமிழர்கள்

ஈழத்தமிழர் புகைப்படக்காட்சி

ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் 36-வது கூட்டத்தொடர் நடந்துவருவதையொட்டி, இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி, ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலக முற்றத்தில் ஈழத்தமிழர்கள் பேரணி நடத்தினர். இம்மாதம் 10-ம் தேதி தொடங்கிய மனிதவுரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசின் இப்போதைய நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்படும். இதையொட்டி புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பல்வேறு கவனயீர்ப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். 

சுவிட்சர்லாந்து நாட்டின் உள்நாட்டு நேரப்படி நேற்று பிற்பகலில் ஜெனீவா தொடர்வண்டி நிலையப் பூங்கா அருகிலிருந்து ஐ.நா. அலுவலகம் முன்பாக உள்ள முருகதாசன் திடல்வரை பேரணி நடைபெற்றது. கனடா நாட்டிலிருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளியான பெண் ஒருவர், தொடக்கம் முதல் இறுதிவரை பேரணியில் பங்கெடுத்தார். 

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்து படுகொலை செய்யப்பட்ட சுப. தமிழ்ச்செல்வனின் துணைவியார் சசிரேகாவும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டார். 

ஈழத்து திலீபன் மற்றும் முத்துக்குமார் உட்பட்ட ஈழத்துக்காக தமிழ்நாட்டில் உயிர்நீத்த உயிர்த்தியாகிகளின் படங்களும் வைக்கப்பட்டிருந்த மேடை அருகில் பேரணி நிறைவடைந்தது. 

தமிழீழ வரைபடமும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் கட் அவுட்களாக அங்கே வைக்கப்பட்டிருந்தன. இன அழிப்புக்கு நீதி கேட்டு எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் For Tamils Genocide International independant investigation, referendum for Tamil Eelam என்றும் மேடையின் பின்னணி அமைக்கப்பட்டிருந்தது. 

ஈழத்தமிழர் ஆதரவு வைகோ

முன்னதாக, ஐநா மனிதவுரிமைப் பேரவையின் பக்க அமர்வுக் கூட்டங்களில் பேசிய இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் உட்பட பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனா காலத்து நிகழ்வுகளைப் பற்றியும் வைகோ தன் பேச்சில் விவரித்தார். 

முன்னதாக, தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி, கடந்த மாதம் 6-ம் தேதி பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆலோசனை சபைக் கட்டடத்தின் முன்பிருந்து மிதிவண்டிப் பயணம் தொடங்கப்பட்டது. மனிதநேய ஈருளிப் பயணம் என்ற பெயரிலான இந்தப் பயணக்குழுவினர், லக்சம்பர்க், ஜெர்மன், பிரான்ஸ் நாடுகள் வழியாக, காடு, மலை கடந்து காலநிலை பாதிப்புகளையும் மீறி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவரை சென்றனர். இவர்களும் ஐநா முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றனர். 

ஈழத்தமிழர் புகைப்படக்காட்சி ஐநா ஜெனீவா

ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத் தொடரையொட்டி, இலங்கையில் ஈழத்தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளின் புகைப்படங்களை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் கஜன் என்பவர் ஒரு புகைப்படக்காட்சியை அமைத்துள்ளார். மனிதவுரிமைக் கூட்டத்துக்கு வரும் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் படங்களைப் பார்த்து இனப்படுகொலைத் துயரத்தை அறிந்துகொள்கின்றனர். ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் இந்தப் புகைப்படக் காட்சியால், பார்க்கும் மக்களின் மனது கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி, சுவிஸ் போலீஸ் துறையினர் இந்த முறை கெடுபிடி காட்டினர். பின்னர் ஈழத்தமிழர் அமைப்புகள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களின் கோரிக்கைகளை அடுத்து, புகைப்படக் காட்சியை நடத்த இடையூறு நிறுத்தப்பட்டது. 

ஐநா மனிதவுரிமைக் கூட்டம் நடக்கும்வேளையிலேயே அதன் பக்க அரங்கில், தமிழர் அமைப்புகளால் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இலங்கையிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் தமிழீழ ஆதரவுத் தலைவர்கள், பிரதிநிதிகள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் உரையாற்றினர்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close