''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம் | You are the strongest woman I know - Serena Williams emotional letter to her mom

வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (20/09/2017)

கடைசி தொடர்பு:16:11 (20/09/2017)

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்

செரினா வில்லியம்ஸ்

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், இப்போது தாய்மையை முழுமையாக அனுபவித்துக்கொண்டிருக்கிறார். செப்டம்பர் முதல் தேதி, அவருக்குப் பெண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் ஜுனியர் (Alexis Olympia Ohanian Junior) என்று பெயர் சூட்டியிருக்கிறார் செரினா. தாய்மையைக் கொண்டாடும்விதமாக, தனது குழந்தைக்காக இன்ஸ்டாகிராமில் பக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். தன் குழந்தையை அணுஅணுவாக ரசிக்கும் செரினா, தன் தாய் ஒரசினி ப்ரெஸிற்கு (Oracene Price) உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருப்பது இணையத்தில் செம்ம ஹிட்!  செரினாவின் அம்மா ஒரு டென்னிஸ் பயிற்சியாளர். செரினா வில்லியம்ஸிற்கும் அவரின் சகோதரி வீன்ஸ் வில்லியம்ஸிற்கும்  பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.  அந்தக் கடிதத்தின் தமிழாக்கம்... 

அன்புள்ள அம்மாவுக்கு... 

எனக்குத் தெரிந்து, நீங்கள்தான் மிகவும் உறுதியான பெண் அம்மா. இப்போது நான் என் மகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் (ஓ மை காட்! எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது). அவளுக்கு என்னைப்போலவே கைகளும் கால்களும் இருக்கின்றன. மிகவும் உறுதியான, திடமான, சக்திகொண்ட கைகளும் உடலும் அவளுக்கு இருக்கிறது. நான் 15 வயது முதல் இன்று வரை என் வாழ்க்கையில் என்னென்ன அனுபவித்தேனோ, அவற்றை எல்லாம் இவள் எதிர்கொண்டால், என்ன செய்வாள் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். 

என்னைப் பலமுறை ஆண் என்று இந்த உலகம் அழைத்திருக்கிறது. நான் மிகவும் உறுதியானவளாகத் திகழ்ந்தேன். நான் போதை மருந்து உட்கொள்கிறேன் என்று கூறினார்கள். (இல்லை! ஒரு வெற்றியை அடைவதற்கு, நேர்மையற்று நடந்துகொள்ளவேண்டும் என்று அவசியமில்லை.) பெண்கள் பிரிவில் நான் இருக்கக்கூடாது, ஆடவர் பிரிவில் விளையாட வேண்டும் என்று கூறினார்கள். ஏனென்றால், பல பெண் வீராங்கனைகளைவிட நான் மிகவும் வலிமையாக இருக்கிறேனாம். (இல்லை! நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். நான் வலிமையான உடலுடன் பிறந்தேன். அதை நினைத்து மிகவும் பெருமைகொள்கிறேன்) ஆனால், அம்மா! கறுப்பினப் பெண்களின் வலிமையை அறியாதவர்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் ஒவ்வொரு பத்திரிகையாளரையும் அறிவிப்பாளரையும் எப்படி எதிர்கொண்டீர்கள் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். 

கறுப்பினப் பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியதில் நான் பெருமையடைகிறேன். நாம் அனைவரும் ஒரேவிதமாக இருப்பதில்லை. சிலர் நளினமாகவும், சிலர் குட்டையாகவும், சிலர் வலிமையாகவும், சிலர் நெட்டையாகவும், மேலும் சிலர் உறுதியாகவும் இருக்கிறோம். ஆனால், பெண் என்ற ஓர் விஷயத்தில் நாம் அனைவருமே ஒன்றுதான். 

அம்மா! நீங்கள் மிகவும் கம்பீரமானவர். நான் உங்களைப் பின்பற்றவே விரும்புகிறேன். அதாவது, உங்களைப்போல இருக்க முயல்கிறேன். இந்த உலகத்திலேயே உறுதியான பெண் நீங்கள்தான். நான் மிகவும் நீண்ட தூரம் செல்லவேண்டியிருக்கிறது. எனக்கு ஒரு ரோல் மாடலாக நீங்கள் இருந்ததற்கு நன்றி. ஒரு காலத்தில் நான் சந்தித்த கஷ்டங்களை எல்லாம் உங்களின் துணையுடனே கடந்துவந்தேன். அதையேதான் என் குழந்தை அலெக்ஸிஸ் ஒலிம்பியாவுக்கும் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். 

எனக்கான உங்களின் உதவியை நீங்கள் தொடர்வீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள் அம்மா. உங்களைப்போல நான் பொறுமையாகவும், வலிமையாகவும் இருப்பேனா என்று தெரியவில்லை. ஆனால், ஒருநாள் நான் அந்த இடத்தை அடைவேன் என்று நம்புகிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன் அம்மா! 

அன்புடன் 

செரினா வில்லியம்ஸ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்