’பிரியங்காவை சந்தித்ததை நம்ப முடியவில்லை’- நெகிழும் மலாலா

'பிரியங்கா சோப்ராவை சந்தித்ததை என்னால் நம்ப முடியவில்லை’ எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவுசெய்துள்ளார், மலாலா.

மலாலாவுடன் பிரியங்கா

பாகிஸ்தானில், பெண்கள் உரிமைக்காகப் போராடிவந்த மலாலாவின் செயல்களினால் ஆத்திரம் அடைந்தனர், தலிபான் தீவிரவாதிகள். கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ம் தேதி, அவர் பள்ளிக்கூடத்துக்குச் சென்று, பேருந்தில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது,  துப்பாக்கியால் சுட்டனர். இந்தக் கொலை முயற்சியில், மரணத்தின் விளிம்பு வரை சென்று, பின்னர் லண்டனில் சிகிச்சைபெற்றுக் குணமடைந்தார் மலாலா. அதைத் தொடர்ந்து, அவர் அங்கு பர்மிங்ஹாமில் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். தொடர்ந்து, பெண் கல்விக்காகவும் பெண்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்துவருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு, இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து பெண் சுதந்திரத்துக்காகவும் பெண் கல்விக்காகவும் குரல்கொடுத்துவரும் மலாலா, நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட ஐ.நா-வின் பொது மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில், யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள முன்னணி பாலிவுட் நடிகையும், தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டார். இந்த மாநாட்டில், பிரியங்கா சோப்ராவைச் சந்தித்த மலாலா, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, ‘பிரியங்கா சோப்ராவைச் சந்தித்ததை என்னால் நம்ப முடியவில்லை’ என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார். 

 அதற்கு பிரியங்கா சோப்ரா, “மலாலா, உன்னைச் சந்தித்ததில் நான்தான் பெருமைகொள்ள வேண்டும். இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்தச் சிறிய வயதில் எவ்வளவு கனிவுடன், எவ்வளவு சாதனைகளைச் செய்துள்ளாய்” என நெகிழ்ந்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!