வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (22/09/2017)

கடைசி தொடர்பு:23:38 (22/09/2017)

`தமிழ்நாட்டுக்கு நீட் அவசியமில்லை!' - அனிதாவுக்காகக் களமிறங்கிய அமெரிக்கவாழ் தமிழர்கள்

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு, நியூயார்க் நகரில் நாளை அமைதிப் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள், அமெரிக்கவாழ் தமிழர்கள். 'அனிதா போன்று லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பதற்காகப் போராட்டம் நடத்துகிறோம்' என்கின்றனர் போராட்டக் குழுவினர். 

anitha

ப்ளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வு காரணமாக அரியலூர் மாணவி அனிதாவால் மருத்துவப் படிப்பில் நுழைய முடியவில்லை. ஒருகட்டத்தில் மனவேதனையடைந்து, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டும் நீட் தேர்வு முறையை ரத்து செய்யவும் தமிழகம் முழுவதும் மாணவர்களும் பொதுமக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 'அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, அறவழியில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் நடைபெறும் நியூயார்க் நகரில் அமைதிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் அமெரிக்கவாழ் தமிழர்கள். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய போராட்டக் குழுவினர், " மிகவும் ஏழ்மையான சூழலில் வளர்ந்த அனிதா, தனக்கு நிச்சயம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என நம்பிக்கை வைத்திருந்தார். சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின்படியான நீட் தேர்வில்,போதுமான மதிப்பெண்ணை அவரால் வாங்க இயலவில்லை. அவரது மரணம் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி, அனிதா போன்று லட்சக்கணக்கான மாணவர்கள் அரசுப் பள்ளியில் படித்து,  அதிக மதிப்பெண்ணைப்  பெற்றிருந்தாலும், நீட் தேர்வில் தோல்வியடைந்து,  தங்களின் மருத்துவர் கனவைப் பறிகொடுத்துள்ளனர். தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிக்கு நியாயம் கேட்டும், அனிதா போன்ற பிற குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். 

இதுவரை வட அமெரிக்கத் தமிழர்கள் பல்வேறு மாநிலங்களில் சுமார் 35-க்கும் மேலான போராட்டங்களையும் நினைவேந்தல் கூட்டங்களையும் நடத்தியுள்ளனர். கடந்த வாரம் வாஷிங்டன் டி.சி, சிகாகோ, நியூயார்க், அட்லாண்டா மற்றும் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரங்களில், தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்பதை வலியுறுத்தியும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டியும், இந்தியத் தூதரங்கள் முன் போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, நாளை அமைதிப் போராட்டம் நடக்கவிருக்கிறது. இந்தப் போராட்டத்தில், நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட், பென்சில்வேனியா, டெலவேர் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். எங்களுக்கு பிறப்பு கொடுத்த மண் அது. செய்தியைப் பார்த்துவிட்டுக் கடந்துபோகாமல், குரல் கொடுக்கவும் கரம் கொடுக்கவும் நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்" என்கின்றனர் அழுத்தமான குரலில்.