வெளியிடப்பட்ட நேரம்: 20:04 (22/09/2017)

கடைசி தொடர்பு:20:04 (22/09/2017)

பொதுவெளியில் சிறுநீர் கழித்த பெண்ணுக்கு அபராதம்! பின்னர் நடந்ததுதான் ஆச்சரியம்!

பெண்

நெதர்லாந்து தலைநகரான ஆம்ஸ்டர்டாம் சாலையில் சிறுநீர் கழித்ததாக ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு, மிகப்பெரிய எழுச்சியைப் பெண்களிடம் ஏற்படுத்தியுள்ளது. 

2015-ம் ஆண்டு தன் நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு இரவு திரும்பிக்கொண்டிருந்தார், 23 வயதான கீர்ட் பைனிங். அப்போது, இயற்கை உபாதையைக் கழிக்க அருகில் பெண்களுக்கான கழிவறை இல்லாததால், பொதுவெளியில் சிறுநீர் கழித்துள்ளார். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தற்போது 90 யூரோ (இந்திய மதிப்பில், ஏழாயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பு வழங்கிய நீதிபதி, '‘நீங்கள் ஆண்களுக்கான கழிவறையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்’ என்று சொன்னதுடன், ‘'அது அவ்வளவு இனிமையானதாக இருக்காது என்றாலும், சாத்தியமுள்ள வழிமுறைதான்’' என்று அருவருக்கத்தக்கக் கருத்தையும் கூறியுள்ளார். 

அது மட்டுமா? இதுபோன்று பெண்கள் பொதுவில் சிறுநீர் கழித்த வழக்குப் பதிவுசெய்யப்படுவது இது இரண்டாவது முறைதான் என்பதால், பெண்களுக்கான கழிவறைகளை அதிகப்படுத்தச் சொல்லி, கவுன்சிலுக்கு கட்டாயப்படுத்தப் போவதில்லை என்றும் அந்த நீதிபதி தீர்ப்பில் சொல்லியிருக்கிறார். 

ஆண்கள் நின்றுகொண்டே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கழிவறையை, ஒரு பெண் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று ஒரு நீதிபதி கூறியது பெண்களிடம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 'பொதுவெளியில் சிறுநீர் கழிப்போம்' (#wildplassen) என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். கீர்ட் பைனிங் சிறுநீர் கழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட அதே இடத்தில், கடந்த 20-ம் தேதி பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் போராட்டத்தை நடத்த ஒரு குழுவினர் அழைப்பு விடுத்தனர். அதன் பெயரில் 1,100 பெண்கள் அந்தப் போராட்டத்துக்குச் செல்வதாகவும், பல்லாயிரம் பெண்கள் அந்தப் போராட்டத்துக்கு விருப்பம் தெரித்தும் இருந்தனர். இதற்கான ஆதரவு பெருகியதால், அந்தப் போராட்டத்தை கைவிட்டு, நாளை எல்லாக் கழிவறைகளுக்கு அருகிலும் கூடும்படி, கிட்டத்தட்ட 10,000 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

”அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஆம்ஸ்டர்டாமில், இதுபோன்று பெண்களுக்கு கழிவறை இல்லாதது அவமானகரமானது” என்கிறார்கள் ஆம்ஸ்டர்டமைச் சேர்ந்த பெண்கள். 

ஒவ்வொரு வருடமும் 4.63 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஆம்ஸ்டர்டாமைச் சுற்றிப் பார்க்க வருகிறார்கள். ஆண்களுக்கான கழிவறைகள் 35 இருக்க, பெண்களுக்கு வெறும் நான்கு கழிவறைகளே உள்ளன. 

”முதலில் என் பெயர் இதில் வருவது பிடிக்கவில்லை. பின்னர்தான் இதை எதிர்த்து நான் போராடியே ஆக வேண்டும் என்று முடிவுசெய்தேன். இதுபோன்ற பெரிய எழுச்சியை என் வழக்கு ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. இது முக்கியமாக பேசப்பட வேண்டிய பிரச்சனை என்பதால், எனக்கு மகிழ்ச்சிதான்” என்கிறார் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கீர்ட் பைனிங். இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்போகிறார். 

முன்னேறிய ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஒரு நகரத்திலேயே இந்த நிலை என்றால், இந்தியாவிலோ, கழிவறையே இல்லாத வீடுகளின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கான பிரசாரமும் நிதி ஒதுக்கலும் அரசு செய்தாலும் அவை போதாது என்றே சமூக ஆர்வலர்களின் கருத்து. ஆண்களைவிடச் சிறுநீர் தாங்கும் பை பெண்களுக்கு சிறியது என்றாலும், உலகம் முழுக்கவே பெண்களுக்கான கழிவறை விஷயத்தை அரசுகள் அக்கறை காட்டுவதில்லை என்பது வேதனையான உண்மை. இந்த நிலை மாற வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் விருப்பமும். ஆனால் அந்த நாள் எந்த நாளோ?
 


டிரெண்டிங் @ விகடன்