மேலும் மூன்று நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை! ட்ரம்ப் அறிவிப்பு | North Korea, Venezuela, Chad among 8 countries on new US travel ban

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (25/09/2017)

கடைசி தொடர்பு:08:15 (25/09/2017)

மேலும் மூன்று நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை! ட்ரம்ப் அறிவிப்பு

மேலும், மூன்று நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று ஒரு வருடம் ஆகப்போகிறது. அவர், அதிபரானது முதலே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, சர்ச்சையைக் கிளப்பிவருகிறார். அதில் முக்கியமான ஒன்று, 6 முஸ்லிம் நாடுகள், அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்த அறிவிப்பு. பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஈரான், லிபியா, சிரியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய ஆறு நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாள்கள் தடை விதித்தார்.

இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு முதலில் தடை விதித்த நீதிமன்றம், பின்னர், சில திருத்தங்களுடன் அதற்கு அனுமதி அளித்தது. இதனிடையே, 90 நாள் தடை நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, அதிபர் ட்ரம்ப் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிபார்க்கப்பட்டது.

அதன்படியே, அவர் எட்டு நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து, புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளர். இந்தப் பட்டியலில் வட கொரியா, வெனிசுலா, சாட் உள்ளிட்ட மூன்று நாடுகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்த பட்டியலிலிருந்து சூடான் நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்காவின் பாதுகாப்புக்கே என் முதல் முக்கியத்துவம் இருக்கும். நாட்டின் பாதுகாப்புக்காக, அவர்களை (எட்டு நாடுகள்) எங்களது நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.