Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“மக்களாட்சி, அமைதி, சுற்றுச் சூழல்... இவை மூன்றுக்கும் தொடர்பில்லையா?” - மரங்களின் தாய் வங்காரி மாத்தாய் #WangariMaathaiMemories

வங்காரி மாத்தாய்

இயற்கைக்கும் பெண்களுக்கான தொடர்பு ரொம்பவும் உறுதியானது. இயற்கையைப் போலவே பெண்ணின் உடலும் மீள் சுழற்சியில் ஈடுபடுவதால் சுற்றுச்சூழல் மீதான ஈர்ப்பும் அவற்றைக் காக்க வேண்டும் எனும் ஆர்வமும் பெண்களுக்கு இயல்பாகவே உள்ளது. விவசாயத்தைக் கண்டறிந்ததே பெண்கள்தான் என்றும் சொல்வார்கள்.

கென்யா நாட்டின் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி இகதி எனும் சிறிய ஊரில் பிறந்தவர் வங்காரி மாத்தாய். மிக எளிய குடும்பம் அவருடையது. அந்தக் காலத்தில் பெண்களுக்குத் தொட முடியாத உயரத்தில் இருந்தது கல்வி. ஆனால், இவரின் சகோதரர் தந்த ஊக்கத்தினால் படிக்கத் தொடங்கினார். மிகுந்த ஆர்வத்துடன் படித்த இவர் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடித்தார். கென்யா நாட்டில் முதன்முதலாக டாக்டர் பெற்ற பெண் எனும் பெருமையைச் சூடிக்கொண்டார். நைரோபி பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியில் சேர்ந்தார். அப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் இவர்தான். 

இவர் அமெரிக்காவில் இருந்தபோது மாட்டின் லூதர் கிங் நடத்திய போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். தனது தாய்நாட்டிலும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது. அந்த எண்ணம்தான் அவரைப் பேராசிரியர் பணியைத் துறக்கச் செய்தது. பசுமை பட்டை எனும் சுற்றுச்சூழலைக் காக்கும் இயக்கத்தைத் தொடங்கினார். தனது வீட்டில் அருகே ஒன்பது மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தார். உலகைச் சமநிலைப்படுத்தும் இயற்கையைப் பாதுகாக்க, ஆப்பிரிக்க வன வளத்தைக் காக்கவும் தனது பணிகளை வரையறுத்துக்கொண்டார். ஊர், ஊராகச் சென்று ஏழை, எளிய மனிதர்களிடம் குறிப்பாகப் பெண்களிடம் பேசினார்.   

முப்பது ஆண்டுகளில் 3 கோடி மரங்கள் எனும் வியக்க வைக்கும் இலக்கைத் தன் இயக்கத்தின் குறிக்கோளாக்கிக் கொண்டார். சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் கல்வி சாந்த விழிப்புஉணர்வுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பெண்களுக்கான தேசிய கவுன்சிலிங் தலைவியானார். இதனால் தனது கோரிக்கைகளை நாடு முழுவதும் கொண்டு செல்லத் தொடங்கினார். அது சிலருக்குச் சிக்கலை உருவாக்கியது. 

வங்காரி மாத்தாய்

நைரோபில் நகரில் இருந்த ஒரேயொரு பூங்கா உகூரு. பலரும் பிடித்தமான அந்தப் பூங்காவை அழித்துப் பல மாடிக் கொண்ட கட்டடம் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டது. இந்தச் செய்தி கேட்டதும் அதைத் தடுக்க வாங்கரி மாத்தாய் கடுமையான போராட்டத்தை மேற்கொண்டார். பல விதங்களில் அந்தப் போராட்டத்தை அரசு முடக்கப்பார்த்தது. ஆனாலும் வெற்றி வங்காரி மாத்தாய்க்கே. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாமல் பின் வாங்கியது அரசு. 

2002-ம் நடந்த கென்யா தேர்தலில் போட்டியிட்ட வாங்கரி மாத்தாய் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். சுற்றுச் சூழல் இணை அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார். இயற்கையைப் பாதுகாக்க எண்ணற்ற முயற்சிகளை எடுத்தார். அதேபோலப் பெண்கள் முன்னேற்றத்துக்கான அடிப்படை வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் அவர் மறக்க வில்லை. இதன் காரணமாக அவருக்கு 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. நோபல் பரிசுப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணியும் இவரே. அதில் அவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது. ஏனெனில் சுற்றுச் சூழலைப் பாதுக்காக்க வேறு எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகப் பேசியது. 

“பலபேர் கேட்கிறார்கள் மக்களாட்சிக்கும், சுற்றுச் சூழலுக்கும், அமைதிக்கும் என்ன தொடர்பு? என்று. அவர்கள், இந்த மூன்று கருதுகோள்களையும் தனித்தனியே சிந்திக்கப் பழகிவிட்டார்கள்.”

“மக்களுக்குக் கற்பிக்க முடிவெடுத்தோம். சமூக, சுற்றுச்சூழல் கல்வித்திட்டம் ஒன்றை அமைத்தோம். ஏன் மரங்கள் நமக்கு அவசியம்; ஏன் அவை சூழலைக் காப்பாற்றவும் நமது தேவைகளைப் பூர்த்திச் செய்துகொள்வதற்கும் அவசியமாக இருக்கின்றன என்பதை மக்கள் உளப்பூர்வமாக உணரச் செய்ய நினைத்தோம். அப்போதுதான், நான் மனித உரிமை மீறலை சந்தித்தேன். அரசு சொன்னது, நீங்கள் கூடிப்பேசலாம், ஆனால் 9 பேருக்கு மேல் கூடினால் உங்களிடம் அனுமதிச்சீட்டு இருக்க வேண்டும். அப்போது நான் இன்னொரு மனிதரிடம் பேசி ஒரு குழிதோண்டி மரம் ஒன்றை நட அவரை வற்புறுத்துவதற்கு நான் ஏன் அனுமதி பெறவேண்டும்? அதற்கு அரசாங்கம் சொன்னது ஏனென்றால், அதுதான் சட்டம். ஒன்பது பேருக்கு மேல் கூடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

அதுதான் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அல்லது அழிப்பதற்கும் மக்களாட்சி எத்தகைய பங்கை ஆற்றுகிறது என்பதை நான் புரிந்துகொள்வதற்கான ஆரம்பம். நாங்கள் சட்டத்தை எதிர்க்க முடிவு செய்தோம்.”  

“நோபல் பரிசுக்குழு, சுற்றுச்சூழல், மக்களாட்சி மற்றும் அமைதி குறித்து எங்களது எண்ணங்களை மாற்றும் ஒரு மிகப்பெரிய சவாலை எங்கள் முன்வைத்துள்ளது. இவை அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளவை, ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை அணுக முடியாது என்பதை உணர ஆரம்பித்துள்ளோம்.”

மேற்கண்ட பகுதிகள் நோபல் உரையில் உள்ளவை. (புது விசை இதழில் வெளியானது. மொழிபெயர்ப்பு மலைவாசி) இயற்கையைப் பாதுகாக்க அடிப்படையான விஷயங்களைத் தன் வாழ்க்கையின் ஒவ்வோர் அனுபவத்திலிருந்து கற்றுகொண்டார் வங்காரி மாத்தாய். அதனால்தான் உணர்வுபூர்வமாக அந்தப் பணியில் ஈடுபட அவரால் முடிந்தது. 

தன் வாழ்க்கையைச் சுற்றுச் சூழலை நேசிக்க என அர்ப்பணித்த வங்காரி மாத்தாய் 2011-ம் ஆண்டு, செப்டம்பர் 25-ம் நாளன்று இறந்தார். அவரின் நினைவுத் தினம் இன்று. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement