“பனி”யின் பூர்வகுடிகளையும் விட்டு வைக்காத உலகமயமாக்கல் உஷ்ணம்! #MustKnow | The Natives of Arctic Tandura Faces a New Problem

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (26/09/2017)

கடைசி தொடர்பு:11:41 (26/09/2017)

“பனி”யின் பூர்வகுடிகளையும் விட்டு வைக்காத உலகமயமாக்கல் உஷ்ணம்! #MustKnow

"ட்ட்ட்ரூரூ...", "ஸூஸூம்ம்ம்ம்", "ட்ரூரூம்ம்ம்ம்" என அந்தச் சத்தம் தூரத்தில் கேட்கத் தொடங்கி, கொஞ்சம், கொஞ்சமாக சத்தம் நெருங்குகிறது. அங்கு நின்று கொண்டிருக்கும் மான் கூட்டத்திற்கும் சத்தம் கேட்காமல் இல்லை. [அது முழுமையான பனிப் பிரதேசம் என்பதால் அங்கிருந்தது கலைமான் என்று சொல்லப்படும் ரெய்ண்டீர் (Reindeer)] அந்தச் சத்தம் நெருங்குவது தெரிந்ததும் லேசாக நகர ஆரம்பிக்கிறது. அந்தக் கூட்டத்தில் சின்ன சலசலப்பு. அந்த வெள்ளைப் பனியில் இரு கோடுகளை வரைந்தபடியே வேகமாக வருகிறது அந்த ஐஸ் ஸ்லெட்ஜ் வண்டி (Ice Sledge). அதன் முன்னர் யமஹா என்று எழுதியிருக்கிறது. வெள்ளை நிறப் பனிமீது அந்தக் கருப்பு நிற ஸ்லெட்ஜ் பளிச்சென்று தெரிந்தது. அந்த ஸ்லெட்ஜை ஓட்டிக் கொண்டு வந்தவரின் முகம் அத்தனை தெளிவாக தெரியவில்லை. மான் தோலினால் ஆன ஒரு பெரிய உடையை அவர் அணிந்திருந்தார். அவர் வண்டியில் பின்னால் ஒரு மர ஸ்லெட்ஜ் கட்டி இழுக்கப்பட்டு வந்தது. அதில் மூன்று பொடியன்கள். அவர்களின் முகமும் தெரியாத வகையில் உடையணிந்திருந்தார்கள். அந்த வண்டியைக் கண்டதும், மான்கள் தெறித்து ஓட ஆரம்பித்தன. அந்த மனிதர் வண்டியை முழுமையாக நிறுத்தாமலேயே அதிலிருந்து வெளியே குதிக்கிறார். அது ஒரு பனி மேட்டில் முட்டி நிற்கிறது.

பனியின் பூர்வகுடிகள்

Photo Courtesy : DMITRY TKACHUK

கையில் பெரிய கயிரை சுழற்றியபடியே ஓடுகிறார். அதை ஒரு மானை நோக்கி வீசுகீறார். குறி தப்பிவிடுகிறது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த மூவரில் ஒரு பொடியன் கையில் கயிறுடன் இறங்கி ஓடுகிறான். இரண்டாவது முயற்சியில் ஒரு மானை பிடித்துவிடுகிறான். அவன் அப்பாவே ஒரு நொடி ஆச்சர்யப்பட்டுவிட்டார். அப்போது திடீரென வேகமாகக் காற்று அடிக்கத் தொடங்குகிறது.

அடிக்கும் காற்று பனியைப் புழுதியாய் பறக்க வைக்க, பத்தடி தூரத்தில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. அந்தப் பொடியன் மீண்டும் வண்டியில் ஏறவில்லை. மானைப் பிடித்து இழுத்தபடியே நடக்கத் தொடங்கினான். அவன் கால்கள் அந்தப் பனியில் புதைந்து, புதைந்து எழுந்தன. கொஞ்சதூரம்தான் நடந்தான். அதற்குள் அந்த வீடு வந்துவிட்டது. வீடு ஒரு கூடாரம். அதைப் பார்த்தாலே அந்தக் குளிருக்கு இதமாக அது இருக்கும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த வண்டியின் சத்தம் கேட்டு அந்தக் கூடாரத்திலிருந்து ஒரு தாத்தாவும், பாட்டியும் வெளியே வருகிறார்கள். தன் பேரப் பிள்ளைகளைக் கண்டதும் அந்தப் பாட்டிக்கு அத்தனை மகிழ்ச்சி. வெடிப்பும், சுருக்கமும் கண்டிருந்த அந்த முகத்தில் அப்படியொரு சிரிப்பை வெளிப்படுத்துகிறார். அந்தப் பொடியனும் மானை அங்கிருந்த மர வேலி ஒன்றில் கட்டிவிட்டு பாட்டியிடம் ஓடுகிறான். மற்ற இருவரும் வண்டியிலிருந்து இறங்கி ஓடுகிறார்கள்.

பனியின் பூர்வகுடிகள்

மூவரையும் கட்டியணைத்தபடியே அவர்களை அந்தக் கதகதப்பான கூடாரத்திற்குள் அழைத்துச் செல்கிறார் அந்தப் பாட்டி. அவர்களின் அந்த அழகான வீட்டிற்குள் எட்டிப்பார்க்காமல் இவர்கள் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். வேண்டுமானால்... அங்கு தனித்துக் கட்டப்பட்டிருக்கும் அந்த மான் பக்கம் உட்கார்ந்து இந்த இடத்தையும், இவர்களையும் தெரிந்துகொள்ளலாம்.

பனியின் பூர்வகுடிகள்

இது ரஷ்யாவின் வடக்குப் பகுதி. ஆர்க்டிக் பிரதேச பகுதி. இதை "ஆர்க்டிக் தண்ட்ரா" (Arctic Tundra) என்று சொல்வார்கள். தண்ட்ரா என்பது நிரந்த உறை பனி இருக்கும் பகுதி. பெரிய மரங்கள் அற்ற குளிரான பகுதி. இங்கு குளிர் காலங்களில் வெப்பநிலை (-)50 டிகிரியாக இருக்கும். சாதாரண மனிதர்களால் தாங்கிடவே முடியாத குளிர். ஆனால், இந்த மண்ணின்... இங்கு மண்ணே கிடையாது. மண் முழுக்கவே பனியால் மூடப்பட்டே இருக்கும். எனவே, இவர்களை அந்தப் பனியின் பூர்வகுடிகள் என்றே அழைக்கலாம். இந்த இனத்தை "நெனெட்ஸ்"  (Nennets) என்று அழைக்கிறார்கள். இவர்கள் ஒரு நாடோடி இனம். உறைபனியும், குளிரும் இவர்கள் வாழ்வின் அங்கம். ஆனால், இப்போது ஆழமாக இவர்கள் வாழ்வை நாம் ஆராயப் போவதில்லை. சமீபகாலமாக இவர்களின் அடுத்த தலைமுறை ஒரு பெரும் முரண்பாட்டுச் சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

பனியின் பூர்வகுடிகள்

உலகமயமாக்கலும், புவி வெப்பமயமாதலும் இவர்களுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. உலகமயமாக்கலின் தாக்கத்தினால் இவர்களுக்கு வெளியுலக தொடர்பு அதிகமாகியிருக்கின்றன. அதன் பொருட்டு இந்த இனத்தின் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நகரங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு அனுப்ப விருப்பப்படுகின்றனர். அந்தப் பிள்ளைகளை ஹாஸ்டலில் தங்கவைக்கின்றனர். அவர்கள் அங்கு கணிதம், அறிவியல், கம்ப்யூட்டர் என வழக்கமான குழந்தைகள் படிக்கும் பாடங்களைப் படிக்கத் தொடங்குகின்றனர். இந்த வாழ்க்கைக்கு சில குழந்தைகள் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், சிலரால் அது முடிவதில்லை. அந்தப் பிள்ளைகள் பல சமயங்களில் ஹாஸ்டலைவிட்டு வெளியேறி தங்கள் வீட்டுக்கு வர முயற்சி செய்கின்றனர். அப்படி சமீபத்தில் வீட்டிற்கு வர ஆசைப்பட்டு கிளம்பிய சில குழந்தைகள், இரண்டு நாள்கள் பனி மலைகளைக் கடந்து நடந்து வந்து, அவர்களின் கிராமத்திற்கு முன்னர் ஒரு பனிப் புயலில் சிக்கி விறைத்து இறந்து போயினர். இது அந்த இனத்தவர்களுக்குப் பெரும் துயரத்தைக் கொடுத்தது. 

பனியின் பூர்வகுடிகள்

Photo Courtesy : Ikuru Kuwajima

இந்தப் பிரச்னைகளுக்கு மாற்றாக அந்த இனத்தைச் சேர்ந்த அன்னா நெர்காகி (Anna Nerkagi) என்பவர் அந்தக் கிராமத்திலேயே ஒரு சின்ன பள்ளிக்கூடத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். "ஒரு கல்வி என்பது வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். அந்தக் கல்வி அவர்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர, அவர்கள் அதிலிருந்து அந்நியப்பட்டு போய்விடக் கூடாது." என்ற கருத்தை முன்வைக்கிறார் அன்னா நெர்காகி.

அவர் தன் பள்ளிக்கூடத்தில் மரம் அறுப்பது, மான் பிடிப்பது, வீடு கட்டுவது, சமைப்பது தொடங்கி ஒரு தற்சார்பு வாழ்கைக்கான அனைத்து முறைகளையும் கற்றுத் தருகிறார். கூடவே தங்கள் இனத்தின் வரலாற்றையும், ரஷ்ய வரலாறு, ரஷ்ய மொழி, ரஷ்ய இலக்கியம் எனப் பல விஷயங்களையும் கற்றுத் தருகிறார். சில பெற்றோர்கள் இதுதான் சரி என்று தங்கள் பிள்ளைகளை இதில் சேர்த்துவிடுகின்றனர். சிலரோ நகர பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அங்கு போவதிலும் சில குழந்தைகள் மட்டுமே அந்த நகரச் சூழலை விரும்பி வாழ்கின்றனர். சிலர் அதில் ஒட்டாமலேயே இருந்து, படிப்பை முடித்தவுடன் ஊருக்குத் திரும்பிவிடுகின்றனர். அன்னாவின் பள்ளியில் படிப்பவர்களோ பெரும் இயற்கைக் காதலர்களாகவும், தற்சார்பு வாழ்வியலாளர்களாகவும் அத்தனை மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர். 

பனியின் பூர்வகுடிகள்

உலகமயமாக்கலின் சிக்கல் இதுவென்றால், பூமி வெப்பமயமாதலின் கேடுகளை நேரடியாகச் சந்தித்து வருகிறது இந்த இனம். ஆர்க்டிக் பிரதேசம் என்பதால் பல இடங்களில் பனி உருகத் தொடங்குகிறது. சீதோஷ்ணத்திலும் திடீர், திடீரென பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. எல்லாம் கடந்து இந்த நொடியை அத்தனை இன்பமாய் வாழ்ந்து வருகிறது இந்த இனம்.

பனியின் பூர்வகுடிகள்

அந்தப் பொடியன்கள் பாட்டியோடு வெளியே வருகிறார்கள். இதோ, இந்த மானை நெருங்கித்தான் வருகிறார்கள். நாம் நகர்ந்துகொள்வோம். அவர்கள் வந்து அந்த மானின் கயிற்றைக் கழட்டுகிறார்கள். அதை அன்போடு தடவிக் கொடுக்கிறான் ஒரு பொடியன். ஒருவன் தாவி குதித்து அதன் கொம்புகளைத் தொட்டுப் பார்க்கிறான். சில நிமிடங்கள் நடக்கிறார்கள். அங்கு வேலி அமைக்கப்பட்டு நிறைய மான்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்தன. பாட்டி அந்த மானை அதில் கொண்டு சேர்த்தார். மான் அதைக் கண்டதும் அத்தனை மகிழ்ச்சியோடு குதித்து அந்தக் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டது. பொடியன்கள் சிரித்தபடியே பாட்டியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அந்தக் கூடாரத்திற்குள் நுழைந்தார்கள். நாம் விடைபெறலாம்.                       

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்