வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (26/09/2017)

கடைசி தொடர்பு:10:50 (26/09/2017)

’ட்ரம்ப் ஏற்கெனவே போரை அறிவித்துவிட்டார்; பதிலடிக்கு நாங்களும் தயார்’ - வட கொரியா ஆவேசம்!

வட கொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹொ, “அமெரிக்க ஏற்கெனவே போரை அறிவித்துவிட்டது” எனத் தெரிவித்தார். 

கடந்த சில வாரங்களாக அமெரிக்கா - வட கொரியா இடையே போர் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. வட கொரியா தொடர்ந்து பல்வேறு விதமான அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகள் எச்சரித்தும் வட கொரியா தொர்ந்து அத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்தது. இது அமெரிக்காவுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது. 

இந்நிலையில் கடந்த வாரம் ஐ.நா பொது சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “நாங்கள் தாக்குதலை ஆரம்பித்தால் வட கொரியா முழுவதும் அழித்து விடுவோம்” எனத் தெரிவித்திருந்தார். அதோடு கடந்த சனிக்கிழமை அன்று, அமெரிக்க போர் விமானங்கள் சில வட கொரியாவின் கடற்பகுதியில் பறந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே போரை அறிவித்து விட்டார். அதனால் எங்களுக்குப் பதிலடி கொடுக்க முழு உரிமை உள்ளது. அவர்களின் குண்டுகளைத் தகர்ப்போம்” என்றார். 
இது குறித்து பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், ”நாங்கள் வட கொரியாவுக்கு எதிராக போர் அறிவிக்கவில்லை. அவர்கள் அவ்வாறு கூறுவது அபத்தமானது” என்றார்.