பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: நவாஸ் மகள், மகன்களுக்குப் பிடிவாரன்ட்! | warrant issued on Nawas sherif’s daughter and his sons

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (26/09/2017)

கடைசி தொடர்பு:15:25 (26/09/2017)

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: நவாஸ் மகள், மகன்களுக்குப் பிடிவாரன்ட்!

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் மகள் மற்றும் மகன்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரிஃப்

பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீ ஃப் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை தீவிரமடைந்துவருகிறது. உலகிலுள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்துவருவதாக, பனாமா லீக்ஸ் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது. நவாஸ் ஷெரீஃப் மட்டுமல்லாமல், அவரின் மகள் மற்றும் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள்மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து,  நவாஸ் பிரதமர் பதவியை இழக்கும் அளவுக்கு விவகாரம் தீவிரமடைந்தது.

இதுவரை நடந்துவந்த விசாரணைகளின்போது நவாஸ் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தனது மனைவி லண்டனில் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் காரணத்தால், ஆஜராக முடியவில்லை என விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பின்னர் ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக, லண்டனிலிருந்து நேற்று பாகிஸ்தான் வந்த நவாஸ் ஷெரீஃப் இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய கணக்கியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னர் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்ததால் நவாஸின் மகன்கள் மற்றும் மகள் மீது பிடிவாரன்ட் பிறப்பிப்பதாக உத்தரவிட்டார் நீதிபதி. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 2-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.