”நாங்க ஆண்களுக்கு எதிரியல்ல!” பெண்ணிய மீம்ஸில் கலக்கும் ‘கருத்து கண்ணம்மா’ பக்கம் #BreakingStereotypes | This Facebook page speaks feminism through memes

வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (26/09/2017)

கடைசி தொடர்பு:20:26 (26/09/2017)

”நாங்க ஆண்களுக்கு எதிரியல்ல!” பெண்ணிய மீம்ஸில் கலக்கும் ‘கருத்து கண்ணம்மா’ பக்கம் #BreakingStereotypes

கருத்து கண்ணம்மா

ந்த ஃபேஸ்புக் பக்கத்தில், பெரும்பாலும் பெண்ணியம் பேசும் மீம்ஸ், பதிவுகள், வீடியோக்கள் எனப் பார்த்ததுமே கவர்கிறது. பெண்கள் அணியும் உடை முதல் திருமணத்துக்குப் பிறகு அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது வரை காலங்காலமாக இந்தச் சமுதாயத்தில் கூறிவரும் பல கற்பிதங்களை உடைத்து, ஜாலியாகவும் அழுத்தமாகவும் பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அதுதான், ‘கருத்து கண்ணம்மா'.

பெண்ணுரிமை, பெண்ணியம் பற்றி மேம்போக்கான விஷயங்களாகப் பேசாமல், ‘ஃபெமினிஸத்தை’ பெண்கள் எப்படித் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதற்கும் இங்கு மீம்ஸ்கள் போட்டுக் கலாய்க்கின்றனர். யார் இந்தக் கருத்து கண்ணம்மா என்று அறிய ஆவலுடன் மெஜஞ்சரில் பிடித்தோம்.

கருத்து கண்ணம்மா“நாங்க யாரு, என்ன பண்றோம், இந்தப் பக்கத்தை ஏன் நடத்துறோம்னு நிறையப் பேர் கேட்டுட்டாங்க. நாங்க ரெண்டு பேர். மலேசியாவில் இருக்கும் இந்தியர்களே. எங்க 'கருத்து கண்ணம்மா' பக்கத்தை, 2015 அக்டோபர் மாசம் ஆரம்பிச்சோம். அந்தச் சமயத்தில், உடை அணிவதில் ஆரம்பிச்சு சமூகப் பிரச்னையைப் பற்றி பதிவுபோடறது பெண்கள் எது செய்தாலும், ரொம்ப மோசமா ‘ட்ரோல்’ பண்ணி மீம்ஸ் போட்டுட்டிருந்தாங்க. அது என்ன பெண்களை ட்ரோல் செய்றது? அவங்களுக்கும் சுயமரியாதை இருக்கில்லியா? ஒரு வெறுப்பு விருப்பு இருக்கும்தானே? அவங்க எந்த விஷயம் பற்றி கருத்துச் சொன்னாலும், கேரக்டரை மோசமா விமர்சனம் பண்ணி பதிவு போடுவாங்க. அதைப் பார்த்துதான் இந்தக் ‘கருந்து கண்ணம்மா’ பக்கத்தை ஆரம்பிச்சோம். நாங்க இந்திய கலாசாரத்தில் வளர்ந்தவங்க. சாதி, மதம் பெயரில் பெண்களை எப்படி இந்தியச் சமூகம் அடிமைப்படுத்தி வெச்சிருக்குன்னு நல்லாவே தெரியும். அதையெல்லாம் உடைக்கறதுக்குத்தான் எங்க பக்கத்தின் நோக்கம். இதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. இந்தியா, இலங்கையிலிருந்து சிலர், எங்களோடு இணைஞ்சு வேலை பார்க்கிறாங்க” என்கிறார்கள் முகம் காட்ட விரும்பாத அந்தத் தோழிகள்.

'கருத்து கண்ணம்மா' என்கிற பெயருக்கு காரணம்?

“எங்க பக்கத்துக்காகப் பெயர் தேடும்போதே, ரொம்ப சீரியஸா இல்லாமல், ஜாலியாகவும் இருக்கணும்னு முடிவு செஞ்சோம். கண்ணம்மா என்று சொன்னதும், பாரதியார் பாட்டுல எடுத்ததானு பலரும் கேட்டாங்க. அப்படியில்லைன்னு சொல்லிக்கிறோம். ஏன்னா, எங்க பக்கத்தில் சில சமயம் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவோம். சில விஷயங்களை அழுத்தமா சொல்றதுக்காக அப்படி பயன்படுத்துறோம். அதனால், பாரதியாரை இங்கே குறிப்பிட விரும்பலை. இந்தப் பக்கத்தின் முகப்பில், நான்குப் பெண்கள் இருக்கிற மாதிரியான படத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அவங்க நாலு பேருமே, இந்தச் சமூகம் பெண்களுக்கு குறிச்சு வெச்சிருக்கிற உடை கட்டுப்பாடுகள் இல்லாமல், அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருப்பாங்க. இப்படி, சின்னச் சின்ன விஷயத்திலும் அக்கறை எடுத்து, இந்தப் பக்கத்தை உருவாக்கியிருக்கோம்” என்று லாஜிக்காக சொல்கிறார்கள். 

கருத்து கண்ணம்மா

சரி, பெண்கள் உரிமையைப் பேசும் இந்த மீம்களையும் ‘ட்ரோல்’ செய்வார்களே...

“அது இல்லாமலா? இந்தப் பக்கத்தை நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் ‘ரேப்’ (Rape) செய்வோம் என நிறைய மிரட்டல்கள் வந்துட்டுத்தான் இருக்கு. அப்படி மெசேஜ் அனுப்புறவங்க பக்கத்தை நாங்க பிளாக் செஞ்சிடுவோம். சில மிரட்டல்களுக்கு எங்க ஃபாலோயர்ஸே பதில் சொல்வாங்க. இந்தச் சமுதாயம் கருத்தளவில்கூட இன்னும் முன்னேறாமல் இருக்கு என்பதற்கான வேதனையான உதாரணம் இது. நிச்சயமா சொல்றோம், நாங்க ஆண்களுக்கு எதிரியல்ல. பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க இங்கே ஆட்கள் குறைவா இருக்காங்க. அதுக்காகவே, இந்தப் பக்கத்தை நடத்திட்டு வர்றோம்” என்று ஸ்மைலி எமோஜி போட்டு முடிக்கிறார்கள் அந்தத் தோழிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்