வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (27/09/2017)

கடைசி தொடர்பு:11:12 (27/09/2017)

விஷமாகிப் போன நதியின் குடிநீர்… அதிகரிக்கும் குழந்தை இறப்புகள் மற்றும் கருச்சிதைவுகள்!

ந்த குட்டிப் பெண்ணிற்கு வயது ஏழு இருக்கலாம். உலக நடப்புகள் புரிந்தும் புரியாமலும் இருக்கும் ஒரு பருவம். அவள் கண்களில் பெருமழை; மனதில் இடி. தனக்குத் தம்பியோ, தங்கையோ பிறக்கப் போகிறது என்ற தன் பத்து மாதக் கனவை நொடியில், அதுவும் ஒற்றை வரியில் தகர்த்து எறிந்து விட்டார்கள் ஃபிளிண்ட் நகரின் மருத்துவர்கள். ஆம், குழந்தை இறந்தே பிறந்திருந்தது. காரணம்? குடிநீர்! 

ஃபிளிண்ட் நதி குடிநீர்

ஃபிளிண்ட் நகரம் தான் மிச்சிகனில் இருக்கும் ஜெனிசெ மாகாணத்தின் மிகப்பெரிய நகரம். வண்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருப்பதால் “வெஹிகிள் சிட்டி” (Vehicle City) என்று பெருமையோடு அழைக்கப்படும் இது, தற்போது மெதுவாக அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக மாறிக் கொண்டு வருகிறது. இதற்குக் காரணம், இங்கு அதிகரிக்கும் குழந்தை இறப்புகளும், கருச்சிதைவுகளும் தான்.

ஏப்ரல் 2014. ஊரில் கடும் தண்ணீர் பஞ்சம் வருகிறது. தொலைவில் இருக்கும் ஹூயுரான் ஏரியில் (Lake Huron) இருந்து தண்ணீர் எடுக்க ஒரு குழாய் திட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறது அரசு. அரசுத் திட்டங்கள் என்றாலே மெதுவாகத் தானே நடக்கும்? அமெரிக்கா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? எனவே, குழாய் திட்டம் கட்டிமுடிக்கப்படும் வரையில், பஞ்சத்தைப் போக்க அருகிலிருக்கும் ஃபிளிண்ட் நதியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யத் தொடங்கியது.

நதியின் நீரைப் பயன்படுத்திய மக்கள் பலர் முன்வைத்த புகார், நீர் ஆரோக்கியமான ஒன்றாக இல்லை என்பது தான். தண்ணீரில் இருந்து வரும் ஒரு வித நாற்றம் மற்றும் அதன் நிறம் அதில் ஏதோ நச்சு கலந்திருப்பதை உணர்த்தியது. ஆனால், அரசோ 2015-ம் ஆண்டின் போது, அந்த நீரினால் எதுவும் கெடுதல் ஏற்படாது என்று உறுதியாகக் கூறியது. மக்களின் வாயை அடக்கியது. பின்னர் ஃபிளிண்ட் அதிகாரிகளால் தொடர்ந்து செய்யப்பட்ட சோதனைகளில் நதி நீரில் பெருமளவில் ஈயம் (Lead) கலந்திருப்பது தெரிய வந்தது. அதுவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு வரையறுத்த அளவை விடப் பல மடங்கு அதிகமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர் ஆராய்ச்சியாளர்கள். 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆராய்ச்சியில் ஃபிளிண்ட் நகரக் குழந்தைகளின் உடம்பில், பெருமளவில் நச்சுத் தன்மை கொண்ட ஈயம் கலந்திருப்பதாக கண்டறியப்பட்டது. இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் ஆபத்து என நினைத்த அரசு, ஹூயுரான் ஏரியிலிருந்தே குடிநீர் பெற ஆவன செய்தது.

குடிநீர் விநியோகம்

படம்: REUTERS/Rebecca Cook

ஆனால், அதற்குள் ஃபிளிண்ட் நகரில் நிலைமை மோசமானதாக மாறிவிட்டிருந்தது. எண்ணிக்கைகளில் குறைந்த ஆரோக்கியமான கருக்கள், பிறந்தவுடனே இறக்கும் குழந்தைகள், மலட்டுத் தன்மை அடைந்த தம்பதிகள் என நீங்காத பிணி அந்நகரை ஆக்கிரமித்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வின் படி, அங்கே கடந்த நவம்பர் 2013 முதல் மார்ச் 2015 வரை இறந்த குழந்தைகளில் 198 முதல் 276 குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கலாம், அவர்கள் அந்த நச்சுத் தன்மை கொண்ட நீரைக் குடிக்காமல் இருந்திருந்தால்! இதன் காரணமாக, அக்டோபர் 2013 முதல் 2015-ம் ஆண்டின் இறுதி வரை கருவுறுதல் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது, குழந்தை இறப்புகள் அதிகமாகியுள்ளது. மற்ற மிச்சிகன் நகரங்களான லான்சிங், கிராண்ட் ரேபிட்ஸ், டீர்பார்ன் மற்றும் டெட்ராய்ட் போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஃபிளிண்ட் நகரில் அதிக அளவில் இந்த விகிதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2000 முதல் 2003 வரை, இதே போல் வாஷிங்டன் நகரிலும் கருவுறுதல் விகிதம் குறையத் தொடங்கியது. காரணம், குடிநீரில் இருந்த நச்சுத்தன்மை கொண்ட ஈயம். ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒரு பில்லியனுக்கு 15 பாகங்கள் வரை ஈயம் கலக்கலாம் என்று கூறி வந்தாலும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பின் படி, ஈயம் சிறிதளவு இருந்தாலே அது நச்சுத்தன்மை கொண்ட நீர் தான். ஈயம் என்றில்லை, தண்ணீரில் எந்த வகை மாசுப் பொருட்கள் கலந்தாலும் ஆபத்து தான். இதை உணர்ந்து அமெரிக்கா செயல்பட்டால் மட்டுமே, ஃபிளிண்ட் நகரம் போல் மற்ற நகரங்களை நரகங்கள் ஆக்காமல் இருக்க முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்