வடகொரியாவுக்குச் செக் வைத்த சீனா!

சீனாவில் செயல்பட்டு வரும் வடகொரிய நிறுவனங்கள் 120 நாள்கள் கெடுவுக்குள், தங்கள் நிறுவனங்களை மூடிவிட வேண்டும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையை மீறி தொடர்ச்சியான அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்து வருகின்றன. அதுவும், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன்னும் நேரடியாக ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில், வடகொரியா மீது ஐ.நா. சபை விதித்த பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தும் விதமாக தங்களுடைய நாட்டில் செயல்பட்டு வரும் வடகொரியா நிறுவனங்கள் 120 நாள்களுக்குள் மூடப்பட வேண்டும் என்று சீன அரசின் வர்த்தகத் துறை உத்தரவிட்டுள்ளது. உலக அரங்கில் வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடாக அறியப்படும் ஒரே நாடு சீனா மட்டுமே. ஆனால், ஐக்கிய நாடுகள் சபை விதித்த பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் சீன அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஒருமாத கால இடைவெளியில் தொடர்ச்சியாக 6-வது முறையாகக் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது. இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தீர்மானத்தை முன்மொழிந்தது. வடகொரியாவுக்கு பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதி, ஜவுளிப் பொருள்கள் ஏற்றுமதி உள்ளிட்டவைகளுக்குத் தடை விதிக்க வகைசெய்யும் அந்தத் தீர்மானம் ஐ.நா. அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!