வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (29/09/2017)

கடைசி தொடர்பு:18:50 (29/09/2017)

ஹபீஸ் சையதின் அரசியல் கட்சிக்குத் தடை விதிக்கப் பரிந்துரை!

மும்பை குண்டுவெடிப்பில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. 
 


இதுதொடர்பாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையத்துக்கு உள்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இரண்டு பக்கக் கடிதத்தில், ‘லஷ்கர் இ தாலிபா அமைப்புடன் இணைக்கப்பட்ட அதிகாரபூர்வ அரசியல் கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற மில்லி முஸ்லிம் லீக் கட்சியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் கட்சியாக மில்லி முஸ்லீம் லீக் கட்சியை அங்கீகரிப்பதை ஆதரிக்க முடியாது என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியதை பாகிஸ்தான் தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார்.  

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் 166 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக ஹபீஸ் சயீத் கருதப்படுகிறார். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர்கள் அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் வீட்டுச் சிறை வைக்கப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப் தகுதிநீக்கத்தால் காலியான லாகூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட மில்லி முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் 3-ஆவது இடம் பிடித்தார்.