நவம்பரில் ஆசிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிபர் ட்ரம்ப்: வடகொரியாவுக்கு எதிராகத் திட்டம்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வரும் நவம்பர் மாதம், தனது மனைவியுடன்ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, வடகொரியாவுக்கு எதிராக ஆசிய நாடுகளை ஒன்றிணைக்க ட்ரம்ப் திட்டம் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

ட்ரம்ப்

கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர்  மூளும் வாய்ப்புகள் அதிகமாகிவருகிறது. ஒரு கட்டத்தில், ’அமெரிக்கா போரை அறிவித்துவிட்டது, அதனால், நாங்களும் தாக்குதலுக்குத் தயார்’ என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அமெரிக்கா, நாங்கள் எந்த நாட்டின்மீதும் போர் அறிவிக்கவில்லை என மறுத்தது. 

உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டுவருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை முதலியவற்றை சோதனைசெய்து, உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது வடகொரியா. 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவியுடன் நவம்பர் மாதத் தொடக்கத்தில், ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3 முதல் 14 வரை ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிபர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் நடைபெறும் இரண்டு முக்கிய உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்தப் பயணத்தின் போது அவர், ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்ல இருக்கிறார். 

இந்தப் பயணத்தின்போது, ஆசிய நாடுகளை வடகொரியாவுக்கு எதிராக ஒன்றிணைக்கும் திட்டத்துடன் ட்ரம்ப் செல்வதாகக் கூறப்படுகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!