வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (30/09/2017)

கடைசி தொடர்பு:13:30 (30/09/2017)

எட்டு ஆண்டுகளாகப் பெண்கள் பிரிவில் வாக்களிக்கும் ட்ரம்ப் மருமகன்!

அமெரிக்க ஜனாதிபதியின் மருமகன், எட்டு ஆண்டுகளாகப் பெண்கள் பிரிவில் வாக்களித்து வந்தது குறித்து, சமீபத்தில் ஆதாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜாரெட் குஷ்னர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகனும் இவான்கா ட்ரம்ப்பின் கணவருமான ஜாரெட் குஷ்னர், அமெரிக்காவின் முன்னணிப் பணக்காரர்களுள் ஒருவர். ரியல் எஸ்டேட் தொழில், தினசரி நாளிதழ் வெளியீட்டாளர் எனப் பன்முகத் தன்மைகொண்ட குஷ்னர், தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், அவருக்கு நிகராகப் பல சர்ச்சைகளிலும் சிக்கிப் பிரபலமானவர், ஜாரெட் குஷ்னர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதாக எழுப்பப்பட்ட விவகாரத்தில், அதிக அளவில் அடிபட்ட பெயர், ஜாரெட் குஷ்னர். மேலும், வெள்ளை மாளிகை தொடர்பான அரசியல் அலுவல் தொடர்பான கோப்புகளை, அரசு மெயில்மூலம் அல்லாமல் தனி மெயில் மூலமாக அனுப்பியது எனப் பல குற்றச்சாட்டுகளில் சிக்கிவருகிறார் குஷ்னர்.

இந்நிலையில், இவர் எட்டு ஆண்டுகளாகப் பெண்கள் பிரிவில் வாக்களித்துவருகிறார் என்று அமெரிக்கப் பத்திரிகை ஒன்று தற்போது ஆதாரபூர்வமாக தகவல்களைச் செய்தியுடன் வெளியிட்டுள்ளது. இவரது வாக்காளர் விவரப் பட்டியலில், பெண் என்ற அடையாளத்துடனேயே வாக்களித்து வந்துள்ளார். மேலும் 2009-ம் ஆண்டுத் தேர்தலில், எந்தப் பிரிவிலும் இல்லாமல் இவரது பெயர் ’அடையாளம் தெரியாதோர்’ பட்டியலில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.