வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (01/10/2017)

கடைசி தொடர்பு:11:09 (02/10/2017)

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆங் சாங் சூகி படம் அகற்றம்!

மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரத்தில் ஆங் சாங் சூகி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அவரது புகைப்படத்தை அகற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆங் சாங் சூகி

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் தாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வருகிறார்கள். இதற்கு உலக நாடுகளிலிருந்து, ஐ.நா சபை வரை அனைவரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகராக இருப்பவர் ஆங் சாங் சூகி. இவர் தனது பட்டப்படிப்பை 1967-ம் ஆண்டு லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் நிறைவு செய்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் அமைந்திருக்கும் இக்கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்த ஆங் சாங் சூகியின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழுள்ள அந்தக் கல்லூரியில் 1999-ம் ஆண்டு முதல் சூகியின் புகைப்படம் இடம்பெற்று வருகிறது.

மேலும், சூகி நோபல் பரிசு வென்றவுடன் இக்கல்லூரி அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து கௌரவப்படுத்தியது. ஆனால், தற்போது மியான்மரில் பாதிக்கப்பட்டு தவித்துவரும் ரோஹிங்யா மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த சூகியின் புகைப்படத்தை கல்லூரி நிர்வாகத்தினர் அகற்றியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. ஆனால், கல்லூரி நிர்வாகமோ, புதிய புகைப்படங்கள் வைக்க உள்ளதால்தான் அகற்றினோம் எனக் காரணம் கூறியுள்ளனர்.