Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“உங்கள் பரிசு நிறவெறியைத் தூண்டுகிறது!” - டிரம்ப் மனைவியின் அன்பளிப்பை நிராகரித்த நூலகி

ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப், அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் ஒரு சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பள்ளிக்கு டாக்டர் சூஸ் (Dr. Seuss) புத்தகங்களை பரிசாக வழங்கி வருகிறார். மாகாண அளவிலும், அந்நாட்டு தேசிய அளவிலும் விருதுகள் பெற்று சிறப்பாகச் செயல்படும் பள்ளிகள் என்ற அடிப்படையில் அந்தப் பள்ளிகளை மெலனியா தேர்வு செய்கிறார்.

இந்தத் திட்டத்தை செப்டம்பர் 6-ம் தேதி அன்று, #ReadABookDay என்ற ஹேஷ்டேக்குடன் அவர் தொடங்கியுள்ளார். ஒவ்வொரு மாகாணத்திலும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பி வருகிறார்.

"Because a Little Bug went KaChoo, 
What Pet Should I Get?, 
The Cat in the Hat, 
One Fish, Two Fish, Red fish, Blue Fish, 
Green eggs and Ham, 
Oh, the places you'll Go, 
Seuss-isms,
I can't Read with my eyes shut, 
The Foot book, 
Wacky Wednesday by theo LerSieg" ஆகிய புத்தகங்கள் அவற்றில் இடம்பெற்றிருந்தன.

மெலனியாவின் இந்தப் பரிசை 'கேம்ப்ரிட்ஜ் போர்ட்' பள்ளி நிராகரித்துவிட்டது. இந்தப் பள்ளியின் நூலகர் லிஸ் பிலிப்ஸ் சொய்ரோ எனும் பெண்மணி, புத்தகத்தை நிராகரிப்பதாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதற்கான காரணத்தையும் அவர், மெலனியா ட்ரம்புக்கு கடிதமாக எழுதியுள்ளார். அதில், ''ஒரு ஃபர்ஸ்ட் லேடியாக உங்களுக்கு எல்லா வளங்களுமே இருக்கும். ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்து தர நிறைய பேர் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால், நீங்கள் அனுப்பிய டாக்டர் சூஸின் புத்தகங்கள் நிறவெறியைத் தூண்டுபவையாக உள்ளன. மேலும், அதில் இடம்பெற்றுள்ள கார்ட்டூன்களும், புகைப்படங்களும் குழந்தைகளைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. அதனால் இந்தப் புத்தங்களை நாங்கள் நிராகரிக்கிறோம். அதோடு இந்தப் புத்தகங்கள் எங்களுக்கு தேவையில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி "ட்ரம்பின் நிர்வாகத்தில் குறைவான நிதி வழங்கப்படும் பள்ளிகள், வசதிகளற்ற பள்ளிகளுக்கு ஏன் மெலனியா உதவக்கூடாது? நீங்களும் உங்கள் கணவரும் நேரடியாகக் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் இடத்தில் இருக்கிறீர்கள். அவர்கள் கற்றலுக்கு உதவும் செயல்களைச் செய்யுங்கள்" என்றும் அந்த நூலகர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், ''இதுமாதிரியான பதில் எதிர்பாரதவிதமாக உள்ளது. இந்த விஷயத்தை சொய்ரோ அரசியலாக்க முற்படுகிறார். குழந்தைகளுக்கு எந்தளவுக்கு முடியுமோ, அந்த அளவு உதவிகளை மெலனியா செய்துவருகிறார். அதில் ஒன்றுதான் இந்தப் புத்தகங்களை அனுப்பியதும். இதன் மீதான விமர்சனங்கள் எழுந்தாலும் மெலனியா தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார். தவிர, டிரம்பின் மகன் பாரோன் ட்ரம்ப், 11 வயதில் இருந்தபோது அவரும், மெலனியாவும் இந்தப் புத்தகங்களைப் படித்துள்ளனர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறவெறியை ஆதரிக்கிறார்' என்ற குற்றச்சாட்டு அவர் மீது ஏற்கெனவே இருந்துவருகிறது. மேலும், "புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்காவில் இருக்கத் தடை", "குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை" என டிரம்ப்-ன் அதிரடி நடவடிக்கைகள் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் பள்ளி நூலகர் ஒருவர், மெலனியா அளித்த புத்தகங்களை ஏற்க மறுத்து, அவற்றை நிராகரித்திருப்பது அதிபர் மற்றும் அவரின் மனைவி மெலனியா ஆகியோருக்கு எதிரான சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவர என்ன செய்யப்போகிறார் ட்ரம்ப்....?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement