ஈர்ப்புவிசை அலைகள் இருப்பை உறுதி செய்த 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!

ஈர்ப்புவிசை அலைகள் இருப்பை உறுதி செய்த ஜெர்மனியைச் சேர்ந்த ரெய்னர் வைஸ், அமெரிக்காவைச் சேர்ந்த பேரி சி.போரிஸ் மற்றும் கிப்.எஸ்.த்ரோன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Photo Credit: Nobelprize.org


இவர்களில் ரெய்னர் வைஸுக்குப் பரிசுத் தொகையில் பாதியும், மற்ற இருவர்களுக்குப் பாதியும் பிரித்து வழங்கப்படும் என்று நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது. இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டறிந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்புவிசை அலைகளின் இருப்பை உறுதி செய்ததுக்காக விஞ்ஞானிகள் மூவருக்கும் 2017-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் ஈர்ப்புவிசை அலைகள் இருப்பதாக ஐன்ஸ்டீன் ஊகித்த நூற்றாண்டுக்குப் பின்னர், முதல்முறையாக ஈர்ப்புவிசை அலைகளை அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையம் உணர்ந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ல் அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள லீகோ எனும் ஈர்ப்புவிசை ஆய்வகம் முதல்முறையாக பிரபஞ்சத்திலிருந்து வெளியான ஈர்ப்புவிசை அலைகளை உணர்ந்தது. இந்த ஈர்ப்புவிசையானது பிரபஞ்சத்தில் உள்ள இரு கருந்துளைகள் மோதியதால் ஏற்பட்டதாகவும், அது பூமிக்கு வந்தபோது மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறினர். வானியல் இயற்பியலில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் ஈர்ப்புவிசை அலைகளின் இருப்பைக் கண்டறிவதற்காக அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள லீகோ (the Laser Interferometer Gravitational-Wave Observatory) என்ற ஆய்வகம், 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது. ஐன்ஸ்டீன் கூறிய பிரபஞ்சத்தின் ஈர்ப்பு அலைகளைக் கண்டறியும் நோக்கத்துடன் அந்த ஆய்வகம் அமைக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!