’கட்டலோனியா பொதுவாக்கெடுப்பு சட்ட விரோதமானது’: ஸ்பெயின் மன்னர்

ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான கட்டலோனியா, தனிநாடு கோரிக்கையை முன்வைத்து நடத்திய வாக்கெடுப்பு சட்ட விரோதமானது என ஸ்பெயின் மன்னர் ஆறாம் ஃபிலிப் தெரிவித்துள்ளார்.

catalonia

ஸ்பெயின் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை வைத்துவந்தது. ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெயின் அரசாங்கம், இவர்களது கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசு, தனிநாடுகுறித்து பொது வாக்கெடுப்பு நடத்துவது என முடிவுசெய்தது.

ஆனால் ஸ்பெயின் அரசு, பொது வாக்கெடுப்பு நடத்தக்கூடாது எனத் தடை விதித்தது. ஆனால், கட்டலோனிய அரசு தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்துவோம் என்றது. இதையடுத்து, நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் ஸ்பெயின் அரசு, காவல்துறைமூலம் முடக்க, வாக்களிக்க வந்தவர்கள்மீது தாக்குதல் நடத்தியது. வாக்கெடுப்பில், 90 சதவிகித கட்டலோனிய மக்கள், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளதாக மாநில அரசு அறிவித்தது.

இதுகுறித்து ஸ்பெயின் மன்னர் ஆறாம் ஃபிலிப் கூறுகையில், “கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்காக அந்த மாநிலம் நடத்திய பொது வாக்கெடுப்பு முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த விவகாரம் தற்போது ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இதுபோன்றதொரு சூழ்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்’ எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!