வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (05/10/2017)

கடைசி தொடர்பு:13:23 (05/10/2017)

மிஸ்டர் ட்ரம்ப், இவ்வளவு மோசமான விஷயத்தை எப்படி உங்களால் செய்ய முடிகிறது?

ட்ரம்ப்

அமெரிக்காவில் கடும் சூறாவளிப் புயல் தாக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். சூறாவளி தாக்கியதில் பாதிக்கப்பட்ட பல நகரங்களில் போர்ட்டோ ரிக்காவும் ஒன்று. தீவுப்பகுதியான இது, அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்பகுதியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பார்வையிட்டுள்ளார். ஆனால், இந்தப் பயணம் போர்ட்டோ ரிக்கா மக்களுக்கு மிகப்பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியதுடன், அமெரிக்க அரசாங்கத்தால் தாங்கள் புறக்கணிக்கப்படுவது போன்ற மனநிலையை உருவாக்கியுள்ளது. ட்ரம்பின் செயல் அப்பகுதி மக்களை மிகவும் வருத்தம் அடையச் செய்துள்ளது. 

போர்ட்டோ ரிக்காவில் பேசிய ட்ரம்ப் தெரிவித்த வார்த்தைகள் அப்பகுதி மக்களை மிகவும் காயப்படுத்தியும் உள்ளது. சூறாவளிப் புயலின் காரணமாக அந்தப் பகுதியில் 16 பேர் உயிரிழந்தனர். ட்ரம்ப் பேசுகையில், "கடந்த 2005-ம் ஆண்டு தாக்கிய புயலைக் காட்டிலும், தற்போது வீசிய புயல் சற்றே வீரியம் குறைவுதான். அப்போதைய சூறாவளிப் புயலில் சிக்கி மொத்தம் ஆயிரத்து 833 பேர் உயிரிழந்தனர். அந்தப் புயலை விடவும் இது எவ்வளவோ பரவாயில்லை" என்று குறிப்பிட்டார். ஆனால், போர்ட்டோ ரிக்கா மக்களோ, "இப்போதைய சூறாவளிதான் மிகப்பெரிய பேரழிவு" என்று குறிப்பிடுகின்றனர். மேலும் போர்ட்டோ ரிக்காவுக்கான அமெரிக்க அரசின் பட்ஜெட் திருப்தியளிப்பதாக இல்லை என்ற கருத்தையும் ட்ரம்ப் முன்னிலையிலேயே அந்த மக்கள் முன் வைத்தனர்.

மேலும் "போர்ட்டோ ரிக்கா பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்" என சர்க்கரையான வார்த்தைகளை டிரம்ப் உதிர்த்தபோதிலும் அப்பகுதி மக்களை அவர் மிகவும் காயப்படுத்தினார் என்பதுதான் உண்மை. ட்ரம்பின் பேச்சு பற்றி அப்பகுதியைச் சேர்ந்த மேயர் க்ருஸ் கூறுகையில், "அதிபர் ட்ரம்ப் போர்ட்டோ ரிக்கா மக்களின் துயரத்துக்கு கண்டிப்பாக பதிலளித்தாக வேண்டும். அவர் நாட்டை ஆள்பவர் என்ற நிலையைத் தாண்டி, தவறான கருத்துகளை மக்கள் மத்தியில் பேசுபவராக இருக்கிறார்" என்று குறிபிட்டுள்ளார்.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் க்ரூஸ், ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்தும், போர்டோ ரிக்காவுக்குத் தேவையான அனைத்தையும் அமெரிக்க அரசு செய்து தரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், போர்ட்டோ ரிக்காவைப் பொறுத்தவரை நாங்கள் மற்ற பகுதிகளைப் போன்று, அந்தப் பகுதியிலும் சிறப்பாகத்தான் செயல்படுகிறோம் என்றார்.

இந்நிலையில், சான் ஜூவான் சர்ச் அருகே பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார் ட்ரம்ப். அவற்றை வழங்கிய விதம் போர்ட்டோ ரிக்கா மக்களை மேலும் கொதித்தெழச் செய்துள்ளது. அவர்கள், ''இரண்டாம்தர மக்களாக எங்களை டிரம்ப் எண்ணுகிறார். அவர் ஒரு சாத்தான்'' என விமர்சித்துள்ளனர். "அமெரிக்க அதிபரின் இதுபோன்ற போக்கு, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும்" என்று மக்கள் மனம் வருந்தியுள்ளனர். 

 

 

நிவாரணப் பொருள்களை மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் ட்ரம்ப் தூக்கியெறிந்த சம்பவம், மக்களை பெரும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. துணிகள், டவல் போன்றவற்றை ட்ரம்ப் தூக்கி எறிவது போன்று பதிவான வீடியோ காட்சிகளைப் பார்த்து மக்கள், மனம் வெதும்பிப் போயுள்ளனர்.  ட்ரம்ப்பின் இத்தகைய செயல்கள், அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபரின் மோசமான செயல்களில் டிரம்பின் இந்த செயலும் இடம்பெறும் என்கிற அளவில் உள்ளது. 

அமெரிக்காவின் ப்ளாக் ஃபீட் பகுதி மக்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ள நிலையில், அதுபற்றி ட்ரம்ப் அரசாங்கம், ஏதும் கண்டுகொள்ளவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் போர்ட்டோ ரிக்கா மக்களும் அதிபருக்கு எதிரான விமர்சனங்களை வைத்திருப்பது ஒட்டுமொத்த அமெரிக்கர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 
நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், தன்னார்வலர்கள் வழங்கும் நிவாரண உதவிப் பொருள்களில்  ஸ்டிக்கர்களைத் தான் ஒட்டினார்கள். அமெரிக்க அதிபரைப் போன்று அவற்றை தூக்கி வீசவில்லை. 

இந்தச் சூழல்களை எல்லாம் அறியும்போது, "ட்ரம்ப் அவர்களே, ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் நீங்கள்தான் அதிபர் என்பதை மறந்து விடாதீர்கள்; ட்விட்டரில் மட்டுமே பதிவிட்டுக் கொண்டிருக்காமல், பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையையும் அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்" என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.


டிரெண்டிங் @ விகடன்