Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாடர்ன் உலகின் முதல் துப்பறிவாளன் ஆலன் போ..! நினைவுதினப் பகிர்வு

சிறுவர் இலக்கியம் / காமிக்ஸ்,  மர்ம நாவல், தீவிர இலக்கிய வாசிப்பு... இவைதாம் நாம் அனைவருமே பின்பற்றும் பாதை. இதில், தீவிர வாசிப்புப் பழக்கத்தை பெருமளவில் பரவச் செய்ததில் `பல்ப் ஃபிக்‌ஷன்' என அழைக்கப்படும் மர்ம நாவல்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இதைப் பற்றி இரண்டு கேள்விகளை முன்வைத்து இந்தக் கட்டுரையை ஆரம்பிப்போம்.ஆலன் போ

  • சமகால உலகின் முதல் துப்பறியும் நாவலை எழுதியவர் யார்?
  • எழுதுவதையே தனது முழு நேரத் தொழிலாகக்கொண்ட உலகின் முதல் எழுத்தாளர் யார்?

அறிவியல் புதினங்களை வெகுஜன ரசனையோடு மக்களிடையே கொண்டுசேர்த்தவர்களில் முதன்மையானவரான எட்கர் ஆலன் போ(வ்)தான், இந்தப் பெருமைகளுக்கெல்லாம் உரியவர். இது மட்டுமல்ல,

  • திகில் கதைகளின் மன்னன்,
  • சிறுகதை என்ற எழுத்து வகையைப் பிரபலப்படுத்தியவர்,
  • கதை, கவிதைகளை நேர்மையாக, துணிவாக விமர்சிப்பவர்

என்றெல்லாம் இவரைக் கொண்டாடுகிறார்கள். நமக்கெல்லாம் நன்று அறிமுகமான ஷெர்லாக் ஹோம்ஸ் உருவாக அடிப்படைக் காரணமாக இருந்தது, ஆலன் போ(வ்) உருவாக்கிய உலகின் முதல் துப்பறிவாளரான `சி அகஸ்டே டுபான்' தான்.

எட்கர் ஆலன் போ(வ்): அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 1809-ம் ஆண்டு பிறந்த எட்கரின் தாய்-தந்தை இருவருமே தொழில்முறை நடிகர்கள். ஒரு வயதில் தந்தை குடும்பத்தைவிட்டுப் பிரிய, தன் இரண்டாவது வயதில் தாயைப் பறிகொடுத்தார் எட்கர். பிறகு, இவர் ஜான் மற்றும் பிரான்சஸ் ஆலனின் பாதுகாப்பில் வளர ஆரம்பித்தார். சுமுகமான வாழ்க்கை என்பது எட்கருக்கு அமையவே இல்லை. கொடுமையான சூழலில் வளர்ந்து, பணப் பிரச்னையால் கல்லூரிப் படிப்பை முதலாம் ஆண்டிலேயே கைவிட்டு, துயரத்தின் நிழலிலேயே வாழ்ந்தார். தன் 18-வது வயதில் முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்தார். அதன் பிறகு, வேறு வேலைகளில் ஈடுபடாமல் எழுதுவதையே முழுநேரத் தொழிலாக்கிக்கொண்டார்.

வாழ்நாள் முழுவதும் சிரமத்தை மட்டுமே சந்தித்துவிட்டு, 1849-ம் ஆண்டில் தன்னுடைய 40-வது வயதில் இறந்த இவரின் எழுத்துகளில், ஆழமான சோகமும் அதீத குரோதமும் தெரியும். இவரது ஒவ்வொரு கதையுமே மிகவும் பிரபலம். அதில் ஒரே ஒரு கதையை மட்டும் விவாதிக்கலாம். 160 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும், அந்த ஒரு கதையின் மூலமாக அவரது வாழ்க்கையையும், அதில் நிறைந்திருந்த சோகத்தையும் புரிந்துகொள்ளலாம்.

`The Facts in the Case of M.Valdemar' கதைச் சுருக்கம்:

1845-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதியன்று வெளியான இந்தச் சிறுகதை, மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. Tuberculosis நோய் தாக்கப்பட்டு, மரணப்படுக்கையில் இருக்கும் எர்னஸ்ட் வால்டெமார் என்கிற எழுத்தாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரை மனோவசியப்படுத்துகிறார் அவரது நண்பரான மருத்துவர் ஒருவர்.

அந்தக் காலகட்டத்தில் சாகப்போகும் நபரை யாரும் மனோவசியப்படுத்தியதில்லை என்பதால், முறையாகக் சாட்சிகளுடன் அவரை மெஸ்மரிசம் செய்கிறார். மரணத்தின் வாயிலில் இருந்த வால்டெமாரை, மனோவசியத்தால் மூச்சுப் பேச்சில்லாமல் அடுத்த ஏழு மாதங்கள் வரை ஒருவிதமான திரிசங்கு நிலையில் தக்கவைக்கிறார் அந்த மருத்துவ நண்பர். பிறகு அவரை மறுபடியும் மனோவசியம் செய்து, பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார். ஆனால், மனோவசியத்திலிருந்து விடுபட்டு உயிருடன் திரும்பாமல் திட-திரவ கலவையாக சாம்பல்போலக் கரைந்துவிடுகிறார் வால்டெமார்.

ஆலன் போ

·  சாகப்போகும் ஒருவரை எதற்காக மனோவசியம் செய்து, அவரை சாகவும் விடாமல் வாழவும் விடாமல் வைத்திருக்க வேண்டும்?

·  இப்படிப்பட்ட குரூரமான சிந்தனையுள்ள கதையை எதற்கு ஆலன் போ(வ்) எழுதினார்?

·  இந்தத் திரிசங்கு நிலை கதைக்கான அவசியம் என்ன? இதன்மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்?

இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன், அச்சில் இந்தக் கதை முதன்முறையாக வெளியானபோது நடந்த சில சுவையான சம்பவங்களைச் சொல்லியே ஆகவேண்டும்.

இந்தக் கதையை முதலில் வெளியிட்டபோது, பலரும் இதை உண்மை என்றே நம்பினர். இதைப்போலவே சம்பவங்கள் நடந்ததாகவும், பலரை உயிர்ப்பித்ததாகவும் கதைகளைப் பரப்பத் தொடங்கினர். இதை Case Study ஆக எடுத்துக்கொண்டு தாமஸ் சவுத் என்பவர் ஒரு புத்தகத்தையே எழுதிவிட்டார்.

மக்கள் பலரும் இது உண்மையா? என்று ஆலன் போ(வ்)விடம் கேட்க, அவர் `இது ஒரு கட்டுக்கதை' என்று சொல்லிவிட்டார். `Daily Tribune' என்ற அமெரிக்கச் செய்தித்தாளின் எடிட்டர் Horace Greeley, இது உண்மையல்ல என்று தன்னுடைய தினசரியில் செய்தி வெளியிட்ட பிறகுதான் பெரும்பான்மையான மக்கள் இது ஒரு புனைவு / கதை என்பதை ஒப்புக்கொண்டனர்.

இப்போது மேலே முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு வருவோம்.

ஆலன் போ

1845-ம் ஆண்டு இந்தக் கதையை எழுதும்போது, ஆலன் போ(வ்)வின் மனைவி இந்தக் கதையில் வரும் வால்டெமாரைப்போல Tuberculosis நோயால் பாதிக்கப்பட்டு, நான்கு வருடங்களாகத் தொடர்ந்து படுக்கையிலேயே தன் வாழ்க்கையைக் கழித்துவந்தார். தன்னுடைய மனைவிமேல் தீராக்காதல் கொண்டிருந்த ஆலன் போ(வ்), அவரை எப்படியாவது காப்பாற்ற முடியுமா எனச் சிந்தித்துக்கொண்டிருந்தபோது (1845) எழுதியதே இந்தக் கதை.

நம் அன்புக்குரியவர்கள் மரணமடையப்போகிறார்கள் என்பது நிச்சயமானால், அவரைக் காப்பாற்ற எந்த அளவுக்கும் மனிதர்கள் துணிவார்கள். இதற்கு எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல என்பதை, ஆலன் போ(வ்) இந்தக் கதையின் மூலம் நிரூபித்துள்ளார். நிஜ வாழ்வில் தன் மனைவியைக் காப்பாற்ற என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்ட போ(வ்), கடைசியில் தன் புனைவிலாவது இப்படியொரு முயற்சியை மேற்கொள்ளலாமா என்று எழுதியதுதான் இந்தக் கதை.

சில பின்குறிப்புகள்:

·  ஆலன் போ(வ்)வுக்குத் திருமணம் நடந்தபோது அவருக்கு 27 வயது.  அவருடைய மனைவிக்கு வயது 13. இந்தக் கதை எழுதி, இரண்டு ஆண்டுகளில் (1847-ம் ஆண்டில்) மனைவி இறக்கும்போது அவரது வயது 24.

·  இந்தக் கதையை முழுவதுமாக ஆங்கிலத்தில் படிக்க, இங்கே க்ளிக்கவும். http://www.eapoe.org/works/tales/vldmard.htm

·  பிரபல ஹாலிவுட் இயக்குநர் George A Romero இந்தக் கதையை திரைப்படமாகவும் இயக்கியுள்ளார் (1990 – Two Evil Eyes).

·  1841-ம் ஆண்டில் எட்கர் ஆல்ன் போ(வ்) எழுதிய முதல் துப்பறியும் கதையைப் படிக்க, இங்கே க்ளிக்கவும் https://poestories.com/text.php?file=murders

·  இந்தக் கதையில்தான் உலகின் முதல் டிடெக்டிவ் ஆன `சி அகஸ்டே டுபான்' அறிமுகமாகிறார்.

இன்று, எட்கர் ஆலன் போ(வ்)வின் 170-வது நினைவு நாள். அவருக்கு அஞ்சலி!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement