‘ஆப்பிரிக்க நாட்டுப்புற இசை, தமிழ் நாட்டுப்புற இசைபோலவே இருக்கு!’ - தர்புகா சிவா | African and Mexican music are same as Tamil Folk music

வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (10/10/2017)

கடைசி தொடர்பு:08:25 (10/10/2017)

‘ஆப்பிரிக்க நாட்டுப்புற இசை, தமிழ் நாட்டுப்புற இசைபோலவே இருக்கு!’ - தர்புகா சிவா

அமெரிக்க அமைச்சகத்தின் கல்வி மற்றும் கலாசாரத் துறை, உலக அளவிலும் உள்ளூர் அளவிலும் சிறப்புமிக்க இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து `ஒன்பீட்' என்ற பெயரில் கூட்டுத்திட்டத்தை நடத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக 25-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை ஒன்றிணைத்து இசை நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்தியுள்ளது. `ஒன்பீட்' திட்டத்தைப்போலவே `டோஸ்டி இசைத் திட்டத்தை' பாகிஸ்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க இசைக்கலைஞர்களை ஒன்றிணைத்து ஒரு மாதத்துக்கான இசை நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்தியது. 

இந்த இரண்டு இசை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார் `கிடாரி' படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா. இவருடைய பயண அனுபவம் குறித்த நிகழ்ச்சி, கடந்த வாரம் சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் நடந்தது. சிவாவுடன் உரையாடினார் கலாசார நிகழ்ச்சி அதிகாரி ஏரிக். 

தமிழ்நாட்டுப்புற இசை

“நான் முழுநேரத் திரைப்படக் கலைஞராகவும், பகுதிநேர இசையமைப்பாளராகவும் இருக்கிறேன். சிறுவயதிலிருந்தே இசையைக் கேட்டும் ரசித்தும் கற்றுக்கொண்டேன். இதற்காக நான் எங்கும் பயிற்சி பெற்றதில்லை. நான் பிறந்தது மேற்குவங்கம் என்றாலும் வளர்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில்தான். இரண்டு தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இசை சார்ந்த பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டுவருகிறேன். 

மக்கள், புதுமையான இசையைக் கேட்க விரும்புகிறார்கள். திரைப்பட இசையமைப்பு குறித்தும், ஆல்பம், இசை நிகழ்ச்சிகள் குறித்தும் கேட்கிறார்கள். திரைப்படத்தின் இசையமைப்பாளராக இருக்கும்போது அந்தத் திரைப்பட இயக்குநர் எப்படிப்பட்ட இசையைச் சேர்க்க வேண்டும் எனச் சொல்கிறாரோ, அந்த இசையை மட்டுமே தர முடியும். ஆனால், தனிப்பட்ட முறையில் ஆல்பங்கள் செய்யும்போது இசையமைப்பாளரின் தனிப்பட்ட விருப்பங்களையும் இசையாகச் சேர்க்க முடியும்.

திரைப்பட இசையமைப்பு என்பது, பல்வேறு தளங்களையும் சரியான ஓர் இணைப்பின் மூலம் கோக்கப்பட வேண்டும். ஆனால், தனிப்பட்ட இசையமைப்பு அப்படிப்பட்டது அல்ல. தனி இசை நிகழ்ச்சிகள் நீண்டகால பயணத்துக்கான விஷயமே. தனி அடையாளமாக இருந்தாலும், சில சமயங்களில் இதர கலாசார விஷயங்களோடு இணைந்து செல்லவேண்டியது அவசியம். அதற்கு திறந்த மனம் வேண்டும்" என்று சொன்ன சிவா, அமெரிக்கப் பயண அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். 

“ஒன்பீட் நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகத்தின் இசைக்கும் உள்ளூர் இசைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிந்தது. மேலும், விதவிதமான கலாசாரப் பின்னணிகொண்டவர்களுடன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும், அவர்களது நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பகிர்ந்துகொண்டதும் சிறந்த அனுபவமாக இருந்தது. பல்வேறு மொழிகள் பேசும் 25 இசைக்கலைஞர்களுடன் ஒன்றிணைந்து இசை நிகழ்ச்சியில் இசையின் வழியே பேசிக்கொண்டது வித்தியாசமான அனுபவம்தான். 

இந்தப் பயணம், வெளிநாட்டு இசைக்கலைஞர்களின் வாழ்க்கை முறையையும் இசைக்கலையையும் நேரில் கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருந்தது. பொதுமக்கள், இசையின் மூலம் எளிதாக இணைகிறார்கள். எங்களது குழுவில் கலந்துகொண்ட லெபானான் என்கிற பெண் இசைக்கலைஞர், தன் இசைப் படைப்புக்குக் குறிப்பிட்ட இடமும் அமைதியும் இருக்க வேண்டும் எனப் பேசி யோசிக்கவைத்தார். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலிருந்து வந்திருந்த இசைக்கலைஞர்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியபோது, அது தமிழ்நாட்டு நாட்டுப்புறப் பாடல்களின் சாயலிலேயே இருப்பதை உணர முடிந்தது. மெக்ஸிகோ இசையும் தமிழ் இசையையே பிரதிபலித்தது. 

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகர், இசை ப்ரியர்களுக்கான இடம். அங்கு இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நல்ல நண்பர்களுடன் எதிர்காலத்தில் இணைந்து வணிகரீதியான திட்டப்பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

தமிழ் நாட்டுப்புற இசை

டோஸ்டி திட்டத்தில் அமெரிக்கா, பாகிஸ்தான் நாட்டு இசைக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டது நல்ல வாய்ப்பு. பாகிஸ்தான் நாட்டு இசைக்கலைஞர்களின் கலாசாரத்தையும், அவர்களின் வாழ்க்கைமுறை, திரைப்படங்களில் இசையமைக்கும் பணி போன்றவற்றையும் நேரிடையாக அவர்களுடன் உரையாடிக் கேட்டுத் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது. பாகிஸ்தான் இசைக்கலைஞர்கள் இந்திய இசையைப்போல் இசைக்கிறார்கள். இந்தியாவின் பின்னணி இவர்களுக்குள் இருப்பதை இசைக்கலையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. இவர்களோடு அமெரிக்காவில் ஃபுளோரிடாவிலும் அட்லாண்டாவிலும் இரண்டு வாரங்கள் தங்கி இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோம். நல்ல அனுபவமாக இருந்தது" என்று மகிழ்ச்சியோடு தனது இசைப்பயண அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் தர்புகா சிவா.


டிரெண்டிங் @ விகடன்