வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (10/10/2017)

கடைசி தொடர்பு:16:30 (10/10/2017)

யார் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி?: ஊடகம் வழியாகச் சண்டைபோட்ட ட்ரம்பின் மனைவிகள்

ஃபர்ஸ்ட் லேடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சர்ச்சைகளும் பின்னிப் பிணைந்தவையாக  அமெரிக்க அதிபராகப் போட்டியிடும்போதிலிருந்தே இருந்துவருகிறது. ட்ரம்ப் தற்போது தன்னுடைய மூன்றாவது மனைவி மெலானியாவுடன் வெள்ளை மாளிகையில் வசித்துவருகிறார். இந்நிலையில், ட்ரம்பின் முதல் மனைவி இவானா, ’ரைசிங் ட்ரம்ப்’ (Raising Trump) என்ற புத்தகத்தில், தன்னுடைய மூன்று குழந்தைகள் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். 

இந்தப் புத்தகம் குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் வெள்ளை மாளிகைக்குத் தொடர்புகொள்ள நேரடி தொலைபேசி எண் இருப்பதாகவும், ஆனால், அங்கு மெலானியா இருப்பதால் அவர்களுக்குள் எந்தப் பொறாமை உணர்வையும் சர்ச்சையையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும், ஏனெனில் தான் ட்ரம்ப்பின் முதல் மனைவி என்றும் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி என்றும் குறிப்பிட்டு இருந்தார். அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர்களின் மனைவியை ஃபர்ஸ்ட் லேடி என்று அழைப்பது வழக்கம். இப்படி அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவானா பேசியது  சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், மெலானியா அவரது செய்தித்தொடர்பாளர் மூலம், இந்தச் சர்ச்சையான பேச்சுக்குப் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசி இருக்கும் மெலானியாவின் செய்தித்தொடர்பாளர் ஸ்டெஃபின் க்ரிஷ்ஷான், 'திருமதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையை ட்ரம்ப் மற்றும் பர்ரன்-க்கான (ட்ரம்ப்பின் இளைய மகன்) இல்லமாக மாற்றியிருக்கிறார். அவர் வாஷிங்டனில் வசிப்பதை விரும்புகிறார். மேலும், அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடியாக இருப்பதில் பெருமைகொள்கிறார். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு உதவ நினைக்கிறாரே தவிர, புத்தகத்தை விற்க முயற்சி செய்யவில்லை’ என்று கூறியிருக்கிறார்.