இந்தியாவுக்கு எதிராகப் போராடிய ராஜபக்‌ஷே மகன் கைது! | Mahinda Rajapaksa’s son arrested for anti-India stir

வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (11/10/2017)

கடைசி தொடர்பு:14:57 (11/10/2017)

இந்தியாவுக்கு எதிராகப் போராடிய ராஜபக்‌ஷே மகன் கைது!

இந்தியாவுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பிப் போராட்டம் நடத்திய இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே மகன் நமல் ராஜபக்‌ஷே உள்ளிட்ட ஆறு பேரை ஹம்பந்தொட்டா போலீஸார் கைதுசெய்தனர். 


ஹம்பந்தொட்டா பகுதியில் சீன அரசின் உதவியுடன் மாத்தளையில் ராஜபக்‌ஷே சர்வதேச விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை, வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விடுவதாகத் தகவல்கள் எழுந்தன. அந்த விமான நிலையத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கே இலங்கை அரசு குத்தகைக்கு விட உள்ளதாகக் கூறி ஹம்பந்தொட்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக நமல் ராஜபக்‌ஷே மற்றும் அவரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, இந்தியாவுக்கு எதிராக நமல் உள்ளிட்டோர் கோஷங்கள் எழுப்பினர். நீதிமன்றம் விதித்த தடையை மீறி போராட்டம் நடத்திய நமல் ராஜபக்‌ஷே உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மூன்று பேர் உள்பட  ஆறு பேரை ஹம்பந்தொட்டா போலீஸார் கைதுசெய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, வரும் 16-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நமலை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தைச் செல்லவிடாமல், சாலைகளில் டயர்களைக் கொளுத்தி அவரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.