வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (17/10/2017)

கடைசி தொடர்பு:13:10 (17/10/2017)

அச்சுறுத்தும் வடகொரியா... அசால்ட் காண்பிக்கும் அமெரிக்கா!

வடகொரியா, ஏவுகணைச் சோதனைகள்மூலம் தொடர்ந்து உலக நாடுகளுக்கு பதற்றம் அளித்துக்கொண்டிருக்கும் வேளையில், தென் கொரியாவுடன் இணைந்து கூட்டுக் கடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது அமெரிக்கா.

போர்க்கப்பல்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வடகொரியாவில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதனால், சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களைச் சம்பாதித்தது வடகொரியா. 

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியாமீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருள்படுத்தவேயில்லை. இந்நிலையில், உலக நாடுகள் பலவும் வடகொரியாமீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால், வடகொரியாவுக்கு அத்தியாவசியப் பொருள்கள், எரிபொருள்கள் உள்பட அனைத்து ஏற்றுமதிகளும் உலக நாடுகளால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் வகையில், தென்கொரியாவுடன் இணைந்து கூட்டுக் கடற்பயிற்சியைத் தொடங்கியுள்ளது அமெரிக்கா. இப்பயிற்சி, கொரிய தீபகற்பப் பகுதியில் நடப்பது வடகொரியாவுக்கு சவால்விடும் வகையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.