நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஆகிறார் 37 வயது ஜெசிந்தா ஆர்டர்ன்!

கடைசி நிமிட தள்ளுமுள்ளு, முடிவில்லாது 26 நாள்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள், இதற்கெல்லாம் பிறகு, நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன். இந்த முடிவு ஏற்பட அங்கே நிகழ்ந்த அரசியல் ஆட்டங்கள், நம் மாநிலத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது. கடந்த செப்டம்பர் மாதம், அங்கு நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.

நியூசிலாந்து ஜெசிந்தா ஆர்டர்ன்

படம்: Associated Press

மொத்தம் உள்ள 119 இடங்களில், 61 இடங்கள் கிடைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். அங்கு நடந்த கடைசி மூன்று தேர்தல்களிலும் வென்று, ஆட்சிசெய்துவரும் தேசிய கட்சிக்கு 56 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மற்றொரு கட்சியான தொழிலாளர் கட்சிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம்தான் தலைமை மாறியது. 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன் அந்தப் பெரிய பொறுப்பை ஏற்று, கட்சியை வழிநடத்தினார். பசுமைக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் களம் கண்ட அவரது கூட்டணிக்கு, 54 இடங்கள் மட்டுமே கிடைத்தன. நியூஸிலாந்து ஃபர்ஸ்ட் என்ற சிறிய கட்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி 9 இடங்களைப் பிடித்தது. மொத்தக் கவனமும் அதன்மேல் திரும்பியது. இந்தச் சிறிய கட்சி, எந்தப் பெரிய கட்சிக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்தக் கட்சியே ஆட்சிக் கட்டிலில் அமர முடியும் என்ற நிலை. 26 நாள்கள் இந்த இழுபறி தொடர்ந்தது.

இந்நிலையில், இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நியூஸிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி தனது ஆதரவைத் தொழிலாளர் கட்சிக்கு அளிப்பதாகவும் ஜெசிந்தா ஆர்டர்ன் பிரதமராக வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டணி ஆட்சி மலர்வதன்மூலம் தேசிய கட்சியின் 10 வருட ஆட்சி (கிட்டத்தட்ட) முடிவுக்குவருகிறது. நியூஸிலாந்து நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராகவிருக்கிறார் ஜெசிந்தா ஆர்டர்ன். துணைப் பிரதமராக, பசுமைக் கட்சியின் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் செயல்படுவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!