வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (23/10/2017)

கடைசி தொடர்பு:20:35 (23/10/2017)

மனதைக் கலங்கடித்த #MeToo கதைகள்! ஸ்தம்பித்த ட்விட்டர்

டந்த ஒரு மாதமாக உலகம் முழுக்க உச்சரிக்கப்படும் பெயர் ஹார்வி வின்ஸ்டன். ஹாலிவுட்டில் மிகப்பெரிய தயாரிப்பாளர். மிகப் பெரிய பட்ஜெட்டில் படங்கள் எடுப்பவர். ஆனால், கடந்த ஒரு மாதமாக வரும் அவரைப் பற்றிய செய்திகள், அவர் எடுத்த படம் பெரிய அளவில் ஓடியதால் அல்ல! அவரின் கீழ் வேலைப் பார்த்த பல பெண்கள், தாங்கள் அனுபவித்த பாலியல் சீண்டல்கள் பற்றியும், வன்முறையினைப் பற்றியும் கூறியிருந்தவை அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்திருந்தது. இது, உலகம் முழுவதும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹார்வி வின்ஸ்டன் அலுவலகப் பெண்களைப் போலவே பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டலைகளைச் சமூக ஊடகங்களில் எழுதத் தொடங்கினர். #MeToo என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு, அதனால் சமூக வலைதளங்கள் மொத்தமாய் ஸ்தம்பித்து நிற்கிறது என்றே சொல்லலாம். 

Metoo

சில பெண்கள் தங்களுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்டு, சர்வதேச பத்திரிகைகளில் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்முறைகளைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். அவற்றைப் படிக்கையில் பல பதிவுகள் கண் கலங்க வைப்பதாக இருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு சில:

வெளியே பேச பயந்தேன்

என்னுடைய முப்பது வயதை ஒட்டிய வருடங்களில், என்னுடைய பாஸ், ஒரு மேனேஜராக நியமித்தார். அதனால் நானும் அவரும் இணைந்தே பணியாற்ற வேண்டியிருந்தது. வேலை முடிவதற்கு இரவு தாமதமாகி விட்டது. அலுவலகத்தில் அவரும் நானும் மட்டுமே இருந்தோம். திடீரென என்னைக் கட்டிப் பிடிக்க முயற்சி செய்தார். நான் பயந்து எழுந்தேன். நான் சிறு வயதிலேயே இதுபோலப் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருந்தேன் என்பது அவருக்குத் தெரியாது. மீண்டும் என்னைக் கட்டிப்பிடிக்க முயன்றார். நான் பயந்து எழுந்து ஓடிவிட்டேன். மறுநாள், என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் வெளியே அதைச் சொல்லிவிடுவேனோ என்று அவர் கண்களில் அவ்வளவு பயம். எனக்கும் அதனை வெளியே சொன்னால் என்னுடைய வேலை பறிபோய் விடுமோ என்ற பயம் இருந்தது. எதுவுமே நடக்காதது போல, வேறோர் அலுவலகத்திற்கு மாற்றல் கிடைக்கும் வரை, இரண்டு வருடங்களுக்கு அதே அலுவலகத்தில் வேலை பார்த்தேன். 

ஆபாச ஜோக்குகளைச் சகிக்க வேண்டியதாய் இருந்தது

அந்த வேலையில், நான் சேர்ந்த புதிது. எங்கள் நிறுவனத்தின் சார்பாக ஒரு சிறிய பிரசன்டேஷன் செய்ய வேண்டியிருந்தது. என்னுடன் நான்கு ஆண்கள் MeTooவந்திருந்தார்கள்; என் முதலாளி உள்பட. அவரகள் தகவல் பரிமாற்றக் குழுவின் செய்தியில் பல ஆபாசக் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இதைப்பற்றி மற்ற இரண்டு சகப்பெண் தொழிலாளர்களிடம் கூறியபோது அவர்கள் எனக்கு ஹியூமர் சென்ஸ் இல்லை என்று கூறினார்கள். அந்த நான்கு ஆண்களும் இன்றைக்கு உயர் பதவிகளில் அப்படியே இருக்கிறார்கள். எனக்கு 7 வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் எது தவறோ அதை அப்போதே எதிர்த்து நிற்கச் சொல்லி அவளை வளர்க்கிறேன்.

புகார் அளித்து வேலையை விட்டேன்

அந்த அலுவலகத்தில் எல்லாமே நன்றாகவே சென்றது. ஆனால், எல்லாம் அந்த பாஸ் என்மீது தனிப்பட்ட அக்கறை காட்டும்வரைதான். என்னிடம் அவர் வேறுவிதத்தில் நடந்து கொண்டார். 'அந்த ஆள் அப்படித்தான்' என்பதை அலுவலக சகாக்கள் அறிந்தே வைத்திருந்தனர். இருப்பினும் யாரும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. நானும் என்னுடைய வேலையை இழக்க விரும்பவில்லை என்பதால், எதிர்த்துக் கேள்வி ஏதும் கேட்கவில்லை. கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒரு நாள், எல்லோருக்கும் போனஸ் வர எனக்கு மட்டும் வராமல் இருந்தது. பாதி போனஸை என்னிடம் கொடுத்து மீத போனஸ்ஸை அவருடன் நான் வெளியே சென்றால்தான் தருவேன் என்றார். அந்த போனஸை நான் மிகவும் எதிர்ப்பார்த்திருந்ததால், அவரிடம் சரி என்றேன். வெளியில் சென்றுவிட்டு விடைபெறும்போது, என்னை அணைக்கிறேன் என்ற பெயரில் தவறாக நடந்து கொண்டார். இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று அப்போதுதான் முடிவு செய்தேன். என்னுடன் வேலை பார்த்த மற்றொரு பெண்ணுக்கும் அதே பிரச்னை நடைபெற்றிருப்பதைக் கண்டறிந்து, அந்த ஆளைப்பற்றி இருவரும் ஒன்றாக இணைந்து நிர்வாகத்தில் புகார் அளித்தோம். பிறகு, நான் வேலையை விட்டு நின்றுவிட்டேன். ஆனால், அந்தப் பெண் இன்னும் அந்தக் கொடுமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குக் குற்றஉணர்ச்சியைக் கொடுக்கிறது.

 


டிரெண்டிங் @ விகடன்